சிங்க முக யாளி

காவிரிப்பூம்பட்டினத்தில் இறக்கி விட்டு் ‘பாவை மன்றம்’ முன்னே நின்று மாதவியை கலியன் ஆசிரியர் விளக்கிய போது, அரைக் கால்சட்டை அணிந்த மூன்றாம் வகுப்புப் பையனாகிய நான் அந்தச் சிலைகள் உயிர் பெற்று நிற்பதைப் போல் அதிசயித்தேன்.

கோவலனையும் சேரன் செங்குவட்டுவனையும் இளங்கோவடிகளையும் தொட்டு, ‘டாய் பரமன் தொடக்கூடாது!’ என்று இரண்டாம் வகுப்பு எண்ணாவரம் வாத்தியார் சொன்ன போது வெடுக்கென்று விரல்களை எடுத்த பின்பும், அவர்களோடெல்லாம் கைகுலுக்கியவனைப் போல் நான் கொண்டது பரம பூரிப்பு.

தலை விரி கோலமாய் பாண்டிய நெடுஞ்செழியனின் முன்னே கையில் சிலம்பேந்தி நின்ற கண்ணகியின் உக்கிரத்தைக் கண்டு பயந்து என் பின்னே ஒளிந்த ராமரை முன்னே இழுத்து முன்னே விட்டபோது என் விரல்களில் பட்ட அவனது உடற்சூடு இன்னும் என் விரல்களில் தெரிகிறது.
(கூடவே, பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போன, எண்ணெய் வழிய வகிடெடுத்து வாரிய தலையைக் கொண்ட அவன் முகமும் நினைவுக்கு வருகிறது)

கடற்காற்று முகத்திலறைய மணக்குடி பள்ளியின் மாணவர்களை வரிசையாக நிறுத்தி கடலைக் காட்டி கடல் கொண்ட காவிரிப்பூம்பட்டினம் நகரத்தைப் பற்றி ஆசிரியர் விளக்கியது இன்னும் என் உள்ளத்தின் க்ளவுட் ஸ்டோரேஜில் பதிந்திருக்கிறது.

பூம்புகாரில் அப்படியொரு கலை அமைப்புகளை ஏற்படுத்தி சுற்றுலாத்தலமாக மாற்றிய, பூம்புகார் மீது கொண்ட பற்றால் தன் திரைப்பட நிறுவனத்திற்கு ‘பூம்புகார் புரொடக்‌ஷன்’ என்று பெயர் சூட்டிய, தான் இறந்தால் சென்னைக் கடற்கரையிலல்ல பூம்புகார் கடற்கரையிலேயே தன்னைப் புதைக்க வேண்டும் என்று வெகு காலத்திற்கு சொல்லிக் கொண்டிருந்த கலைஞர் கருணாநிதி மீது, பூம்புகார் சங்கதிகளுக்காகவே எனக்கு கூடுதல் மரியாதை ஏற்பட்டது.

மணக்குடியின் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு அதன் அன்றைய ஆசிரியர்கள் தந்தது வெறும் இன்பச் சுற்றுலா அல்ல, மூன்றாவது வகுப்புப் படித்த எனக்கு உள்ளே ஊற்றை ஏற்படுத்தி வெளியே சிறகுகள் முளைக்க வைக்கும் முயற்சி. சிறு கிராமத்துப் பையனை பரந்து விரிந்த கடலின் முன்னே நிறுத்தி ஆழ்கடல் அதிசயங்களை அழகாக இறக்கிய ஆழமான முயற்சி். (அன்று எனக்கு அவர்கள் செய்ததையே இன்று மலர்ச்சி ‘அரும்புகள்’ ‘மொட்டுகள்’ வகுப்பின் வழியே பிள்ளைகளுக்கு நான் செய்ய முயற்சிக்கிறேன்)

இன்று செய்தித்தாள்களில், வற்றிக் கிடக்கும் தாமிரபரணியில் வெளிப்பட்ட கொற்கைப் பாண்டியனின் மண்டபங்களைக் காண வரி வரியாய் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களோடு வருவதையும், சிங்க முகம் கொண்ட யாளியை அவர்கள் வியந்து பார்ப்பதையும் காண்கையில் துள்ளிக் குதித்து மகிழ்கிறேன்.

இந்த ஆசிரியர்களும் பள்ளிகளும் மதிக்கப்பட வேண்டும். பாடங்களைத் தாண்டிக் கற்பிக்கும் ஆசிரியர்களாலேயே வாழ்க்கைக்குத் தயாராகிறோம் நாம். அத்தகைய ஆசிரியர்களுக்கு, மலர்ச்சி வணக்கம்.

– பரமன் பச்சைமுத்து,
திருவண்ணாமலை
22.09.2019

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *