சர்ச் வெட்டிங் அனுபவம்

‘சர்ச் வெட்டிங்’ எனப்படும் கிறிஸ்துவ முறை திருமணம் நான் பார்த்ததில்லை.  இன்று மலர்ச்சி மாணவன் விஜய்சிவா – தான்யா திருமணம் சர்ச்சில் நடந்ததால் அதில் பங்குபெறும் அனுபவம் பெற்றேன்.

15 ஆண்டுகளுக்கு முன்பு நானும் முகுந்தனும் கொல்லத்தில் நடந்த அலெக்ஸ் அப்ரஹாம் திருமணத்திற்குப் போயிருந்தோமென்றாலும் அது சர்ச்சில் நடக்கவில்லை, நாங்களும் ‘குமாரகோம் – ஆலப்புழா’ பற்றி விவரங்கள் சேகரிப்பதிலேயே கவனம் கொண்டிருந்தோம் அன்று.

அண்ணா மேம்பாலத்தின் அடியிலிருந்து நுங்கம்பாக்கம் சாலை வழியே பல ஆண்டுகளாக கடந்து போன ‘செயின்ட் தெரேசா சர்ச்’சிற்குள் இன்று போகும் அனுபவம் கிடைத்தது.

திரைப்படங்களில் திருமணப்பெண் உடுத்தி வரும் அதே ஆனால் இன்னும் சிறப்பான தரைபுரளும்
வெள்ளை திருமண கவுனில் மணப்பெண், கோட் சூட்டில் மணமகன் என சர்ச்சின் வெளி வளாகத்திலேயே  உள்ளே நுழையும் போதே  திருமண உணர்வை பற்ற வைத்து விட்டார்கள் நமக்கு.

வெள்ளை உடையின் மேலேயே ஒரு சிறப்பு அங்கி அணிந்திருந்த உயர்நிலை சபை ஊழியர் (பேஸ்டர்? ஃபாதர்?) ஒருவர் வந்து, மணமக்களை பார்த்து சில நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேசி, அவர்கள் மீதும் சுற்றியிருந்த எங்கள் மீதும் நீர் தெளித்து உள்ளே அழைத்துப் போனார்.

தனிநபர் இடைவெளி,  சுவாசக்கவசம் என எல்லா முறைமைகளும் கடைபிடிக்கப்பட்டன.

தரையிலிருந்து உள் விதானம் 40 அடி, முற்றிலும் வெள்ளை வெளேரென பிரமாண்டமாக இருந்த தேவாலயத்தின் இறுதியில் மேலே உயரத்தில் சிலுவையில் வலப்பக்கம் தலையை ஒருக்களித்து சாய்ந்த நிலையில் அறையப்பட்டு இருக்கும் தேவகுமாரன். அவருக்கு அடியில் பெரும் மேடை அதில் ஃபாதர்.

மேடைக்கு கீழே மேடைப் பார்த்தபடி
இடப்புறம் மணமகளும், வலப்புறம் மணமகனும் அமர்த்தப்பட, அவர்களுக்குப் பின்னே போடப்பட்டிருக்கும் மர நீள் ஆசனங்களில் நாங்கள் என திருமணம் தொடங்கியது.

மொத்த திருமணமும் ஆங்கிலத்திலேயே நடந்தது.
திருமணம் என்பது என்ன என்று ஃபாதர் விளக்கினார், விவிலியத்திலிருந்து சில வரிகளைப் படித்தார், மணமக்களுக்கு அறிவுரைகள் சொன்னார்.

இறைவனைத் துதிக்கும் ஆங்கிலப் பாடல் பாடப்பட்டது, சிறுமி ஒருத்தி விவிலிய வரிகளை மேடையிலேறி படித்தாள்.

‘ஃபாதர், சன், த ஹோலி ஸ்பிரிட்’ என்று சொன்னபடி காற்றில் சிலுவையைப் போல் ஃபாதர் வரைய அனைவரும் எழுந்து நிற்க, பிரார்த்தனை தொடங்கியது. ஆங்கிலத்தில் பாடினார்கள். எழுந்து நிற்பதைப் பார்த்து எழுந்து நின்றோம், மண்டியிடுவதைப் பார்த்து மண்டியிட்டோம்,  ‘ஆ….மெ…ன்’ சொல்வதைப் பார்த்து சேர்ந்து கொண்டோம். (மண்டியிடுவதற்கென்றே பிரத்யோகமாக முன்புறம் அமைக்கப்பட்ட குஷனில் மண்டியிட்டோம்)

இறைவனை வணங்குகிறோம் என்பதில் தெளிவு இருந்ததால் ஒன்றி செய்தோம். நன்றாகவே இருந்தது. புது அனுபவம்.

‘ஐ ஆம் விஜய், மேஏரியிங் தான்யா’ ‘ஐ ஆம் தான்யா..’ என்று மணமக்கள் சபையில் பேசி உறுதியெடுத்துக் கொள்ள, மோதிரம் அணிவிக்க, மணமகள் தலையில் பட்டு அங்கியை மணமன் அணிவிக்க என்று நடந்த திருமண நிகழ்வுகளை அவர்களுக்கு அடுத்து நின்று கவனிக்கும் அனுபவம் பெற்றேன்.

03.255க்குத் தொடங்கி 04.45க்கு எல்லாம் முடிய, மணமக்களை வாழ்த்தி வெளியே வந்தோம்.

வெள்ளை கவுன், கோட், ஃபாதர், சபையின் இருபுறத்திலிருந்தும் பாடப்படும் பாடல்கள், பிரார்த்தனைகள் என எல்லாமே புது அனுபவம். நன்றாக இருந்தது.

மணமக்கள் விஜய் சிவா – தான்யாவிற்கு வாழ்த்துகள்!

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
08.09.2021
சென்னை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *