அடிப்படை கேள்விகளும் ஆலோசனையும்

சேத்துப்பட்டில் காவலர்கள் – வக்கீல் பெண்மணி சம்பவ காணொளி காட்சி தீயாகப் பரவியிருக்கிறது.

‘உன் காக்கிசட்டையை கழட்டறேன் பாரு, போடா!’ என்று அந்தப் பெண்மணி பேசியது வெளியாகியிருக்கிறது. ‘வாடி போடி என்று சொன்னார்’ என்கிறார் அவர்.  முழு பதிவும் இல்லாததால் எது உண்மையான பின்னணி தெரியாது நமக்கு.

ஆனால், சில அடிப்படை கேள்விகளும் ஓர் ஆலோசனையும் இருக்கிறது நம்மிடம்.

அடிப்படை கேள்விகள்: ‘கதவ தட்டினார், வண்டிய விட்டு எறங்குன்னு அதிகாரம் பண்ணாரு, வாடி போடி சொன்னாரு’ என்றெல்லாம் சொல்லும் பெண்மணி, ஊரடங்கு காலத்தில் இ பாஸ் / அனுமதியில்லாமல் சுற்றியது சரியா? ஏன் சுற்றுகிறாய்? என்று காவலர்கள் இளம்பெண்ணை கேட்டதற்கு கடைசி வரை பதில் இல்லையே.  ‘தோ, இங்கதான் வீடு!’ என்பது பதிலில்லையே. இங்கதான் வீடு என்றால் வேறு எங்கிருந்து காரை கொண்டு வந்தார் அவர்? ஊரடங்கில் அனுமதியில்லாமல் வெளியில் சுற்றியதால் மாநிலம் முழுக்க 5,000 சொச்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது தெரியாதா? இதோ இருக்கும் வீட்டிலிருந்து வெளியில் இதே இடத்தில் தினமும்  காவலர்கள் சோதனையிட்டு விசாரிப்பதை பார்க்க வில்லையா?

ஓர் ஆலோசனை: காவல்துறை ஆணையராக ஏ கே விஸ்வநாதன் இருந்த போது, காவலர்களின் உடையில் பொறுத்தப்படும் கேமரா திட்டம் ஒன்றைக் கொண்டு வந்திருந்தார். காவலரின் முன்னே அருகில் நடப்பதை அது பதிவு செய்து கொண்டேயிருக்கும். காவலர் எதையும் அழிக்க முடியாது.
அதே கேமரா திட்டம் திரும்ப கொண்டு வரப் பட வேண்டும். இரண்டு பக்கமும் நடப்பதை உண்மையாக பார்க்க முடியும். காவல்துறை மீதும் நம்பகத்தன்மை வரும். உண்மை நிகழ்வும் புலப்படும்.

காவலர்களை எதிரிகள் போல நினைக்கும் மனப்பான்மையும் மாறும்.

– மணக்குடி மண்டு
10.06.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *