வாழ்க்கை என்பது தேடலா

செந்தில் நாதன்: ‘விடைதேடுவதா வாழ்க்கை, வாழ்க்கை என்பது வாழுவதில்லையா?’

பரமன்: தேடலே வாழ்வாக அமையலாம் சிலருக்கு. தேடிக் கண்டடைதல் கடைசியில் நிகழலாம் சிலருக்கு. தொடக்கத்திலேயே கூட நிகழலாம் இன்னும் சிலருக்கு. கண்டடைய வேண்டியது கைக்கு வந்துவிட்டதே தெரியாமல் கால் கடுக்க ஓடிக்கொண்டேயிருப்பதும் வாழ்க்கையாகி விடுகிறது சிலருக்கு.

கண்டடைய ஒன்றுமேயில்லை. ‘தேடித் துழாவ ஒரு துரும்பும் இல்லை போடா மயிரு! எது வேணுமோ அது வரும்!’ என்று வாழ்ந்தவர்களும் உண்டுதானே.

நாவில் நீர் ஊற இனிப்பு, சப்புக் கொட்ட புளிப்பு, சுரீரென ஏறும் காரம், உணர்த்திக்கு உப்பு என ருசித்து சாப்பிடுவதே வாழ்தல் என்பதாய் அமைந்து விடுகிறது சிலருக்கு. ‘சாப்பாடா வாழ்க்கை? வாழ்க்கையில் சாப்பிடவும் செய்வோம்!’ என்று பலதோடு அதுவும் ஒன்றாக கருதப்பட்டு கடக்க முடிகிறது சிலரால்.

சரியாக நெறியாக வாழ்ந்தால் மறுமையில் சிறக்கலாம் என்கின்றன மத நூல்கள். ‘மறுமையோ மண்ணாங்கட்டியோ… அதெல்லாம் தெரியாது!இப்ப வாழ்வேன், அவ்வளவுதான்!’ என்று இம்மையை குறிக்கும் ‘இப்போ ராமசாமி’களும் உண்டு.

‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்!’ எப்படி ஒரு முரணோ, அப்படியே
வாழ்க்கையும் எல்லோர்க்கும் ஒன்றல்ல. ஜிகாதிகள், ஆர்எஸ்எஸ்வாதிகள், கிறிஸ்துவ பாதிரிகள், சமண முனிகள், சீனத்து துறவிகள், சனாதன பற்றிகள், சாமானிய மனிதர்கள் என ஒவ்வொருவருக்கும் வாழ வேண்டிய வாழ்க்கை பற்றிய இலக்கும் வடிவமும் வேறுவேறே.

சாக்கிய முனியின் காலடிப் பற்றி வழி நடக்கும் பௌத்தத்திலேயே வாழ்வு முறை ஹீனயானம், மகாயானம், இந்து மத விஷ்ணுவை ஏற்றுக்கொண்ட இலங்கை தேரயானம் என்றிருக்கையில் சாமானியனுக்கு வாழ்தல் என்பது ஒன்றாகவா இருக்க முடியும்!?

இந்த நிமிடத்தில் இந்த பதிவை தட்டுவது, இடையிடையே மனைவி கொடுத்த சுக்கு மல்லி சோம்பு தேநீரை கண் மூடி உறிஞ்சுவது, இப்படியே வாழும் காலம் வரை உட்கார்ந்து அனுபவிக்க கொஞ்சம் பொருள் வேண்டி அதை நோக்கி உழைப்பது, எதிரே வருபவனுக்கு முடிந்தால் தேவையானால் கொடுக்க முடிந்ததை கொடுப்பது, எதிலும் படாமல் எல்லாவற்றிலும் இயங்கிப் போவது என்றிருக்கிறது ‘வாழ்க்கை வாழ்தல்’ பற்றிய என் இந்த நிமிட புரிதல்…

🌸❤️😄

  • பரமன் பச்சைமுத்து
    22.09.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *