13: புவனகிரி பள்ளி  – வேதம் புதிது படமும் தமிழ்மணி டீச்சரும்

*13*

( சென்ற பதிவைப் பார்த்துவிட்டு ‘யார் அந்த சேரன்?’ என்று பெங்களூரில் இருக்கும் ஸ்ரீதர் திரிசங்கு உட்பட பலரும் கேட்டிருந்தனர்.

‘சேரன்’ என்பது மாற்றப்பட்ட பெயர் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.  சென்ற வாரம் புவனகிரிக்கு வந்திருந்த போது புவனகிரி பள்ளி மாணவர்கள் பலரை வெள்ளியம்பலம் சுவாமி மடம் கோவிலில் வரவழைத்து ஒரேயிடத்தில் நிறுத்தி இன்ப அதிர்ச்சி தந்தார் சேத்தியாதோப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன்.

இதுவரை வெள்ளியம்பலம் சுவாமிகள் கோவிலின் உள்ளே நான் வந்ததே இல்லை. அசந்து போனேன்! அவ்வளவு சிறப்பாக உள்ளது கோவில்.

நாம் சென்ற பதிவில் ‘சேரன்’ என்று குறிப்பிட்டிருந்த அந்த பெருமாத்தூர் தோழனை வரவழைத்திருந்தார்கள். எல்லோரையும் ஒரே இடத்தில் பார்த்ததில் கூடுதல் மகிழ்ச்சி.  அவரிடம் அனுமதி பெற்றதால் இப்போது உண்மைப் பெயரை பகிர்கிறோம்… அவர் ‘பெருமாத்தூர் பாண்டியன்!’ )

*13*

*புவனகிரி பள்ளி  – வேதம் புதிது படமும் தமிழ்மணி டீச்சரும்*

புவனகிரி பள்ளி என்று இல்லை, பொதுவாகவே மாணவர்கள் தாங்கள் சமீபத்தில் பார்த்த திரைப்படத்தை சக மாணவர்களிடம் உணர்வும் பரவசமும் பொங்க பகிர்வது அந்நாட்களில் இயல்பு. நானெல்லாம் ஒரு படம் பார்த்து விட்டு ஒன்பது நாட்கள் கதை சொல்பவன்.

‘வேதம் புதிது’ திரைப்படம் வெளியாகி தமிழகமெங்கும் ஓர் அலையை உருவாக்கி ஓடிக்கொண்டிருந்த நேரம் அது.  பாரதிராஜா சத்யராஜை வைத்து ‘பாலுத் தேவர்’ என்ற பாத்திரம் கொடுத்து நேர்த்தியாக செய்திருந்த படம் அது. தெலுங்குத் திரையுலகின் அக்கினேனி நாகேஸ்வர்ராவ் குடும்பம் பற்றியெல்லாம் அறியாத ஆரம்பகால அமலா அதில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். 
சிதம்பரத்திலும் ‘வேதம் புதிது’ வெளியாகியிருந்தது.

சரி, இதற்கும் புவனகிரி பள்ளிக்கும் என்னய்யா சம்மந்தம் என்கிறீர்களா?   பார்ப்போம்.
….

*தமிழ்மணி டீச்சர்!*

சராசரி உயரம், மாநிறத்திற்கும் கருப்பிற்கும் இடையில் சமரசம் செய்து கொண்ட நிலையில் நிறம், கருகருவென நீண்ட கூந்தல்,  தடித்த சட்டம் போட்ட கண்ணாடி, இனிமையான குரல், மாணவர்களிடம் வாஞ்சை, பாடங்களைத் தாண்டி உரையாடும் பண்பு இவைகளை எல்லாம் சேர்த்தால் உங்களால் புவனகிரி பள்ளியின் தமிழ்மணி டீச்சரை பார்க்க முடியும்.

புவனகிரி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பிற்கும் பத்தாம் வகுப்பிற்கும் பாடங்கள் எடுத்த அவர் குறைந்த பட்சமாக எட்டாம் வகுப்பிற்கும் எடுத்தார். சிலருக்கு வகுப்பாசிரியர், சிலருக்கு ஆங்கிலம், சிலருக்கு அறிவியல் என்று எல்லாருக்குமான ஆசிரியர் அவர்.  ‘சைக்ளோட்ரான்’ ‘சவ்வூடு பரவல்’ ‘புரோட்டான்’ ‘நியூட்ரான்’ ‘கார்பன் டை ஆக்சைடு’ ‘கார்பன் மோனாக்சைடு’ ‘ஆக்ஸிஜன்’ ‘சோடியம் குளோரைடு’ என அவ்வயதின் புரியாத பெரிய சங்கதிகளை புரியும் படி எளிதாக மாணவர்களுக்குள் இறக்கியவர் தமிழ்மணி டீச்சர்.

அன்று அவ்வயதில் புரியாவிட்டாலும் இன்று ‘தமிழ்மணி’ என்ற அவரது அந்தப் பெயரை திரும்ப உச்சரிக்கையில் உங்களுக்கே புரிந்திருக்கும் திராவிடக் கொள்கையும் தமிழ்ப்பற்றும்  கொண்ட குடும்பத்தில் வளர்ந்தவர் அவர் என்று.  ‘எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறாய் பரமன்?’ என்பது உங்கள் கேள்வியானால், பதிலாக நிகழ்வொன்றைத் தருகிறேன்.

ஆசிரியர்களுக்கு திடீரென்று வரும் பணிகள் அல்லது தவிர்க்க முடியாத சூழல்கள் வரும் போது தன்னுடைய வகுப்பை சக வேறொரு ஆசிரியரிடம் எடுக்கச் சொல்லி கேட்பது என்பது அப்போதெல்லாம் இயல்பாக நடந்த ஒன்று. சில சமயங்களில் இரண்டு வகுப்புகளையும் ஒன்றாக சேர்த்து ‘கம்பைண்டு க்ளாஸ்’ என்று எடுப்பார்கள். இரண்டு வகுப்புகளும் நடக்காது ஒரே பட்டியில் அடைக்கப்பட்ட இரண்டு வீட்டு மாடுகளைப் போல உற்சாகமாக கிடப்போம். கழுத்துச் சதங்களாக ‘கலகல’வென மாணவர்களின் பேச்சு சத்தம் இரட்டை மடங்கு எழும்.

அப்படித்தான் நடந்தது தமிழ்மணி டீச்சரின் வகுப்பொன்று. முதல் மாடி அசோக மரத்தையொட்டிய வடகிழக்கு மூலை வகுப்பான எங்களது ‘டென்த் பி’க்கு எதிர்ப்புற தென்கிழக்கு மூலையிலிருந்த ‘டென்த் ஏ’வை வரவழைத்து ‘கம்பைண்டு க்ளாஸ்’க்கு ஏற்பாடு செய்தார்கள். அமரும் பெஞ்ச்சும் வைத்து எழுதும் டெஸ்க்கும் இணைந்தேயிருக்கும் படியான அமைப்பு கொண்ட ஒரு நீள் இருக்கையில் வழக்கமாக நான்கு பேர் அமர்வோம் என்றால், ‘கம்பைண்டு கிளாஸ்’ஸில் நெருக்கி நெருக்கி ஆறு பேர் கூட அமருவோம்.  எங்கே இடம் உண்டோ அங்கே அமர்வர். ‘ஒரு பீரியட்தானே!’ என்ற உணர்வே இருபக்கமும் ஓங்கி நிற்கும்.

தமிழ்மணி டீச்சரின் ‘கம்பைண்டு க்ளாஸ்’ வித்தியாசமானது. வெறுமனே பேசி கழிக்காமல் வேறு விதத்தில் எங்களை திருப்பினார்.  அறிவியல் பாட நூலை பிரித்து அத்தியாயம் இரண்டை தேர்வு செய்து ‘ஆளுக்கொன்று எடுங்கள் பார்ப்போம்!’ என்று இரண்டு வகுப்புகளுக்கும் தந்தார்.  எழுந்து புத்தகத்தைப் பார்த்து பாடம் படிப்பதல்ல அது, பாடம் எடுப்பது!  அதாவது, அப்போதே படித்துப் பார்த்துவிட்டு எழுந்து வகுப்பறையில் மாணவர்கள் முன்னே நின்று அப்போதே பாடம் எடுக்க வேண்டும், ஓர் ஆசிரியனைப் போல. 

எந்த அடிப்படையில் தேர்வு செய்தார் என்று தெரிய இல்லை.
‘டென்த் ஏ’வில் பால விநாயக முருகன், ‘டென்த் பி’யில் பரமன் என நாங்கள் இருவரும் எழுப்பப்பட்டோம்.   வகுப்பின் நீண்ட கரும்பலகையில் சாக்பீஸால் எழுதி ஆளுக்கொரு பாடமெடுத்தது இன்னும் நினைவிருக்கிறது. 

(முப்பத்திரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பால விநாயக முருகனை சபீபத்தில் புவனகிரி பள்ளியில் சந்தித்த போது, ‘பரமா! நானும் நீயும் தமிழ்மணி டீச்சர் க்ளாஸ்ல ஒரு லெசன் எடுத்தோமே! நீ கூட அங்கேயே எனக்கு திருத்தம் சொன்னியே, கரெ்க்ட் பண்ணியே!’ என்று கேட்டு என்னை கதிகலங்க வைத்தான்)

அவர் கணித்த நேர அளவை விட நாங்கள் சீக்கிரம் முடித்து விட்டோம் போல. முதல் பெஞ்ச்சில் நாங்கள் ஏதேதோ கதைத்துக் கொண்டிருக்க, ஸ்ரீதரோ, பரமகுருவோ, பாலுவோ அல்லது அடுத்த வகுப்பிலிருந்து வந்திருந்த மாணவன் எவனோ அப்போது வெளியாகி சக்கைப் போடு போட்டுக்கொண்டிருந்த ‘வேதம் புதிது’ படத்தை சிதம்பரத்தில் பார்த்து விட்டு வந்து ‘கம்பைண்டு க்ளாஸ்’ஸில் பேசினான்.

அது தமிழ்மணி டீச்சரின் காதில் வந்து விழ, மகிழ்ச்சியோடு உரையாடலில் உள்வந்து கலந்து கொண்டார்.

‘பார்த்திட்டியா? படம் பிடிச்சிருக்கா?’

‘நல்லாருக்கு டீச்சர். சத்யராஜ் சூப்பர் டீச்சர்’

‘ம்’

‘பாலுத்தேவர்ங்கறது நீங்க வாங்கன பட்டமா? நான் மேல ஏறி வந்துட்டேன். நீங்க இன்னும் கீழயே நிக்கறீங்களே! அப்பா அருமையா இருக்கும் டீச்சர்’

(கவனிக்க – இப்போது நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் ‘சூப்பரா இருக்கு’ வார்த்தை பயன்பாடு அப்போதெல்லாம் இல்லை)

‘கடைசியில தப்புப் பண்ணிட்டாரே இயக்குநர்!’

‘ !!!’

‘நாத்திகத்தை கொன்னுட்டாரே! அத அப்படியே முடிக்க பாரதிராஜாவுக்கு துணிச்சல் இல்லையே! இதே பாலசந்தரா இருந்தா முடிவையே மாத்திருப்பாரே! துணிச்சலா பண்ணிருப்பாரே!’

பாரதிராஜா, பாலசந்தர் என்ற பெயர்கள் எங்களுக்குள் நுழைந்தன. தமிழ்மணி டீச்சர் திராவிட கொள்கை கொண்டவர் நாத்திக பற்றாளர் என்பது அப்போதுதான் உறுதியானது. 

பாளையக்காரத்தெரு செந்திலும் நானும் தமிழ்மணி டீச்சருக்கு டீ வாங்கி வர ஓடுவோம் பள்ளிக்கு எதிரில் இருக்கும் கடையில்.   அதன் பிறகு தமிழ்மணி டீச்சர் என்னவானார் என்பது தெரியாது. ஆனால் வேறொன்று மட்டும் தெரியும்.

அன்று கம்பைண்டு க்ளாஸில் மாணவர்களில் இரண்டு பேரை எழுப்பி ஆசிரியரைப் போல வகுப்பெடுக்க வைத்தார் தமிழ்மணி டீச்சர். மாணவர்கள் அமரும் பக்கமே எப்போதும் இருந்த ரெண்டு மாணவர்களை எழுப்பி கரும்பலகையின் அருகில் ஆசிரியர் பக்கத்திலிருந்து உணர வைத்து தொடங்கி விதை போட்டார் தமிழ்மணி டீச்சர் அன்று. 

இத்தனையாண்டுகளுக்குப் பிறகு, திரும்பிப் பார்க்கையில் உடல் அதிர்கிறது. தமிழ்மணி டீச்சர் போட்ட விதைகள் முளைத்து வளர்ந்து நிற்கின்றன. ஆமாம்… ஒருவன் பால விநாயக முருகன் வேதியியல் பட்டம் பெற்று ஆய்வுக் கூடங்களிலெல்லாம் பணி செய்துவிட்டு கடைசியில் இப்போது அதே புவனகிரி பள்ளியில்  மாணவர்களை நோக்கி நின்று கரும்பலகையில் எழுதும் வேதியியல் ஆசிரியனாக நிற்கிறான்.

இன்னொருவனாகிய நான் கணிப்பொறியாளனாகி அமெரிக்கா, ஜப்பான், இலங்கை, சிங்கப்பூர், ஆப்பிரிக்கா எல்லாம் சுற்றிவிட்டு வெண் பலகையில் எழுதிக் கொண்டு மாணவர்களை பார்த்து வாழ்வியல் பாடமெடுக்கும் மலர்ச்சி ஆசிரியனாக நிற்கிறேன்.

தமிழ்மணி டீச்சர் என்றில்லை, ஒவ்வொரு ஆசிரியரும் எதையோ விதைத்து விட்டே செல்கின்றனர் நம்முள்ளே.

அதனால்தான்
7 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான என் முதல் நூலான ‘மனப்பலகை’யில் ஆசிரியர் பற்றிய கவிதையோன்றின் முதல் வரிகள் இப்படித் தொடங்கும்…

‘எங்கிருந்தோ வந்து
என்னுள் என்னவெல்லாமோ விதைத்து விட்டு
எங்கேயோ சென்ற
என் ஆசிரியர்களே…!’

உண்மைதானே!

( தொடரும்)

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
24.12.2021

[email protected]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *