எப்படி சொன்னார் சுஜாதா என்பது பெரிய வியப்பு

கேள்வி: ஒரு பக்கம் இப்படி வரலாற்றை எடுத்துக் கொண்டு நிகழ்வுகளை சரியாக தந்து அதற்கு இடையில் கதாபாத்திரங்களை வைத்து கதை செய்து பெரிய விருதுகளும் பாராட்டுகளும் செய்கிறீர்கள். திடீரென்று அதற்கு இடையில் இணை பால்வெளி வேற்று கிரக கதைக்களங்களை ‘நான் ரம்யாவாக இருக்கிறேன்’ ‘அமில தேவதைகள்’ போன்ற அறிவியல் புனை கதைகளையும் தருகிறீர்கள்! சுஜாதாவுக்கு அடுத்து அறிவியல் புனைவுகளை அட்டகாசமாக தருபவர் நீங்கள் என்பது என் கருத்து.

பதில்: பரமன் சார்! நான் இயற்பியல் மாணவன் இல்லையா! அதை விட்டுவிடமுடியாதே! ‘பேரலல் யூனிவர்ஸ்’ என்று ஒன்றை சொல்வார்கள். ‘பிக் பேங்க்’கில் நாமிருக்கும் இந்தப் பால்வெளி உருவான போதே, அங்கும்  ஒன்று உருவாயிருக்கலாம் என்பதை அடிப்படையாக கொண்டது அது. அதன் படி இப்போது இங்கு தமிழ்மகனும் பரமன் பச்சைமுத்துவும் பேசிக்கொண்டிருப்பதைப் போலவே அங்கு இருவர் பேசிக்கொண்டிருப்பார் என்பதை வைத்து புனைவு செய்யப்பட்டது ‘நான் ரம்யாவாக இருக்கிறேன்’

சார், சுஜாதா மிகப் பெரியவர் சார். அந்தக் காலத்தில் ‘கற்றதும் பெற்றதும்’ என்று அவர் எழுதிய போது வாரா வாரம் படிப்பேன். ‘இவர் இப்படி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார். ஏழு ஆண்டுகளில் இவருக்கு நோபல் பரிசு கிடைக்கலாம்’ என்று யாரோ விஞ்ஞானியை குறிப்பிட்டு எழுதியிருப்பார் சுஜாதா. ஒவ்வொரு  ஆண்டும் நோபல் பரிசு வரும்போதும் விஞ்ஞானிகளின் பெயர்களை பார்த்துக்கொண்டே வருவேன். சரியாக ஏழாம் ஆண்டு அந்த விஞ்ஞானி நோபல் பரிசு பெறுவார். எப்படி சொன்னார் சுஜாதா என்பது பெரிய வியப்பு. சுஜாதாவெல்லாம் பெரும் மேதை சார்!

 

( ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழ் ஏப்ரல் 2021 இதழிலிருந்து )

#வளர்ச்சி

#Valarchi

#ValarchiTamilMonthyly

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *