‘சார்பட்டா பரம்பரை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

wp-1627380516810.jpg

பிரித்தானியர்கள் இந்த மண்ணை விட்டுப் போன பின்னும், அவர்கள் விட்டுச் சென்ற ‘ரோஸமான ஆங்கில குத்துச்சண்டை’, ‘ப்ளாக் டவுன்’ என்றழைக்கப்பட்ட அசல் மெட்ராஸான வடசென்னையை பல ஆண்டுகள் ஆட்சி செய்தது. மத்தியில் இந்திரா காந்தியும் மாநிலத்தில் கலைஞர் கருணாநிதியும் ஆட்சியிலிருந்த 70களில், ப்ளாக் டவுனில் பெயர் பெற்றிருந்த இரண்டு குத்துச் சண்டை பள்ளிகளுக்கிடையே (பரம்பரை, ‘க்ளான்’) (ப்ரூஸ்லீ படங்களில் ‘ஸ்கூல்’ அரசியல் வருமே, அது போல!) எழும் போட்டியும் அதை எதிர்கொள்வதில் ஏற்படும் அடுத்தடுத்த சிக்கல்களும் என்ற களத்தை எடுத்துக் கொண்டு, மிகச் சிறப்பான பாத்திரங்கள் வடிவமைப்பு திரைக்கதை தந்து மண்ணும் மணமும் ரத்தமும் சதையுமாக படம் தந்திருக்கிறார் ப. ரஞ்சித்.

ஆர்யாவுக்கு சொல்லிக்கொள்ளும் படி மறுபடியும் ஒரு படம். உருமாறி மிக சிறப்பாக செய்திருக்கிறார்.

மாரியம்மாவாக வரும் அந்தப் பெண் அசத்துகிறார் என்றால் ரங்கன் வாத்தியாராக பசுபதி வாழ்ந்திருக்கிறார். வேம்புலி, கோணி, வெற்றி, ராமன், கபிலன், டாடி, கபிலன், கபிலனின் தாய், டான்சிங் ரோஸ், வெற்றியின் மனைவி என பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அடுத்தவரோடு போட்டியிட்டுக் கொண்டு நிற்கிறார்கள் பங்களிப்பில்.

தங்க சாலை மணிக் கூண்டு, பேசின் பிரிட்ஜ் பக்கத்து அந்த இரண்டு கூலிங் டவர்கள், அகஸ்த்தியா தியேட்டர், எமர்ஜென்சி பீரியட், எம்ஜியார் திரைப்பட கட் அவுட், வட சென்னையின் உணவகம் என அக்கால மெட்ராஸை அப்படியே கொண்டு வந்து நிறுத்துகிறார் கலை இயக்குனர் என்றால் அதை மிக அழகாக பதிவு செய்து நம் முன் நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர்.  முக்கியமானவை என்ற போதும் இரவில் நடைபெறும் சில காட்சிகள், உண்மையான உணர்வு உருவாக்குவதற்காக ‘யோவ் சரியா தெரியலைய்யா!’ என்று நாம் சொல்லும் அளவிற்கு இருட்டில் குறைந்த ஒளியில் படமாக்கப்பட்டுள்ளன.

ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பின்னணியில் உணர்வு கூட்டுகிறார்.

‘திரையரங்கில் வந்திருக்கலாமே இந்தப் படம்! ஓடிடி-யிலயா வரணும்?’ என்று நினைப்பதை தவிர்க்க முடியவில்லை.

படத்தின் இறுதி என்னவாக இருக்குமென்று ஊகிக்க முடிகிறதென்றாலும் அதை நோக்கிய நகர்வில் வைக்கப்படும் திரைக்கதை பின்னல்கள் சுவராசியம் கூட்டுகின்றன.

‘ரஞ்சித்ன்னாலே சாதீய படம்ப்பா. நீலம் ப்ரொடக்‌ஷன்னு வேற ஆரம்பிச்சிட்டாரு!’ என்பவர்களுக்கு, இது வேறு மாதிரி படம், ‘நீலம் நம்ம வண்ணம்ப்பா!’ மாதிரி ஓரிரு இடங்களில் வந்தாலும் கூட.

ப ரஞ்சித்திற்கும் பங்குபெற்ற கலைஞர்களுக்கும் பாராட்டுகள்.

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘சார்பட்டா பரம்பரை’ – சரியான பரம்பரை! நிச்சயம் பாருங்கள். நல்லனுபவம்.

– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

#SaarPattaParambarai
#Saarpatta
#Filmreview
#PaRanjith
#Arya

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *