இழந்ததை நினைத்து அல்ல, கிடைத்ததை நினைத்து…

08.20க்கு என் விமானம், 07.20க்கு நான் விமான நிலையத்தில் இருக்க வேண்டும். எனக்கு முந்தைய பேச்ணாளர்களால் நிகழ்ச்சி தாமதமாகி நான் என் மலர்ச்சி உரையை முடிப்பதும் குறித்த நேரம் தாண்டிப் போனது. நிகழ்ச்சி முடித்து என்னைக் காரிலேற்ற லீ மெரீடியனிலேயே 07.05 ஆகிவிட்டதால் அடித்துப் பிடித்து ஓட்டி வந்தார் டிரைவர்.

ஓடி வந்து போர்டிங் பாஸ் வாங்கி , செக்யூரிட்டி செக்கின்னில் நின்று ‘பெல்ட் கழட்டி வைக்கனுங்களா? ஷூ?’ என்று கேட்டு ,’ நோட்டுகளை நீட்டினா, ரூட்டு நான் மாறாதவன். என் பேரு மிஸ்டர் ரைட்டு…மிஸ்டர் ரைட்டு, என் பேச்சு ரொம்பக் கரெக்னு… ரொம்பக் கரெக்டு !’ என்று கூச்சமேயில்லாமல் பாடிக்கொண்டே பெல்ட்டைக் கழட்டி ட்ரேவில் வைத்தேன். எனக்கு முன்பாக ட்ரேவில் தன் ஜிகுஜிகு கைப்பையை வைத்த பெண்மணி, சத்தமாக நான் பாடியதைக் கண்டு என் பக்கம் திரும்பிப் பார்த்தார்.
நானும் அவரைப் பார்க்க… களுக்கென்று சிரித்து விட்டார்.
பளபளவென்று இருக்கும் அவர்….

ஐயோ….. நடிகை மீனா!

அவர் மகளிர் வரிசையில் சரசரவென்று தன் மகளோடும் அம்மாவோடும் போய் விட்டார். என் வரிசையில் முன்னே மூன்று பேர். மெட்டல் டிடெக்டரில் என் ப்ளாக் பெர்ரி சூட் பேண்ட் ‘க்கீங் க்கீங்’ என்று கத்த, அடுத்த ரவுண்ட் மீண்டும் சோதனை. கண் முன்னே மீனா பாதுகாப்பு சோதனை முடித்து மறைந்து கொண்டிருந்தார்.

ஃபோட்டோ இல்லையென்றாலும், ஒரு வளர்ச்சி மெகசினாவது தந்திருப்பேனே! பாதுகாப்பு சோதனை முடிந்து, ‘பேக் பேக்’கிற்கு காத்திருந்து ட்ரேயிலிருந்து ஃபோனை, பெல்ட்டை, ‘ஏர் பாட்’ஐ எடுத்து வருவதற்குள் எங்கோயோ போய் மறைந்து விட்டார் மீனா. யார் கண்டார் இதே சென்னை விமானத்தில் வந்தாலும் வரலாம்!

‘ச்சே… மீனாவோட ஒரு ஃபோட்டா எடுக்கல, மிஸ்ஸாயிடுச்சி!’ என்று காத்திருப்பு இருக்கையில் ஒருவர் புலம்பிக்கொண்டிருக்கிறார் யாரிடமோ ஃபோனில்.

சில நொடிகள் திரும்பிப் பார்த்து களுக்கென்று சிரித்ததை நினைத்து,
‘ஏய்… மீனாவையே திரும்பிப் பார்த்து சிரிக்க வைச்சவன்டா!’ என்று சொல்லிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன் நான்.

– பரமன் பச்சைமுத்து
கோவை விமான நிலையம்
09.10.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *