ஆண்ட்ராய்டு பாட்டி

wp-1646903254254346934298526907611.jpg

‘அத்தை! இது என்ன சட்னி!?’

என் மனைவியின் அம்மாவான, என் அப்பாவை அண்ணன் என்று விளித்த அத்தை, பைபாஸ் சர்ஜரி, கல்லீரல் செயலிழப்பு காரணங்களால் மாமா இறந்ததிலிருந்து எங்களோடுதான் வசிக்கிறார். அத்தைக்கு வயது 75.

என் வீட்டில் அதிகாலைப்பறவைகள் என்றால் நானும் அத்தையும்தான். மற்றவர்கள் எழும் முன்னே எழுந்து ‘மெட்ராஸ் மில்க் ஏ2 மில்க்’ பாட்டிலை எங்களில் ஒருவரே எடுப்போம். என்னைப் போலவே காலை எழுந்தவுடன் வானம் பார்ப்பார் அத்தை.  எழுந்தவுடன் கிழக்கு பக்கம் நோக்கி நின்று தலைக்கு மேல் கை கூப்பி சில நொடிகள் அப்படியே நிற்பார்.

சமையல், வீடு நிர்வாகம், பள்ளியில் பணி என எழுந்ததிலிருந்து பரபரவென்று இயங்கும் என் ஆசிரிய மனைவி பள்ளிக்குப் புறப்படவும் சமையலுக்கும் சிறு சிறு ஒத்தாசை செய்வார் அத்தை.

ஆன்லைன் வகுப்பில் இருக்கும் மகள்களில் ஒருவரை அழைத்து வாஷிங் மெஷினிலிருந்து துணியை வாளியில் அள்ளி நிறைத்து தூக்கி வந்து பால்கணியில் வைக்கச் செய்து, மேலிருக்கும் துணி உலர்த்தும் கொடியை கூண்டோடு இறக்கி தாழ்த்தி விட வைத்து, அவளை அனுப்பிவிட்டு துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து கொடியில் உலத்தப் போடுவார் அத்தை.

‘யாரு உன்ன இதையெல்லாம் செய்யச் சொன்னது இப்ப?  இப்படி எதையாவது தூக்க வேண்டியது, நவுத்த வேண்டியது. அப்புறம் கால வலிக்குது, இடுப்ப வலிக்குதுன்னு ஒக்காற வேண்டியது!’ என்று என் மனைவி அக்கறைக் கோபத்தில் அவ்வப்போது கடிந்து கொள்வதை காதில் வாங்குவதேயில்லை அத்தை.

ஊரிலிருக்கும் என் அம்மாவைப் போலவே அத்தையும். ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டேயிருக்க வேண்டும் அவர்களுக்கு. அந்தத் தலைமுறையே இப்படித்தான், வேலை செய்யாமலிருந்தால் சோர்ந்து உடம்பு சரியில்லாமல் போய்விடும் அவர்களுக்கு.

காலைச் சந்தடிகள் அடங்கிய பிறகு குளித்து விட்டு பூசை மாடத்தின் முன்னே பிளாஸ்டிக் முக்காலியை இட்டு அதன் மீதமர்ந்து ‘ஓம் xxxxx நமஹா’ என்று எதையோ முணுமுணுத்தபடி பூசனைகள் செய்வார். அதற்கடுத்து சோஃபாவில் அமர்ந்து ‘சிவாயநம’வோ ‘ஸ்ரீராம ஜெயம்’மோ எழுதித்தள்ளுவார்.

அதற்கடுத்து வாசிப்பு. வீட்டுக்கு வரும் நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்களை ஒரு வரி விடாமல் தேர்வுக்குப் படிப்பதைப் போல் படிக்கும் வரிசையில் அப்பா, அம்மா, என்னோடு அத்தையையும் சேர்த்துக் கொள்ளலாம். 

மாலை என் மலர்ச்சி வகுப்புக்கு நான் புறப்பட்ட பிறகு தொலைக்காட்சியில் திளைப்பார் அத்தை. ‘எப்படித்தான் இந்த சீரியலையெல்லாம் நீங்க பாக்கறீங் களோ!’ என நான் நினைக்கும் வண்ணம் அவற்றில் திளைத்துக் கிடப்பார்.

இப்படியிருந்த அத்தை இப்போதெல்லாம் மாறி விட்டார். புதுச்சேரியில் செல்ஃபோன் சர்வீஸ் வணிகத்தில் இருக்கும் அவரது மகன் ஆப்பிள் ஐ ஃபோன் ஒன்றை கொடுத்து விட்டுப் போனான்.   தட்டித் தடவி அதை கற்க ஆரம்பித்தார் அத்தை. வாட்ஸ் ஆப்பில் வந்தார். ஊரில் தொலைவில் உள்ள உறவுகள் ஏற்கனவே வாட்ஸ்ஆப்பில் இருந்திட வியந்து மகிழ்ந்து உறவாடினார்.

செல்ஃபோன் பயன்பாட்டை முழுதாக கற்றுத் தேர்ந்த அவருக்கு அடுத்த வெர்ஷனாக ஓர் ஆண்ட்ராய்டு ஃபோனை தந்தனர். அதன் அமைப்பு இன்னும் எளிதாய் இருந்ததில் நேரம் கூட்டினார்.

இந்த நேரத்தில்தான் எங்கிருந்தோ வந்த எலி ஒன்று மூன்றாம் தள மொட்டை மாடியிலுள்ள டிஷ்ஷிலிருந்து முதல் தளத்திலிருக்கும் எங்கள் வீட்டுக்கூடத்து டிவிக்கு வரும் வயரை எங்கோ ஓரிடத்தில் கடித்துக் குதறி வைத்து விட்டு ஓடிப்போனது (வயரைக் கடிப்பதில் அதற்கு என்ன கிடைக்கும், எப்படியும் அதை உண்ணவும் முடியாது! எலியா அல்லது அணிலா!?).

‘டாடா ஸ்கைக்கு பணம் கட்டலையோ!’ ‘வேலைக்காரம்மா தூசு தட்டனதுல செட்டாப் பாக்ஸ் லூசாயிடுச்சி போல!’ ‘டாடா ஸ்கை கஸ்டமர் கேர் கால் பண்ணனும்’, ‘மேடம் கீழே டாட்டா ப்ளே யூனிட்லேருந்து வயர்ல வர்ற பவர் மேல வரலை மேடம். மீட்டர்ல வரலை. நடுவுலதான் ப்ரச்சினை. எலக்ட்ரீஷியன்தான் வரணும்!’ ‘செவுத்துல கண்ட இடத்துல துளை போட முடியாது, ஏற்கனவே குடுத்துருக்கற ஹோல்ஸ் வழியாதான் கேபிள் லே பண்ணணும். வெளிய கேபிள விட முடியாது. இந்த பில்டிங்க்கு பாக்கற எலக்ட்ரீஷியன் தேவராஜனையே வரச் சொல்லணும்’ ‘தேவராஜன் வேறொரு சைட்ல இருக்காறாம் நாளன்னைக்குத்தான் வருவாரு!’ ‘சார், எலிதான் கடிச்சிருக்கு, கேபிளை ஜாயிண்ட் பண்ண கனெக்டர் இல்ல நம்ம கிட்ட, டாட்டா ஸ்கைகாரங்கள கூப்படனும் சார்’ ‘கேபிளை ஜாயிண்ட் பண்ண வேணாம் ஏற்கனவே ஹாட்ஸ்டார் ஸ்லோவா தொங்குது, க்வாலிட்டி மிஸ்ஸாவும், புது கேபிள்மாத்துங்க!’ ‘சரி டாட்டா ஸ்கை காரங்க எலக்ட்ரீஷியன் ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கற மாதிரி டைம் சொல்லுங்க. நாளன்னைக்கா? சரி!’ என்று பல நிலைகளை கடந்து எல்லாம் சரியாக 2 வாரங்கள் ஓடிப்போயின. இடையில் நானும் காரைக்குடி, கடப்பா என ஓடிவிட்டு் வருவதற்குள் அத்தை தொலைக்காட்சியை விட்டு விட்டு முழுதாக ஆண்ட்ராய்டை எடுத்துக் கொண்டார்.

‘ஐ ஃபோன் பாட்டி’ ‘ஆண்ட்ராய்டு பாட்டி’ என்று பெயர் சூட்டலாம் என்னுமளவிற்கு பயன்பாடு செய்தார்.

சோஃபாவில் உட்கார்ந்து ‘அஹ்ஹஹ்ஹா’ என்று செல்ஃபோனைப் பார்த்துக் கொண்டே சிரிப்பார். சுகி சிவம், சாலமன் பாப்பையா, அறுபடைவீடு, சிவராத்திரி கொண்டாட்டங்கள் எல்லாம் கையடக்க ஆண்ட்ராய்டிலேயே கிடைத்தன அவருக்கு.

காலையுணவிற்கு தரையிலமர்ந்து தட்டிலிருந்து தோசையை பிய்த்து சட்டினியில் தோய்த்து வாயில் இடுகிறேன். சுருக்கென்று ஆனால் சுவையாக இருந்த சட்னி என்ன சட்டினி என்று தெரியவில்லை.

‘எக்ஸாம் ட்யூட்டி’ என்று மனைவி அதிகாலையிலேயே புறப்பட்டுப் போய்விட, இன்று காலையுணவு அத்தை கை வண்ணம்.

‘அத்தை! இது என்ன சட்னி?!’

‘நல்லா இருக்குங்களா, இல்லையா?’

‘சூப்பரா இருக்கு. சுறுக்குன்னு இருக்கு. புதுசா இருக்கு, என்னன்னு கண்டு பிடிக்க முடியல. அதான் கேட்டேன்.’

‘சின்ன வெங்காயம் பச்சையா, வர மிளகாய், புதினா, கொஞ்சம் தேங்கா எல்லாம் போட்டு அரைச்சு செஞ்சது’

‘ஓ!’

‘யூ ட்யூப்ல பாத்து கத்துகிட்டேன்!’

‘ஊஊஊஊப்ஸ்!’

வாயில் தோசை, மெள்ள முடியாமல் கீழ்த்தாடை விழுந்து வாய் பிளந்து உறைந்து உட்கார்ந்திருக்கிறேன் நான் என்பது தெரியாமல் சமையல்கட்டிலிருந்து மறுபடியும் 75 வயது அத்தை சொல்கிறார்,

‘யூ ட்யூப்ல பாத்து கத்துகிட்டேன்!’

….

– பரமன் பச்சைமுத்து
திருவண்ணாமலை
09.03.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *