சோயா / மீல்மேக்கர் பிரியாணி

20210523_135945

🌸

பிரியாணி என்பது அரபு நாடுகளின் உணவு என்று ஒதுக்கி விட வேண்டியதில்லை. கறியையும், அரிசியையும், உப்பையும், குறு மிளகையும் ஒன்றாய் பாத்திரத்திலிட்டு வேகவைத்து ‘ஊன் சோறு’ என்று மக்கள் உண்டதாக சோழ தேசத்து கதைகள் பல சொல்கின்றன.

எப்போதும் வழக்கமான உணவை ஒதுக்கி புதிய உணவை விரும்பும் குழந்தைகளின் கண்களுக்கு பிரியாணி ஒரு கொண்டாட்டம். சைவ உணவாளர்களுக்கு சோயா உருண்டைகள்(மீல் மேக்கர்) கொண்டு பிரியாணி செய்யலாம். இதோ *’சோயா / மீல் மேக்கர் பிரியாணி’* :
……

நாம், நமது வீட்டில் அன்றாடம் பயன்பாட்டில் இருக்கும் பிபிடி எனப்படும் ஆந்திரா பொன்னி அரிசியைப் பயன்படுத்துகிறோம். பாஸ்மதி அரிசியை நம் வீட்டில் பயன்படுத்துவதில்லை. உங்களுக்கு வேண்டிய அரிசியைத் தேர்ந்தெடுத்து, இருமுறை நன்றாகக் கழுவி, நீரை வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, பொதினா,கொத்தமல்லித் தழை, ஒரு கப் சோயா / மீல் மேக்கர் ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இஞ்சி – பூண்டு விழுது தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் கொஞ்சம் கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாகவும், தக்காளியை வதக்க ஏதுவாகவும் நறுக்கி வைத்துக் கொள்ளவும். (கொஞ்சம் கொத்தமல்லி கடைசியில் தேவைப் படும். மீதி வைக்கவும்)

சோயா உருண்டை / மீல் மேக்கரை உப்பு கலந்த சுடுநீரில் ஒரு 15 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்து இரண்டு முறை நன்றாக நீரில் கழுவி, நீரை வடிகட்டி எடுத்துத் தயாராக வைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், கொஞ்சம் நெய் ஊற்றி, 2 பட்டை, 1 கிராம்பு, 2 ஏலக்காய், 1 பிரியாணி இலை, 1 தேக்கரண்டி சோம்பு, ( அண்ணாசி மொக்கு இருந்தால் 2), (வேண்டியவர்கள் முந்திரியும் சேர்த்துக் கொள்ளலாம்),
1 தேக்கரண்டி இஞ்சி – பூண்டு விழுது என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு கிளறவும். கொஞ்சம் புதினா சேர்த்துக் கொள்ளலாம்.

வெட்டிய வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், ஏற்கனவே வெட்டி வைத்துள்ள தக்காளி என ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு உப்பு, கொஞ்சம் மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் சேர்க்கவும். மிளகாய்த்தூளின் வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்
(1 நிமிடம்!)

தயாராக வைத்திருக்கும் மீல்மேக்கரை போட்டு ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். இதில் ஒரு தேக்கரண்டி தயிர் சேர்ப்பது நல்ல சுவையைத் தரும்.

தயாராக இருக்கும் அரிசைப் போடுவதற்கு முன்பு போதிய அளவு தண்ணீரை ஊற்றி கொதிநிலைக்கு கொண்டு வருவது நல்லது. 1 தம்ளர் அரிசிக்கு 2 தம்ளர் தண்ணீர் என்பது கணக்கு. நீர் கொதித்ததும் அரிசியைப் போடவும். கிளறி விட்டு, கொஞ்சம் கொத்தமல்லியைத் தூவி, குக்கரை மூடி விடலாம்.

3 விசில் விட்டு எடுத்து, கொஞ்சம் நெய்யைத் தூவி, கொத்தமல்லித் தழையைத் தூவி, அரிசி உடையாமல் மெதுவாகக் கிளறினால்…

சோயா / மீல்மேக்கர் பிரியாணி தயார்!

சுடச்சுட சாப்பிடுங்களேன்!

( Recipe Courtesy – பிரியா பரமன். உண்டு மகிழ்ந்தவர் – பரமன் பச்சைமுத்து)

– பரமன் பச்சைமுத்து
25.05.2021

#MealMakerBiriyani
#VegBiriyani
#SoyaBiriyani
#Food
#Receipe

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *