‘கர்ணன்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

சுதந்திரமாக ஓடி விடக்கூடாது என்பதற்காகவே முன்னங்கால் இரண்டையும் இணைத்து கட்டி வைக்கப்பட்ட நடக்க முடியாமல் விந்தி விந்தி நகரும் ஒரு கழுதைக்குட்டி வாழும், சரியான பாதையோ இணைப்போ இல்லாத சீமைக்கருவேல புதர்கள் மண்டிய, உலகை விட்டு ஒதுங்கியிருக்கும் ஒரு சிற்றூருக்கு ஆற்றல் மிகு பொலிவான ஓர் இளங்குதிரை கொண்டு வரப்படுகிறது. ஒரு நாள் ஊரே நினைத்திரா வண்ணம் கழுதைக் குட்டியின் தளைகள் அறுக்கப்படுகிறது, குதிரை முன்னங்கால்களை உயர்த்திப் பாய்கிறது. இந்தக் காலகட்டத்தில் தங்களது அடிப்படைத் தேவைக்காக விந்தி விந்தி நகர்ந்து துன்புறும் அங்கிருக்கும் மனிதர்கள் ரணமான கால்களின் தளைகளை ரத்தம் சிந்தி அறுத்து குதிரையென பாய்கிறார்கள்.  இதை ரத்தமும் சதையுமாய் தந்து நம்மை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்ப விடாமல் செய்து வெற்றி பெற்று நிற்கிறார் மாரி செல்வராஜ்.

திரௌபதி்யோடும் மற்றுமுள மனிதர்களோடும் தங்கள் தேவைக்குப் போராடும் துரியோதனாதிகளின் வாழ்வில் கண்ணபிரான் வந்து இடையூறு செய்யும் போது கர்ணன் வாளேந்தும் கதை, ஆனால் முடிவு வேறு விதமாக.

பாத்திரங்களின் படைப்பில், அவர்களைத் திரையில் தந்த விதத்தில் என சிறப்பாக செய்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

தனுஷ்… படத்தின் கதாபாத்திரங்கள் பேசும் மொழியில் சொல்வதானால் ‘யெப்போய் என்னமா கலக்கியிருக்கார் மனுஷன்!’ முதல் காட்சியிலிருந்து கடைசியில் ஆடிக்கொண்டே கண்களில் அழும் உணர்ச்சி காட்டும் அந்தக் கடைசி் காட்சி வரை ‘யங் ஆங்ரி இளைஞன்’ ஆக  மனுஷன் அதகளம் செய்கிறார்.

மஞ்சனத்தி வீட்டுக்காரராக வரும் தாத்தா லால், திரௌபதி பாத்திர நாயகி, அக்காள், அம்மா, அப்பா, யோகிபாபு, நட்ராஜ் என அனைத்து பாத்திரங்களை ஏற்று செய்தவர்களும் திரையில் பாத்திரங்களுக்கு உயிர் தந்திருக்கிறார்கள்.

ஒடுக்கப்பட்ட கதைகளையே இவர் தருகிறார், அவரும் அவ்வகைப் படங்களிலேயே நடிக்கிறார் என்று பேசப்படும். இவற்றைத் தாண்டி படம் சிறப்பாக வந்திருக்கிறது.  பொழுது போக்குப் படமல்ல.

வி – டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘கர்ணன்’ – உணர்ச்சி மிக்கவன், வெற்றியாளன் : பாருங்கள்

– திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *