மனிதர்கள் மீதான என் வியப்பு கூடிக்கொண்டேதான் போகின்றது

wp-1632332717868.jpg

ஒவ்வொரு மனிதனிடமும் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றனதான். வடுக்கள், படிப்பினைகள், பூக்கள், அனுபவங்கள், நினைவுகள் என எவ்வளவோ இருக்கின்றன ஒவ்வொரு மனிதனிடமும்.  ஒவ்வொரு மனிதனும் உண்மையில் ஒரு புத்தகம். சில புத்தகங்கள் பலராலும் புரட்டப்பட்டும், சில புத்தகங்கள்  திறக்கப்படாமலேயும் இருக்கின்றன.

மறையும் ஒவ்வொரு மனிதனையும் சிங்களர்களால் கொளுத்தப்பட்ட யாழ்ப்பானத்து நூலகமாகவும், ஆப்கானியர்களின் படையெடுப்பால் அக்காலத்தில் எரிக்கப்பட்ட நாலந்தா பல்கலைக்கழக நூலகமாகவுமே நினைத்துப் பார்க்கிறேன்.

‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழுக்காக ஆளுமைகளை சந்தித்து கலந்துரையாடல் செய்வது எப்போதும் உவந்தது எனக்கு. கையில் கேமராவோடு மலர்ச்சி மாணவர் கார்த்திக், உள்ளத்தில் கேள்விகளோடு நான் என  திருப்பத்தூர், திண்டிவனம், சிதம்பரம் என்று பயணித்து ஆளுமைகளை நேர்காணல் செய்த நாம், இன்று கொரோனா கட்டுப்பாடு விதிகளால் இருக்கும் இடத்திலிருந்தே மெய்நிகர் நேர்காணல் செய்கிறோம்.

எழுத்தாளர் தமிழ்மகன், திரைக்கதை ஆசிரியர் ரமணகிரிவாசன், ரமணாஸ் சௌமியன், ‘ஜுவல் ஒன்’ ஸ்ரீநிவாசன், க்ளவுட் கம்பயூட்டிங் – டெல் டெக்னாலஜீஸ் முரளி நாராயணன், விகடனின் ‘டாப் 10 தமிழ்நாடு’ விருது பெற்ற சித்தமருத்துவர் விக்ரம் குமார் என பல்வேறு துறைகளின் ஆளுமைகளை இருக்குமிடத்திலிருந்தே மெய்நிகர் நேர்காணலில்தான் கலந்துரையாடல் செய்தேன்.  பல வசதிகள் இதில் என்றாலும் ஆளுமைகளை நேரில் சந்திக்க முடியாமல் போவது பெருங்குறைதான்.

‘ஆசியாவின் சிறந்த மனிதர்’ என்று ஐநா சபை விருதளித்த ‘பாலம்’ கல்யாண சுந்தரம் ஐயாவோடு, நாட்டுப்புற கலைகளில் ஆய்வு செய்யும் முனைவர் பார்த்திபராஜாவோடு, ஒரு இரவு விருந்தின் போதே கையில் தட்டை வைத்துக் கொண்டு நாம் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் தந்த ‘சிறுதுளி’ வனிதா மோகனோடு, மிக விரிவான நேர்காணல் செய்தும் இது வரை வெளியாகாத ஆனால் என்னுள் பல விதைகளை விதைத்த கொங்குநாடு தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரனோடு, ‘ஆனந்தம்’ செல்வக்குமாரோடு என நாம் கொண்ட பல நேர்காணல்கள் ஒவ்வொன்றும் நம்முள்ளே விதைத்தவை பல, அனுபவங்கள் அலாதி.

இன்று சோழமண்டலத்தின் புகழ்பெற்ற நல்நிறுவனமொன்றின் உயர்பொறுப்பிலிருக்கும் ஆளுமை ஒருவரை நேர்காணல் செய்தோம். எப்போதும் போல இருபக்கமும் மகிழ்ச்சி, கற்றல், பகிர்வுகள்.  எனக்கு கூடுதலாய் கிடைத்தது ‘குபீர்’ வியப்பு!

நேர்காணல் தொடங்கி ஒரு மணி நேரம் கலந்துரையாடல் முடித்து, கிட்டத்தட்ட என் கேள்விகள் எல்லாம் முடிகின்றன என்னும் நிலையில் அவர் ஒன்றை சொன்னார். 

‘பரமன் சார், நான் உங்க மாணவன் ஒரு வகையில். உங்க வகுப்பு ஒண்ணு அட்டெண்ட் பண்ணியிருக்கேன்!’

( நமக்கு புருவம் நெறிந்தும் உயர்ந்தும் என மாறி்மாறி நிற்க. வாய் ஆங்கில ‘ஓ’ போட)

‘ஊட்டியில நாலு வருஷம் முன்ன ரோட்டரி கவர்னர் ப்ரோக்ராம்ல நீங்க பேசினீங்களே. அப்ப கூட்டத்துல நின்னு கை குடுத்தேன். ஆனா, ஒரு ஸெல்ஃபி எடுத்துக்கல அன்னைக்கு. ஆனாலும் உங்க வீடியோக்கள பாத்துகிட்டேதான் இருக்கேன்! நிறைய கத்துக்கனும் சார் உங்ககிட்ட!’

(வாய் இன்னும் விரிகிறது நமக்கு!)

நம்மை இவருக்குத் தெரியும் என்று தெரியாமலேயே இவ்வளவு நேரம் கலந்துரையாடல் செய்திருக்கிறோம்.

எவ்வளவு பெரிய நிறுவனத்தின் எவ்வளவு பெரிய நிலையில் இருக்கும் மனிதர். எந்த பூடகமும் கொள்ளாமல் உள்ளிருப்பதை அப்படியே சொல்கிறார். கற்கும் வேட்கை கொண்டிருக்கிறார்.

பெரிய மனிதர்கள் பெரிய மனிதர்கள்தான்!

மனிதர்கள் மீதான என் வியப்பு கூடிக்கொண்டேதான் போகின்றது.

– பரமன் பச்சைமுத்து
22.09.2021

( படம் – மெய்நிகர் நேர்காணலில் மூழ்கியிருந்த போது தம்பியொருவன் எடுத்தது )

#PeopleExciteMe
#WriterParaman
#Valarchi
#ValarchiTamilMonthly

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *