சில பாடல்களின் வரிகளினிடையே

சில பாடல்களின் இடையே ஊடுபயிர் போல பழைய வேறு பாடலின் துண்டை வைத்து அனுப்புவது இசையமைப்பாளரின் சித்து.

‘ஹம் ஆப் கே ஹேன் கவுன்’ பாடல்களில் நடு நடுவே ‘மைனே ப்யார் க்யா’ பாடல்கள் வைத்தது, நதியாவை கேட்டு ‘மாமா உன் பொண்ணக் குடு, ஆமாம் சொல்லிப்புடு’ என்று ரஜினி ஆடிப்பாடும் பாடலில் இடையில் ராஜா… (சச்சடஞ்சச்சடஞ்) ராஜாதி ராஜன் இந்த ராஜா…(சச்சடஞ்சச்சடஞ்)..(சாச்சான்சான்சான்சான்சான்சான்சான்)…’  என்று பொளந்து கட்டுவது, ‘மாயா மச்சீந்திரா…’ நடுவில் ‘கத்தீரிக்கா… குண்டு கத்திரிக்கா’விலிருந்து சில செகண்ட்ஸ் பிட்டைக் கொண்டு வைப்பது, ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா’வில் இடையில் பழைய அச்சு அசல் புராதன பாடலை கொண்டு வந்து சேர்ப்பது, ‘தர்பார்’ நடை தீமில் மிக மிக அழகாக ‘பாட்ஷா’வில் தேவா போட்ட ‘தீம்’மை கொண்டு வந்து இழைய விடுவது, ‘கருத்தம்மா’ கோழி பாட்டிலிருந்து ‘கொக்கோரக்கோ கொக்கோக கோ’வை அப்படியே எடுத்து ‘மின்சாரக் கனவு’ படத்தில் ‘ஹில்தோரா’ என ஸ்டைலாய் மாற்றி வைப்பது என அவர்கள் செய்வதெல்லாம் ரசிகர்களுக்கு அவர்கள் தரும் உயர் விருந்து. அது புரிந்து கொள்ளக் கூடியது.

(ரஹ்மான் தந்த ‘தொட்டால் பூ மலரும்’ ‘பொன் மகள் வந்தால்’ இரண்டும் முற்றிலும் வேற வகை மேற்படி வகையில் சேராது. க்ளாஸ்!)

ஆனால், இன்னொரு வகையும் உண்டு. சில பாடல்களை கேட்கும் போது, ஏதோ ஓர் இடத்தில் ஏற்கனவே கேட்ட பழகிய பாடலின் நடுவரிகள் வந்து ஒட்டிக்கொள்வது போல தோன்றும் நமக்கு மட்டும். ஏனென்று விளக்கவும் முடியாது, யாருக்கும் புரிய வைக்கவும் முடியாது.

‘எள்ளுவய பூக்கலியே
ஏறெடுத்தும் பாக்கலியே!’ என இரண்டாம் வரி இசைக்கும் போது, ‘ஒத்தையா போகுதம்மா என்ன உசிரு, உசிரு… வெத்தலப் போல் வாடுதம்மா என்னோட மனசு’ என்று ‘ஒத்தையடி பாதையில ஊருசனம் தூங்கையில’ என்ற ‘ஆத்தா உன் கோவிலிலே’ படத்து தேவா இசையமைத்த பாடலின் இடைவரிகள் வந்து விழுந்து ஓடுகின்றன என்னுள்ளே. ஒரு வேளை இசை தெரியா ஞானசூனியம் என்பதால் போல.

– பரமன் பச்சைமுத்து
26.09.2021

#ArRahman
#IlaiyaRaja
#TamilSongs
#TamilFilmMusic
#ElluVayaPookaliye
#Darbar

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *