தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுகள்

இந்தியாவின் ஏதோவொரு மூலையில் பணியிலிருக்கும் ராணுவ வீரர் ஒரேயொரு நாள் வாக்குப்பதிவிற்காக தன் உள்ளூருக்கு பயணித்து வந்து திரும்புவது சிரமம் என்பதால் அவர்களுக்கு மட்டும் சிறப்பு அறிமுகமாக தபால் ஓட்டு என்று ஒன்று வந்தது.  அது உரிமை என்பதைத் தாண்டி ஒரு சிறப்பு மரியாதை அன்று.

வாக்குச் சாவடிகளுக்கு அலுவலர்களாக செல்லும் ஆசிரியர்கள் / அரசு அதிகாரிகளுக்கும் இந்த முறை தரப்பட்டது அதன் பின்பு. என் தந்தை சில நாட்களுக்கு முன்பே வாக்கை செலுத்தி அனுப்பிவிட்டு அதன் பின் அவருக்கு ஒதுக்கப்பட்ட ஊரின் வாக்குச்சாவடி நோக்கி 2 வேளைகளுக்கு உணவெடுத்துக் கொண்டு பயணிப்பார் அந்நாட்களில்.

கடந்த வாரம் சோழ மண்டலக் கடற்கரையோர பகுதியில் தேர்தல் பணியிலிருக்கும் என் கல்லூரி நண்பனொருவனிடம் பேச நேர்ந்தது. ’93 வயசு பெரியவரு. எழுந்து உட்கார கஷ்டம். அவங்க வீடு தேடி போயி ஓட்டு போடற முறை வந்துருச்சு. வீடியோ முழுதும் ரெக்கார்ட் ஆயிருக்கு. ‘நானே போடறனே!’ன்னு சொல்றாரு. ‘ஓட்டே போட்டுட்டனா நானு! பரவாயில்லையே!’ன்னு சொல்லி சந்தோஷப்பட்டார் அவர்! இது குடிமகன்களுக்கு தேர்தல் கமிஷன் கொடுத்திருக்கும் பெரிய வசதி, சிறப்பு மரியாதை!’ என்று சிலாகித்துக் கொண்டார்.

ராணுவ அதிகாரிகளுக்கு கிடைக்கும் சிறப்பு மரியாதை இன்று நாட்டின் மூலைகளில் இருக்கும் சீனியர் சிட்டிசன்களுக்கு கிடைத்திருக்கிறது. டி என் சேஷனில் தொடங்கிய சீர்திருத்தம், தொடர்ந்த புதிய முயற்சிகள், நிறைய முன்னேற்றங்கள், நோய்த் தொற்றுக் காலத்திலும் மிகச் சிறப்பான செயல்பாடுகள் என  தேர்தல் கமிஷனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

‘யப்பா… எதை அமுக்குனாலும் தாமரை விழுது, எந்த பட்டன அழுத்தினாலும் ரெட்டலை விழுது’ என்று பேசுபவர்களுக்கு சில அடிப்படைகளே தெரியவில்லை என்று பொருள். ‘வெற்றி பெற்றால் – எங்களால் நாங்கள் வென்றோம், தோல்வியடைந்தால் – வோட்டிங் மெஷினால்தான் தோற்றோம்!’ என்று சால்ஜாப்பு சப்பைக்கட்டு கட்டும் அரசியல்வாதிகளை விட பொறுப்பவர்கள் இவர்கள்.

தேர்தல் ஆணையம் நாள் குறித்து, இடம் ஒதுக்கி, அலுவலர்களை வரவழைத்து, கட்சிகளுக்கு செய்தி சொல்லி,  ‘வாக்கு இயந்திரங்களை வந்து பார்வையிடுங்கள். எப்படி இயங்குகிறது என்று நீங்களே பாருங்கள்! சந்தேகம் இருந்தால் கேளுங்கள். பிரித்து மேயுங்கள்!’ என்று அழைப்பார்கள். கட்சிகள் போவதேயில்லை.

‘இந்த
வாக்குச்சாவடிக்கு இவர் இவர்’ என்று பட்டியலிட்டு அலுவலர்களை ஒதுக்கி முதல்நாள் மதியம் 1 மணிக்குள்ளே போய் சேர வேண்டும் என்று அனுப்பி வைப்பார்கள். நேற்று வரை பகலில் பள்ளிக்கூடமாக இயங்கிய கட்டிடத்தில் இன்று இரவும் நாளை முழுநாளும் கழிக்க வேண்டும். மின்விசிறி, கழிப்பறை என அடிப்படைத் தேவைகளை இருப்பதைக் கொண்டு பொறுத்தருள வேண்டும். தெரியாத ஊரில் உடனே வந்து உணவு கொடுப்பவர் எல்லா ஊரிலும் இருப்பது இல்லை. 

இதை விட முக்கியம், அடுத்த நாள் காலை ( தேர்தல் நாள் ) அதிகாலை 05.30க்கே அலுவலர்கள் தயாராக நிற்பர். பொதுமக்கள் வாக்களிக்கும் முன்பு, காலை 06.30க்கு ‘மாக் போல்’ எனப்படும் மாதிரி / சோதனை வாக்குப் பதிவு நடத்தப்பட வேண்டும். இது முழுக்க முழுக்க அந்த ஊரின் அரசியல் கட்சிகளுக்காகவே செய்வது. ‘இந்தாங்க, நீங்களே பல முறை ஓட்டு போட்டுப் பாருங்க. எதை வேணா அமுக்கி என்ன வருதுன்னு சோதனை செஞ்சி பாருங்க!’ என்று அரசியல் கட்சிகளுக்கு தருவது. அந்த வாக்குச்சாவடியின் அதிகாரபூர்வ அனுமதிக்கப்பட்ட பூத் ஏஜண்ட் ( கட்சிக்காரர்) எல்லோரும் வந்து நின்று சோதனை செய்ய வேண்டும்.   இந்த சோதனைக்கு பூத் ஏஜண்ட்டுகள் சொன்ன நேரத்திற்கு வருவதில்லை அல்லது வரவே மாட்டார்கள் பல ஊர்களில் என்பது தகவல். வராமலேயே… ‘எதை அழுத்தினாலும் இலை வுழுது’ என்னும் அழிச்சாட்டியம் செய்வார்கள்.

இப்படி சோதனை / மாதிரி வோட்டுகள் முடிந்து, தொடங்கிய வாக்குப் பதிவில் ‘எதை அழுத்தினாலும் இலை விழுகிறது’ என்று புகார் கொடுத்தால், அலுவலர் சோதித்து விட்டு தேர்தலை நிறுத்துவார். வெறும் பொய்க்கதை சொல்லியிருந்தால், பிடித்து சிறையில் அடைக்கப்படுவார் என அறிவித்தே விட்டது தேர்தல் ஆணையம்.

கணிகாபுரம் என்ற ஊரில் ‘எதை அமுக்கினாலும் இலை விழுது’ என்றார் ஒருவர். சிறிது நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. எல்லோரையும் அழைத்து நிறுத்தி, புகார் கொடுத்தவர் முன்னிலையிலேயே இயந்திரம்  சோதிக்கப் பட்டது. அவர் சொன்னது உண்மையில்லை, அவர் விட்டது வெறும் கதை என்று தெரிந்தது. கண்டித்து அனுப்பப்பட்டார். இது செய்திகளில் உள்ளது.

சென்னை நகரில் மாநகராட்சி ஊழியர்கள் பயன்படுத்தாத ‘ஸ்டேன்பை / எக்ஸ்ட்ரா’ வாக்கு
இயந்திரங்கள் இரண்டை இருசக்கர வாகனங்களில் எடுத்துச் சென்றனர் என்பது பெரும் சர்ச்சையாக ஆகி நிற்கிறது. ‘ஒரு வேளை இருக்குமோ, மாத்தறாங்களோ?’ எனும் வெறும் சந்தேகங்கள் அவரவர்க்கான கதைகளை கட்டுகின்றன.

‘அதைப் போய் டூ வீலர்ல கொண்டு போறான் பாரு அவன்!’ என்பவர்களுக்கு. ஐயா… இதுதான் அரசு அலுவலர்கள் கொண்ட நிதர்சனம். சைக்கிளில் வைத்தே எடுத்துப் போனார்கள் சதீஷ் தவான் திட்ட இயக்க அதிகாரிகள் வானில் ஏவ இருந்த ராக்கெட்டின் பாகங்களை. ‘அது அன்று!’ என்று சொல்லாதீர்கள். அதிகாரிகளின் நடைமுறை வாழ்வில் பெரிய மாற்றம் இல்லை. 

தபால் ஓட்டிற்காக சாட்சி / பார்வையாளர்களாக வரும் உள்ளூர் பஞ்சாயத்து மன்ற உறுப்பினர்களுக்கு தேநீர்ச் செலவு கூட கிராம நிர்வாக அதிகாரிதான் செய்கிறார் சொந்த பணத்திலிருந்து என்பதே நடைமுறை உண்மை. தேர்தல் பணிக்காக போகும் அலுவலர்களுக்கொன்றும் பெரிய ஊதியங்கள் வருவதில்லை. நாட்டிற்கு செய்வதாகவே பலரும் தங்களைத் தருகின்றனர்.    இத்தனை பலவீனங்களையும் தாண்டி மிகச் சிறப்பாக செயல்படுகிறது தேர்தல் ஆணையம்.

தேர்தல் பணிக்காக தங்களைத் தந்த அந்த அதிகாரிகளையும், தேர்தல் ஆணத்தையும் பாராட்டுவோம்.

இத்தனை ஏற்பாடுகளையும் மீறி பூம்புகார் பகுதி வாக்குச்சாவடியில் நடந்ததைப் போல, எவரோ ஒரு ப்ரசீடிங் ஆஃபீசர், ‘மாக் போல்’ எடுத்ததை அழிக்காமல் அப்படியே பொதுமக்கள் வாக்குப்பதிவை நடத்தும் தவறை செய்திருப்பார். அந்த அலுவலரின் தவறு, இந்த பூத்தில் இயந்திரம் கோளாறு என்று பார்க்காமல் தேர்தல் ஆணையத்தை, தேர்தல் முறையையே பொத்தாம்போக்கில் குறை சொல்வர் சிலர். அவர்களை கடந்து போவதைத் தவிர வேறென்ன செய்வது!

– மணக்குடி மண்டு
08.04.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *