ஆண்கள் அனைவரும் பிரம்மச்சரியம் காக்கவேண்டும் அப்போதுதான் உயர் அளவு சக்தி கிடைக்கும் என்கிறார்களே?

கேள்வி: பரமன், வணக்கம்! ஆண்கள் அனைவரும் பிரம்மச்சரியம் காக்கவேண்டும் அப்போதுதான் உயர் அளவு சக்தி கிடைக்கும் என்கிறார்கள். என்னைப் போன்ற திருமணம் ஆனவர்கள் என்ன செய்வது?
பரமன்: ஏன் இதை சொன்னார்கள், என்னென்ன பிரிவுகள் உள்ளன, இப்போது என்ன தீர்வு என்று மூன்று பகுதிகளாக இதை பார்ப்போம்.

ஒன்று: இதன் பின்னிருக்கும் அடிப்படை என்ன?:

நாம் உண்ணும் உணவு ஏழு தாதுக்களாக மாறுகிறது. அந்த தாதுக்களின் உச்ச சக்தியே சுக்கிலம். மனித உடலின் உயர்ந்த சக்தியான சுக்கிலம் வீணாக செலவழிக்கப்படும்போது ஆற்றல் வீணடிக்கப்படுகிறது. அதே ஆற்றல் உள்முகமாகத் திருப்பி விடப்படும்போது அது ஆன்மீக உயர்நிலைக்கும் குண்டலினி சக்தி எழுப்புதலுக்கும் உதவுகிறது என்கின்றன சித்தர்களின் விளக்கங்கள்.

சுக்கிலம் நன்றாக இருப்பவர்கள் நீண்ட ஆயுள் பெறுவார்கள் என்கிறார் வடலூர் வள்ளல் பெருமான். சுக்கிலம் வீணடிக்கப்படும் போது பிறவிக்கான பேரிழப்பு நேரிடுகிறது என்கிறது இவர்களது விளக்கங்கள்.

முக்கிய குறிப்பு: இது ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் இது பொருந்தும்.

இரண்டு: நம் புராணங்கள் சொல்வது என்ன?:

மனிதர்கள் வாழும் முறையை நெறிப்படுத்தி அதை நான்கு பிரிவுகளாக பட்டியலிட்டார்கள்.

1. பிரம்மச்சாரி – திருமண வாழ்வை விலக்கி வாழ்பவன்

2. குடும்ப வாழ்க்கை கொள்பவன் (கிரகஸ்தன்).

3. பொதுவாழ்வை துறந்து மக்களிடமிருந்து விலகி காடுகளில் தன் அந்திம வாழ்வை வாழ்ந்து கழிப்பவன் (வனப்ரஸ்தன்)

4. துறவி – எங்கும் வாழலாம் ஆனால் பற்று இல்லாமல் துறந்து வாழும் துறவி (சந்நியாசி)

இந்த நான்கு நிலைகளிலும் வாழ்பவர்கள் முறையாக அவர்களது வாழ்வை வாழ்ந்துவிட்டு நிற்கும் போது, இறைவன் ‘குடும்ப வாழ்க்கை கொள்பவனுக்கே’ முதலில் அருள் செய்வான், அதற்கு அடுத்து பிரம்மச்சாரிக்கு என்கின்றன அந்த புராண விளக்கங்கள்.

மனைவி, மக்கள், குடும்பம் என்று வாழ்வது சிறந்தது என்றே சொல்கின்றன நம் பக்தி இலக்கியங்களும் புராண இதிகாசங்களும். இல்லறமே நல்லறம் என்கிறது தமிழ் கூறும் நல்லுலகம்.

மூன்று: தீர்வு நோக்கிய அணுகுமுறை?:

சுக்கிலம் என்பது மூளைப்பகுதியிலிருந்து உருவாக்கி சொட்டு சொட்டாக முதுகெலும்பின் அடிப்பக்கம் சேகரம் ஆகிறது. வீணடித்தல் என்பது வேறு, வாழ்விற்காக உபயோக்கித்தல் என்பது வேறு.
வெறுமனே சுக்கிலத்தை வீணடிப்பவர்கள் சக்தியையும் வீணடித்து வாழ்வையும் வீணடிக்கிறார்கள் என்பதையே, ‘விந்து கெட்டவன் நொந்து கெட்டான்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இயல்பான தாம்பத்தியம் கொள்வது வீணடித்தல் அல்ல. அதுவே முழு நேர வேலையாக இருக்கும்போது உடல், உள்ளம், உயிர் சக்தி என எல்லா நிலைகளிலும் சிக்கல் உருவாகிறது. ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்னும் வள்ளுவப் பெருந்தகையின் வரிகளை நினைவில் கொள்க.

இயல்பான வாழ்க்கையை கொள்க. மனம் பக்குவம் கொள்ளாமல், இயல்பான உணர்ச்சிகளை முறைப்படுதாமல் வெறுமனே விதிகளுக்காக அடக்கி வைக்கப்படும்போது அது ஒரு நாள் தவறான வழியில் பீறிட்டு எழலாம். மனம் பக்குவம் அடையும் போது, அதுவாகவே மெதுவாக அடங்கட்டும். தானாக கனியட்டும், தடியால் அடித்து கனிய வைக்க முயலவேண்டாம்.

இயல்பான வாழ்வை வாழுங்கள்! வாழ்க! வளர்க!

#Valarchi
#Valarchibadhilkal
#ValarchiTamilMonthly

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *