செக்யூரிட்டி செக்கின்

wp-16493315866315944067076977724616.jpg

மணக்குடி போகும் போதெல்லாம் இது நடக்கும். வீட்டின் வெளிச்சுவரையொட்டிய படியே செல்லும் ஒன்றரையடி  நீள் சிமெண்ட் மேடையில் செருப்பை அழகாக கழற்றி வைத்து விட்டு உள்ளே போவோம். மாலை வெளியில் வந்தால் செருப்பு இருக்காது.

வாசல் தெளித்து இருபது புள்ளி அரிசி மாவு கோலம் போடும் அம்மா, அப்படியே நீண்ட சிமெண்ட் மேடையிலும் நீர் விட்டடித்து விளக்கமாற்றால் ஒதுக்கி, மேடையிலும் வரிவரியாய் கோடிட்டு கோலம் போட்டு விடுவார். அம்மா இதை செய்வதற்கு உதவியாக மேடையிலிருக்கும் எல்லா செருப்புகளையும் எடுத்து ஒரு பெட்டியில் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அடைத்து விடுவார் அப்பா.
அல்லது சுவற்றில் இருக்கும் செருப்பு மாடத்தின் உள்ளே அடைத்து விடுவார்.

‘சிவா! செருப்பா தேடற, அதில போட்டு வச்சிருக்கேன் பாரு!’

பதறி ஓடுவேன், எங்கெங்கோ போய் எதையெல்லாமோ மிதித்த ஒரு செருப்பின் அடி, ஒருவரது செருப்பின் அடி இன்னொரு செருப்பின் இன்னொருவரின் செருப்பின் மேற்பக்கத்தின் மீது அமுங்கி உட்கார்ந்திருக்கும். பளபளவென்று போட்டிருந்த பாலிஷ் எல்லாம் கூட நாசமாகியிருக்கும்.  நோண்டி விலக்கி பிய்த்து செருப்பை  வெளியில் எடுத்தால் ‘ங்ஞே!’  என்றிருக்கும் அது.

அம்மாவையோ அப்பாவையோ எதுவும் சொன்னதில்லை. ‘அம்ம்ம்மா!’ என்று குரல் மட்டும் அனிச்சையாய் வரும் நம்மிடமிருந்து.

வேறொரு நாள்
‘சிவா! மாடத்தில விடு செருப்ப’ என்று சொன்ன அப்பாவிடம் இதை விளக்கினேன். ‘ஆகா!’ என்றவர் விழிகள் விரிய உற்சாகமாய் கேட்டுக்கொண்டார், அடுத்த மேடைச் சொற்பொழிவொன்றில் ‘மகனிடம் செருப்பு வைப்பது எப்படி என்று கற்றுக் கொண்டேன்!’ என்று மகிழ்ச்சியாய் பகிர்ந்தும் விட்டாராம்.

மைசூருக்கு பறக்கும் இண்டிகோவில் ஏறுவதற்கு சென்னை விமான நிலையத்தில் நுழைந்தேன் இன்று. அடிக்கடி விமானப் பயணங்கள் கொள்வதால், செக்யூரிட்டி செக்கின் பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் ஓரளவிற்குப் புரிந்து அதற்கென தயாராகவே வருவது என் வழக்கம்.
மொபைல் சார்ஜர், பென் ட்ரைவ், கேபிள்ஸ், 220 – 140 ஏசி அடாப்டர் என பவர் கார்டு ஐட்டங்கள் பேக் பேக்கில் இருந்தால் ஸ்கேனிங்கில் நிறுத்தி நம்மை கூப்பிட்டு பிரித்துக் காட்டச் சொல்கிறார்கள் என்பது அனுபவத்தில் உணர்ந்து, இவற்றை  வைப்பதற்கென்றே சிறு மெல்லிய ரெக்ஸின் பை கொண்டு வந்து, அந்தப்பையில் அவற்றை வைத்து தனியாக ட்ரேயில் ஓட விட்டு ‘ஜிங்க்’கென்று நொடிகளில் செக்யூரிட்டி செக்கின் முடிக்கக் கற்றுக் கொண்டேன் இப்போதெல்லாம். அதே கதைதான் இன்றும்.

இலங்கை விமான நிலையத்தின் பரிசோதனை கெடுபிடிகளை முன்பே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தோம், ‘துபாயில் கூட இப்படித்தான்!’ என்று பின்னூட்டம் கூட எழுதியிருந்தார்கள் சில நண்பர்கள்.  சென்னை விமான நிலையத்திலும் அது நடந்தது இன்று.

பேக் பேக்கிலிருந்து பவர் கேபிள்ஸ் பொருள்கள் நிறைந்த ரெக்ஸின் பையை எடுத்து தனி ட்ரேயில் வைத்து, இடுப்பிலிருந்து பெல்ட்டை கழற்றி உருவி சுற்றி அதோடே வைத்து ட்ரையை பெல்ட்டில் அனுப்பிவிட்டு, ஏர் பாட், மொபைல் ஃபோன், வாட்ச் என எல்லாவற்றையும் நம் அமெரிக்கன் டூரிஸ்டரின் முதல் ஜிப்பைத் திறந்து உள்ளே போட்டு மூடி ட்ரேயில் வைத்து தள்ளி விட்டேன். ‘ ‘எஃப் ஐ ஆர்’ படத்துல இந்த ஸ்கேனிங்லதான் விஷ்ணு விஷாலோட செல்ஃபோன அடிப்பாங்க! நல்லது நாம ட்ரேயில ஓப்பனா வைக்கறது இல்ல, பேக் உள்ளதான் போடறோம்!’ என நினைத்த படி பாதிகாப்பு சோதனை வரிசையில் நிற்க நகருகிறேன்.

‘ஸீ… ஹீ ஈஸ் ரிமூவிங் பெல்ட் ஆல்ஸோ, வாட்ச் ஆல்ஸோ!’ தூரத்தில் வரிசையில் நின்ற ஒரு வட இந்திய இளைஞன் என்னைக் காட்டி.

‘இன்ஸேன்! நாட் நெஸசரி. ஜஸ்ட் கீப் லேப்டாப் அவுட் சைட்’ – பிங்க் ஃப்ரேம் போட்ட ஸ்பைக் வைத்த எந்த நொடியும் பிட்டத்திலிருந்து அவிழ்ந்து கீழை விழலாம் என்ற அளவில் பேண்ட் அணிந்த இளைஞன் அவனுக்கு தோள்களைக் குலுக்கி பதில் சொல்ல, புன்னைகையோடு அதே வரிசையில் சேர்கிறேன்.
‘யே! யு நீட் டு ரிமூவ் த பெல்ட் ஃபார் ஸகேனிங்!’ என்றேன் நானாகவே அழைத்து. ‘நாட் நெஸசரி!’ என்றான் ஸ்பைக்.  ‘ஓக்கே! தேர்யு கோ!’ என்று சொல்லி வரிசையில் நகர்கிறேன்.

உலோகம் ஏதும் இருக்கிறதாவென கண்டறியும் இயந்திர வளைவில் நுழைந்து கடந்து ஒவ்வொருவராய் பாதுகாப்பு சோதனைக்கு முன்னேறுகிறார்கள். ‘ஹாத் ஊப்பர்’ ‘மாஸ்க் நீச்சே’ ‘மாஸ்க் டாலோ!’ என்று மட்டுமே பேசும் அடித்து விடுவது போல் பேசும் அதிகாரியின் சோதனையைக் கடந்தால் பாதுகாப்பு சோதனை முடிந்தது. உள்ளே போய், ‘ஐடி’யில் ஒரு மினி காப்பி குடித்து விட்டு் நாம் செல்ல வேண்டிய வாயில் எண்ணிற்கு போய் விடலாம்.

‘இன்ஸேன்! ரப்பிஷ்!’ என்று அடிக்கடி தோள் குலுக்கிக் கொண்டேதான் இருந்தான் பேண்ட் அவிழும் நிலை கொண்ட ‘ஸ்பைக்’ மேன்.(ஸ்பைக்கே பழைய ஃபேஷன்தான்!) அடுத்து அவனுக்கு முன் நின்ற அந்த வடவன் உள்ளே நுழைந்தான். போன வேகத்தில் வெளிறி கோபமாக வெளியே வந்தான். என்னைக் காட்டி ‘ஸ்பைக்’கிடம் கத்தினான். ‘பெல்ட்ட கழட்டி ட்ரேயில வச்சி ஸ்கேனிங்கல வுட்டுட்டு, மறுபடியும் லைன்ல வா! போ! போ!” என்று விட்டார் பாதுகாப்பு அதிகாரி.

‘இன்ஸேன்!’ என்று சொல்லிக் கொண்டே அவனோடு சேர்ந்து போனான் ஸ்பைக்கும். 

உலோகம் கண்டறியும் வளைவை கடந்து சிறு மேடையேறி அதிகாரி முன் நிற்கிறேன். இலங்கை விமான நிலையத்தில் நடந்த அதே சங்கதி இங்கும்.

ஹரே பைய்ய்யா, ரிமூவ் யுவர் ஷீஸ், புட் இன் ட்ரே, ஸ்கேன்!’

(இது வரை எப்போதும் ரீபோக் செருப்பை ஸ்கேனிங் செய்ய கேட்டதில்லை அவர்கள்!)

‘திஸ் ஈஸ் நாட் ஷூ, திஸ் ஈஸ் செப்பல், சாண்டல்!’

‘ஹாங்… யே, ஃபுல்லி க்ளோஸ்டு நா,  ஸ்கேன் ச்சாஹியே!’

திரும்ப வெளியே வந்து்ஒரு ட்ரேயை எடுத்து செருப்பை கழற்றி அதில் இட்டு பெல்ட்டில் நகர்த்தி விட்டு திரும்பவும் வரிசைக்கு வருகிறேன், ஆறேழு பேர் அதற்குள் வரிசையில் அவர்கள் பின்னே நிற்கிறேன். பெல்ட்,செருப்பு என எல்லாமும் உருவப்பட்டு வெறுங்காலோடு வரிசையில்.

இடது பக்க இயந்திரத்தில் செருப்பு ஸ்கேனிங், வலது பக்க இயந்திரத்தில் பை, பெல்ட், ஃபோன் ஸ்கேனிங், நடு வரிசையில் எல்லாம் உருவப்பட்டு வெறுங்காலோடு நிற்கும் எனக்கு ஸ்கேனிங். புன்னகையோடு நகர்கிறேன்.

(கண்டுபிடித்தாயிற்று! கால்களை முழுதும் படியான காலணிகள், உலோக மாட்டிகள் (மெட்டல் பக்கிள்ஸ்), ஹை ஹீல்ஸ் கொண்ட காலணிகள் ஆகியவை இருந்தால் அவற்றிற்கு ஸ்கேனிங் கட்டாயம். முன்பே தயாராகவும்! வரிசையில் நின்று, திரும்ப ஓடி அலைய வேண்டாம்!)

‘மாஸ்க் நீச்சே!’ ‘ஹாத் ஊப்பர்!’ ‘பாக்கெட் மே மெட்டல் ஹே! காயின்ஸ்?’ என்ற அதிகாரியின் பாதுகாப்பு சோதனைகளை முடித்து வெளியில் வந்து இடது பக்க வரிசையில் செருப்பு ட்ரே வராதது கண்டு, வலது பக்க வரிசைக்கு போய் என் ட்ரேயை கண்டறிந்து பேக் பேக்கை, ரெக்ஸின் பையை, பெல்ட்டை எடுக்கும் போது, மறுபடியும் ‘எஃப் ஐ ஆர் – திரைப்படத்து விஷ்ணு விஷாலின் ஃபோன் ட்ரேயில் தொலையும் காட்சி’  நினைவுக்கு வர, ‘நாம பக்காவா பைக்குள்ள வச்சிட்டோமே!’ என்று நினைத்துக் கொண்டே நகர்கிறேன்.

‘சார்… ஐ கெப்ட் மை நியூ இயர் ஃபோன் இன் த ட்ரே! இட்ஸ் மிஸ்ஸிங்!’  தலைமயிரும் தாடிமயிரும் ஒரே அளவு கொண்ட ஓர் இளைஞன் அதிகாரியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

அவனைக் கடந்து முன்னேறி மறுபடியும் இடது பக்க வரிசைக்கு வருகிறேன்.

‘அதோ… என் செருப்பு ட்ரே! வாட்… டேய்… யார்ரா அது! அட…!’

என் செருப்பு இருக்கும் ட்ரேயில் வேறொரு ஷூவும்.  தடிமாடு மாதிரி பருத்த பெரிய இரண்டு ஷூக்கள், பளபளவென்று பாலிஷ் போடப்பட்ட என் செருப்பை அமுக்கிக் கொண்டு அதன் மீது உட்கார்ந்திருக்கின்றன.

‘இன்னொருத்தரு ட்ரேயில வைக்கலாமா!’ ‘யாரு இது? ஒரு ட்ரே தேடி வைக்க முடியாத அவசரக் குடுக்கை’ என்றெல்லாம் யோசிக்கும் முன், கோட்டுப் போட்ட ஒருவன் ஓடி வந்து அந்த ஷூக்களை எடுத்துக் கொண்டு என்னை கடக்கிறான்.

என் செருப்பின் மீது அவனது செருப்பின் அடிப்பாக தடங்கள் புழுதியால் வரிவரியாய்.

வானிலிருந்து என் அப்பா பார்த்துக் கொண்டிருப்பார். அவர் வழக்கமாக சொல்வதைப் போல ‘மடப்பய மருமவனே!’ என்று அவனை நானும் சொல்வேன் என்று கூட  நினைத்திருப்பார்.

சிரித்து விட்டுக் கடந்துவிட்டேன் அவனை. அனிச்சையாய் என் வாய் சொல்கிறது

‘அப்ப்ப்ப்பா…!’

– பரமன் பச்சைமுத்து
சென்னை விமான நிலையம்
07.04.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *