‘வைரமுத்து சிறுகதைகள்’ – நூல் விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

wp-1605512815279.jpg

இருநூறு பக்க நாவல் எழுதுவது எளிது, அதை வெட்டிச் சுருக்கி சிறுகதையாக்குவது பெருங்காரியம் எனும் பொருள்பட சுஜாதா சொல்லியிருந்தார் எப்போதோ. 

ஒவ்வொரு சிறுகதையும் உண்மையில் ஒரு நாவலுக்கான உள்ளடக்கமே.  ஒரு பாத்திரம் அல்லது சில பாத்திரங்கள், ஒரு நிகழ்வு இவற்றை வைத்துக் கொண்டு சில பக்கங்களில் வாசிக்கும் வாசகனுக்குள் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், அனுபவம் தர வேண்டும். இதை அட்டகாசமாகச் செய்கிறார் நூலாசிரியர் வைரமுத்து.

நாற்பது சிறுகதைகளும் நாற்பது அனுபவங்கள் தருகின்றன.  ஒரே மூச்சில் வாசித்து முடித்து விட முடியாமல், நம்மை தாக்கி அப்படியே சில கணங்கள் நிறுத்தி வைக்கின்றன சில கதைகள். 

‘பெசன்ட் நகர் மயானத்துக்கும் மென்ஹாட்டனுக்குமான 13,462 கிலோ மீட்டர் தூரத்தில் ‘ஸ்கைப்’பில் எரிந்து கொண்டிருந்தாள் அம்மா’ என்ற முதல் கதையில் தொடங்கி, ‘ராஜராஜப் பெருந்தச்சரே! தாயப்பாலில் விளக்கெரித்தவளுக்கு என் வரலாற்றிலும் இடம் வேண்டும்!’ என்று ராஜராஜப் பெருவேந்தன் சொல்லும் நாற்பதாம் கதை வரையில் நாற்பதுக்கும் மேற்பட்ட அனுபவங்கள்.  ராஜராஜன் பற்றிய நாற்பதாம் கதையை ஈராண்டுக்கு முன்பு முதல் முறை வாசித்த போது, அது ஏற்படுத்திய தாக்கத்தில் குபீரென்று நீர் பெருகியது. ஈராண்டுக்குப் பிறகு இப்போது மீள் வாசிப்பு செய்கையிலும் அதே உணர்வு வருகிறது. 

வெளியே கண்ணீராகவும் வராமல் உள்ளேயும் மறையாமல் நடுவில் தொண்டையில் நின்று படுத்தியது
போரில் காலையிழந்த ஈழத்து மகனொருவனின்
‘எண்ட மக்களே, எங்கட தலைவரே!’

காந்தியின் கடைசி வம்சம், ஊழல் வர்மனும் மூன்று மந்திரிகளும், குறை + குறை = நிறை, புத்தர், அன்றைக்கு அவள் பெயர் காஞ்சனா, கோயில் மாடு என ஒவ்வொன்றும் ஒரு வாசிப்பனுபவம் தருகின்றன. மனித வாழ்க்கையின் மனித உணர்வுகளின் நிதர்சன நிலையை அறைந்து சொல்கின்றன.  ‘கோழிகளும் இந்தியப் பொருளாதாரமும்’ அறைகிறது.

இந்த கதை முடிச்சை இந்த நிகழ்வை வைத்து எழுதுகிறேன் என்று எழுதிக் கடக்காமல், அதற்கு தேவைப்படும் விவரங்களுக்கு உழைத்துப் பெரும் தவம் செய்திருக்கிறார் வைரமுத்து.

“ஈசன் திருவடிக்கு எத்துணை முத்துக்கள் கொட்டிக் கொடுத்தாய் தம்பீ. வட்டம், அணுவட்டம், ஒப்புமுத்து, குறுமுத்து, நிம்போளம், பயிட்டம், அம்புமுது, கறடு, இரட்டைச் சப்பத்தி, குளிர்நீர், செந்நீர்… இப்படி வகைபிரித்தல்லவா முத்துக்களை வழங்கி வழங்கி வணங்கினாய்” குந்தவை தேவி அருண்மொழி தேவனிடம் சொல்வதாக வரும் இந்த வரிகள் போதும் எவ்வளவு உழைத்து விவரம் சேர்த்திருக்கிறார் என்று சான்று சொல்ல.

நிச்சயம் படியுங்கள்.

‘வைரமுத்து சிறுகதைகள்’ – கவிப்பேரரசு வைரமுத்து,
திருமகள் நிலையம்.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
16.11.2020

[email protected]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *