அச்சம் தவிர், ஆளுமை கொள் – 1 : பரமன் பச்சைமுத்து

ஸ்க்ரீன் ஷாட் 1

பிரபல வாரப் பத்திரிகையில் வெளிவரும் தொடர்:

ஸ்க்ரீன் ஷாட் 1“படித்தால் மட்டும் போதுமா?”

சமர்ப்பணம்:

சிறுகச் சிறுகச் சேர்த்ததையெல்லாம் மொத்தமாய் கொட்டியும், விளைநிலங்களை விற்றும், வியர்வையோடு தங்கள் ரத்தத்தையும் தந்து தங்கள் சக்திக்கு மீறி தங்கள் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்துவிட்டு முன்னுக்கு வந்துவிடுவான் என்று காத்திருக்கும், தமிழகத்தின் தகப்பன்மார்களுக்கும், ‘ஆணிபோயி ஆவணி வந்தா என் புள்ள டாப்புல வருவான்,’ என கையில் கயிறு முடிந்து விரதமிருக்கும் தாய்மார்களுக்கும் சமர்ப்பணம்.

ஏன் இந்த தொடர்?

புரிந்தும் புரியாமலும், முட்டி மோதி எப்படியோ படித்து முடித்து வெளி உலகம் தன்னை கையிலேந்திக்கொள்ளும் என்ற கனவோடு வெளியில் வந்து எவ்வளவு முயற்சி செய்தாலும், எதுவும் கைகூடாமல் தன் கனவுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் காய்ந்து போகிறதே என்ற கவலையில் இருக்கும் நம் தமிழ் தேசத்து இளைஞர்களுக்கு, வெளிச்சம் காட்ட ஒரு சின்னத் தீக்குச்சி கொளுத்தும் முயற்சி.

ஒரு நிஜ சம்பவம்:

மனிதர்களை விட மரங்கள் அதிகம் வாழ்ந்திருந்த பெங்களூரூ நகரத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கணிபொறி வல்லுனராக நான் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம் அது. மிக நெருங்கிய நண்பர் ஒருவரின் உறவுக்காரப் பையன் ஒருவன் மனமொடிந்து கிடப்பதாகவும், பொறியியல் கல்லூரியில் கடைசி செமெஸ்டர் படிக்கும் அவனை நான் கவுன்சிலிங் செய்ய வேண்டுமென்றும் நண்பர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கோரமங்களா பகுதியில் இருந்த எனது அலுவலகத்தில் அவனை சந்திப்பதென்று முடிவு செய்து வரச்சொல்லி குறுஞ்செய்தி அனுப்பிக் காத்திருந்தேன். ‘அடப் போங்கையா, உலகத்தில எல்லாமே வேஸ்ட்! எதுக்கு வாழனும்?’ என்பதே அவன் எண்ணம் என்பது போல வந்தான் அவன். கலந்துரையாடியதில் அறிந்தது இதுதான்.

இன்னும் இரண்டு மாதங்களில் கல்லூரி முடிந்து விடும் என்ற நிலையில் கவலை தோய்ந்த முகத்துடன் வந்திருக்கும் அவன் பெயர் அருண். புறநகர்ப் பகுதியில் இருக்கும் ஒரு பெரும் கல்லூரியில் கணிப்பொறியியலின் கடைசி செமஸ்டரில் படிப்பவன். அருணின் உயிர்த்தோழன் கார்த்திக். கால்ச்சட்டைப் போட்டுத் திரிந்த காலம் முதல், கல்லூரி வரை ஒரே தெருவில் வளர்ந்து, ஒன்றாய் விளையாடி, ஒன்றாய் திரைப்படம் பார்த்து, ஒரே கல்லூரி, அதே வகுப்பு என்றே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நட்பை வளர்த்தவர்கள். கார்த்திக்கை விட, அருண் கொஞ்சம் நன்றாய்ப் படிப்பவன். இன்ஜினியரிங் மேத்தமேடிக்ஸும், கணிபொறியின் ‘ஸீ ப்ளஸும்’ கார்த்திக்குக்குப் புரியாத போது அவனுக்கு புரியும்படி சொல்லித் தருபவன். ‘ஒன்னாதான வளர்ந்தோம், படிச்சோம். ஒனக்கு மட்டும் எப்படிரா இப்படி படிப்பு வருது?’ என்று கார்த்திக்காலேயே பலமுறை பாராட்டப் பெற்றவன். அப்படிப்பட்ட அந்தக் அருண்தான் இன்று ‘நான் வாழ்ந்தா யாருக்கு லாபம், செத்தா யாருக்கு நஷ்டம்,’ என்று வசனம் பேசும் குணா படத்து கமல்ஹாசனைப் போல அமர்ந்திருந்தான்.

விஷயம் இதுதான். பிரபலமான கல்லூரிகளை நோக்கி புகழ்பெற்ற மென்பொருள் / கணிப்பொறி நிறுவனங்கள் வருவதும், வந்து கேம்ப்பஸ் இன்டர்வியூ என்றழைக்கப்படும் நேர்முக தேர்வுகள் வைத்து மாணவர்களை, தங்களது நிறுவனப் பணிக்காக மாணவர்களை கொத்திக் கொண்டு போவதும் நடைமுறையில் உள்ள விஷயம். அப்படி கடந்த சில மாதங்களாக நடந்தேறிய எட்டுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நடத்திய நேர்முகத் தேர்வுகளில் ஒன்றில் கூட அருண் தேர்வாகவில்லை. தன்னிடம் பாட சந்தேகங்களை கேட்டுத் தெளிவைடையும் கார்த்திக்கை மூன்று பெரும் நிறுவனங்கள் தேர்வு செய்துவிட்டன. எதில் சேருவது என முடிவெடுக்கும் நிலையில் கார்த்திக் இருக்க, ‘ஒன்றில் கூட தான் தேர்வாகவில்லையே, தன்னிடம் அப்படி என்ன குறை, நான் தோற்கவே பிறந்தவனா, இனி நான் என்ன செய்வேன்?’ என்று நினைத்து நினைத்து நிலை குலைந்து போனான் அருண். சரியாய் சாப்பிடுவதில்லை, தூங்குவதில்லை, செமெஸ்டருக்குக் கூட சரியாய் படிப்பதில்லை பிள்ளை என துடித்து செய்வதறியாது தவித்த தகப்பன், தூரத்து உறவினரிடம் சொல்லி, அவர் தன் நண்பரிடம் சொல்லி, என் அலுவலகம் வந்து தலை கவிழ்ந்து உட்கார்ந்திருக்கிறான் ஒளி படைத்த கண்ணும், உறுதி கொண்ட நெஞ்சும் கொண்டிருக்க வேண்டிய இந்த இளைஞன்.

சில கேள்விகள்:

‘கார்த்திக்கிடம் இருந்த எது, அருணிடம் இல்லை?’  

‘கார்த்திக்கிடம் கண்ட எதை கண்டார்கள் அவர்கள்? அருணிடம் இல்லாத அது எது?’

‘அந்த வீட்டு பையன், அவ்ளோ அருமையா படிச்சி பட்டம் வாங்கனான்பா. ஆனா, வேலைதான் ஒன்னும் கெடைக்கல!’

‘இங்க பாரு, இவன் படிக்கும்போது ஆவரேஜ்தான், ஆனா சும்மா சொல்லகூடாது, அத இத பண்ணி ப்ரொஃபஷன்ல செட்டில் ஆயிட்டான். எப்படின்னுதான் தெரியல!’

‘படித்தால் மட்டும் போதுமா?’

‘பின்ன என்ன செஞ்சா, வாழ்க்கையில் ஜொலிக்கலாம்?’

‘படிக்காம இருந்தாக்கூட வேலை கெடச்சக் காலம் போயி, நல்லாப் படிச்சவனுக்கே வேலை கெடைக்கறதில்லையே இந்தக்காலத்தில!’

‘சும்மா இருக்கறதுக்கு ஏதோ ஒரு வேலையில சேர்ந்திட்டேன். நான் ஆசைப்பட்டது, என் கனவு இது இல்ல. எவ்வளவோ முயற்சி பண்ணிட்டுதான் இருக்கேன். ஒரு அடிகூட மேல எடுத்து வைக்க முடியல. என்ன செய்யறதுன்னுன்னு ஒன்னும் புரியல’

‘வேலையில் வெற்றி பெறுவது எப்படி?’

‘வேலை எல்லாம் கிடைத்து விட்டது. தினமும்தான் உழைக்கிறேன். அடுத்த நிலைக்கு போவதெப்படி?’

‘அடுத்த உயரத்தை நோக்கி நகர்வதெப்படி?’ ….

இப்படி, இன்னும் என்னென்னவோ கேள்விகள். ஆன்ட்ராய்டையும், ஐஓஎசையும் அடக்கி ஆண்டுகொண்டிருக்கும் அற்புத இளைஞர்களை கொண்டிருக்கும் அதே தமிழ்தேசத்தில், இது போன்ற கேள்விகளை மனதிற்குள் வைத்துக்கொண்டு விடை தெரியாமல் தவிக்கும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்தக் கேள்விகளுக்கான விடைகளை கொஞ்சம் விரிவாக ஒவ்வொன்றாய் பார்ப்போம், இந்தத் தொடரில்.

[ அடுத்த வாரம்…]

தொடர் : பரமன் பச்சைமுத்து

நன்றி:  எம்ப்லாய்மென்ட் மாஸ்டர்

5 Comments

  1. jeo

    Yes. You are great Paraman.

    Reply
  2. sarla anand

    Superb Paraman…

    Reply
  3. S.Sivagurunathan

    I’m waiting………

    Reply
  4. Mahalakshmi Swaminathan

    oh gaawdd!! nextu weeku varaikum wait pannanumaa !!

    Reply
  5. vijay

    Interesting and waiting ..

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *