மின்பிம்பங்களுக்கு உயிர் தந்தவர், மின் எரியூட்டலுக்கு உடல் தந்துவிட்டார்!

K Balachander - Copy

K Balachander

 

நன்னிலம் பகுதியில் பிறந்தவர், நானிலம் போற்ற வாழ்ந்தவர், தமிழ் நிலம் தவிக்கப் போய்விட்டார்!

ஏஜீஸ் ஆஃபீஸில் நாடகத்தை தொடங்கியவர், நேற்று தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டார்.

பல பாத்திரங்களுக்கு வாழ்வளித்து ஏற்றிவிட்டவர், தன் பாத்திரங்களை மட்டும் உலகிற்கு விட்டுவிட்டு உலகை துறந்து விட்டார்.

காலத்தை மீறிய படங்களைத் தந்தவர்,

காலதேவனிடம் போய் சேர்ந்துவிட்டார்.

அடடா, மின்பிம்பங்களுக்கு உயிர் தந்தவர், மின் எரியூட்டலுக்கு உடல் தந்துவிட்டார்!

ஐயா, தமிழ் சினிமாவால் வாழும் இயக்குநர்கள் மத்தியில் தமிழ் சினிமாவை வாழ வைத்த இயக்குநரே!

வெறும் இருமல் சத்தத்தை வைத்தே முழு நீள பாத்திரம் பின்னியவரே, உங்களை அறிந்ததைவிட உங்கள் படங்கள் மூலம் அதிகம் அறிந்தேன்.

‘மாடி வீட்டு மாது’வும், எதிர்நீச்சலும், ‘வறுமையின் நிறம் சிவப்பு’ம் எனக்குக் கற்றுக்கொடுத்தது அதிகம்.

‘இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்து விட்டால், அவை இரண்டுக்கும் இடையில் பேதமென்ன’ ‘வாயில் என்ன மந்திரமா, மனசு என்ன எந்திரமா?’ ‘சந்தங்கள் நீயானால், சங்கீதம் நானாவேன்,’ என்று உன் திரைப்படத்துப் பாடல்கள் இன்றும் எங்களை சிந்தனை கொள்ளச் செய்கிறது.

படத்திற்கு முன்னே வள்ளுவனையும், படத்தின் நடுவே பாரதியையும் கொண்டுவருபவரே, போய் வாரும்!

KB 1

கமல்ஹாசன் என்றொருவனை ஆக்கித் தந்தாயே.

ரஜினி என்றோர் நட்சத்திரம் வார்த்தாயே.

ஏ ஆர் ரஹ்மானை தேடித் தந்தாயே!

வைரமுத்துவை ‘வாய்யா!’ என்று திருப்பிக் கொண்டுவந்தாயே

போதுமெங்களுக்கு, போய்வாரும் பொன்னுலகிற்கு!

 

உன் ‘தண்ணீர் தண்ணீர்’ரும், ‘அச்சமில்லை அச்சமில்லை’யும், ‘வறுமையின் நிறம் சிகப்பு’ம், ‘புன்னகை’யும், ‘எதிர் நீச்சல்’லும், ‘சர்வர் சுந்தரம்’மும், ‘ஸ்ருதி பேதம்’ கொண்ட ‘அபூர்வ ராகங்கள்’ளும்,

‘மரோ சரித்ரா’வும், ‘ஏக் துஜே கேலியே’வும் செல்லுலாய்டை சிறப்பிக்கும் என்றென்றும்.

 

நாகேஷ், கமல், ரஜினி, ப்ரகாஷ் ராஜ், விவேக் என நீ உருவாக்கிய நட்சத்திரங்களும், உன் படங்களும் உன் பெயர் சொல்லும் எப்போதும்.

‘வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும், இப்படிப் பங்களிக்க வேண்டும், இத்தனை பேரை உருவாக்கிவிட்டுப் போக வேண்டும்’ என்று பலரை நினைக்க வைத்துப் போனவனே, போய் வா!

 

உன் ஆன்மா சாந்தியடைய உன் கைலாசநாதரை வேண்டுகிறோம்!

 

பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *