அன்பென்பது பிரஞ்ஞை கடந்தது

கோவை விமான நிலையத்தில் ஒரு வசதி, விமானத்திலிருந்து இறங்கி தனிப் பேருந்தில் பயணித்து விமான நிலையத்திற்கு வர வேண்டாம். விமானம் விட்டு இறங்கி நடந்தே விமான நிலையம் வந்து பேக்கேஜ் கலெக்‌ஷன் பெல்ட்டிற்கு வந்து விடலாம்.

இன்று கோவையில் விமானத்திலிருந்து இறங்கும் போதே கண்ணை ஈர்த்தது ஒரு நிகழ்வு. இதே விமானத்தில்தான் வந்திருக்க வேண்டும் அவர்கள். கொஞ்சம் முன்னே இறங்கி வெளியேறியிருக்கிறார்கள்.

முதுகில் பையை மாட்டிக் கொண்டு நிற்கிறான் ஓர் இளைஞன். ஆரோக்கியமாகவே தெம்பாகவே இருக்கும் அவனுக்குக் கீழே உட்கார்ந்து அவனது ஷூவின் லேஸ்களைக் கட்டிவிட்டுக் கொண்டிருந்தாள் ஓர் இளம் பெண். செய்வதை செவ்வனே செய்பவளாக இயங்கிக் கொண்டிருந்தாள் அவள். ஒரு காலின் லேஸைக் கட்டி முடித்து விட்டு அடுத்த காலில் செயலாற்றிக் கொண்டிருந்தவளை கண்டு குவியம் பெற்றேன். எவரைப் பற்றியும் இடத்தைப் பற்றியும் பிரஞ்ஞையில்லை அவளுக்கு.

தந்தையாகிய நான் என் மகளுக்கு இதைச் செய்வேன். ஒரு தாய் தன் மகளுக்குச் செய்வாள். வயது முதிர்ந்த தாய்க்கோ தந்தைக்கோ பிள்ளைகள் குனிந்து செய்வார்கள். ‘இவள் இளம் பெண்!’ என்றெண்ணிய படியே நான் நெருங்குவதற்குள் அடுத்த ஷூவின் லேஸ்ஸை கட்டி முடித்து எழுந்து கைகோர்த்துக் கொண்டு எனக்கு முதுகுகள் காட்டிப் போய் விட்டனர்.

கோவையிலிருந்து பொள்ளாச்சிக்குக் காரில் பயணிக்கிறேன். அவர்கள் இருவரும் வந்து வந்து போகிறார்கள்.
ராமானுஜரின் சீடன் வில்லிதாசனின் கதை உள்ளத்தில் வந்து போகிறது.

வணக்கம் பொள்ளாச்சி!

– பரமன் பச்சைமுத்து
பொள்ளாச்சி
21.09.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *