ஊருக்கே ஆரூடம் சொல்பவருக்கு, உலக நிதர்சனம் சொல்ல வேண்டியிருந்தது

‘இருவது நிமிஷத்துல நாலு பேருட்ட நாலு வாட்டி சொல்லிட்டேன். அதுக்கப்புறந்தான் தண்ணி தர்றீங்க. வந்து உக்காந்த உடனே தண்ணி வைக்கனும். அதுதான் சர்வீஸு. சாப்பாடு நல்லாருக்கு. காப்பி அருமை. ஆனா, தண்ணி தர மாட்றீங்க. முதல்ல ஒரு க்ளாஸ் தண்ணி தரனும்! முதல்ல தண்டி தம்ளர்ல…’

ஒரு வரியில் வெளிப்படுத்த வேண்டிய இந்த சங்கதியை ஒன்பதே முக்கால் வரிகளில் திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தவரைப் பார்க்கத் திரும்பினேன்.

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தின் உள்ளே இயங்கும் ஐடி உணவகத்தில் என் பக்கத்து டேபிளிலிருந்து அப்படிக் கேட்டுக் கொண்டிருந்தவர் தமிழகத்து நாளிதழ்களிலும் வார மாத இதழ்களிலும் ஆரூடம் பலன்கள் சொல்லும் பிரபல சோதிடர்.

‘யாரய்யா இவரு காலங்காத்தால இவ்ளோ சத்தம் உட்டுகிட்டு!’ என்ற வகையில் அனைவரும் அவரைப் பார்க்க, அடையாள அட்டை கழுத்தில் தொங்கியபடி சுரத்தே இல்லாமல் சமாளிப்பு சிரிப்போடு பல்லைக் கடித்துக் கொண்டு அவருக்கு முன் நின்று கொண்டிருந்தார் ஓர் ஊழியர்.

உலகிற்கே ஆரூடம் சொல்பவருக்கு உலகின் நிதர்சன வியாபார சந்தை ஆரூடம் சொல்வோம் என்ற முடிவுடன் அவர் பக்கம் திரும்பி சொன்னேன், ‘ தண்ணி தர மாட்டாங்க சார்’

‘அது தப்புல்ல!’ என்றார்.

‘அவங்களுக்கு அது பில் வால்யூ ரைஸ். எல்லா டேபிள்லயும் பாருங்க, ‘ஸ்மார்ட் வாட்டர்’ பாட்டில். நீங்க கேக்கற மாதிரி க்ளாஸ்ல தண்ணி குடுத்தா, அம்பது ரூவா பாட்டில் விக்காதே!’

திரும்பவும் ‘அது தப்புல்ல!’ என்பது மாதிரி பார்த்துக் கொண்டேயிருந்தவரைக் கடந்து விமானமேற நுழைவாயில் எண் ஆறு நோக்கி நடந்தேன் நான்.

– பரமன் பச்சைமுத்து
சென்னை விமான நிலையம்
09.10.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *