‘விக்ரம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

images-1.jpeg

அடுத்தடுத்து கொலையுண்டு போகும் காவல்துறை அதிகாரிகள் வரிசையில் பொருட்பெண்டிர் நாடும் குடித்து குணம் கெட்டுத் திரியும் ஓர் ஓய்வு பெற்ற அதிகாரியும் கொலையுண்டு போக, துப்பு துலக்க வரும் கூர்மதியாளன் கவனமாய் நூல் பிடித்து நகர்ந்து நகர்ந்து முக்கிய கண்ணியைப் பிடிக்கையில் ‘ஓகோ!’ என்று வியந்து நிமிர்ந்து நிற்க, அதன் பிறகு நடக்கிறது முழு களையெடுப்பு வேட்டை.  இதை, சுஜாதா எழுதி வெளியான பழைய விக்ரம் படத்தோடும், தான் முன்பு இயக்கிய ‘கைதி’ படத்தோடும் அட்டகாசமாக கோர்த்து புதிய ‘விக்ரம்’ ஆக தந்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பழைய படத்திலிருந்து கோர்த்து ஒரு புதுக்கதை செய்திருக்கும் லோகேஷ் கனகராஜின் இந்த யுக்தி முறைமை, பலருக்கும் பல கதவுகளை திறந்துவிடும் இனி. நின்று போன எம்ஜியார் – லதா படத்தின் சில காட்சித் துண்டுகளை வைத்துக் கொண்டு புதிய கதையில் கோர்த்து திரைக்கதை பண்ணி ‘ரகசிய போலீஸ் 105’ என்று இயக்குநர் கே பாக்யராஜ் ஏற்கனவே இதை செய்திருக்கிறார் என்றாலும், லோகேஷ் இன்னும் நுட்பமாக செய்துவிட்டார். (குறிப்பாக ‘கைதி’யில் கழுத்து சிதைய இறந்தவனை கழுத்தில் தையல் போடப்பட்ட தழும்போடு ‘விக்ரம்’ படத்தின் இறுதியில் நிறுத்தியுள்ளதை கவனிக்க). (‘கைதி’ ‘விக்ரம்’ படங்களின் தொடர்ச்சியாக ‘சீக்வல்’ படங்கள் வரும் போல!)

மொத்த உலகமும் எதிர்நோக்கும் உச்ச நிலையில் இருக்கும் நடிகராக இருந்தும், மற்ற இத்தனை நாயகர்களுக்கும் முழு இடமளித்து தன் இடத்தில் நின்று ஆடும் கமல்ஹாசனை பாராட்டத்தானே வேணும்! ‘டை ஹார்டு – ஜான் மெக்லின்’ புரூஸ் வில்லிஸ் போல வயதிற்கேற்ப வார்க்கப்பட்ட பாத்திரத்தில் அடித்து ஆடுகிறார் கமல்.  நடிப்பில் விளாசலும் உடம்பில் வயதும் தெரிகிறது.

‘ஒரு ஊருக்கு சண்டைக்கு போன போது… ம்ம்னு கேளு!’ ‘பாத்துக்கலாம்!’ ‘ப்ளான் பி என்பது பிளான் ஏ வை ஒழுங்கா பன்றது’ ‘விளையாட்ட ஆரம்பிப்போமா?’ ‘டேய் அடுத்த பத்து நிமிஷம் நம்ம ரெண்டு பேருக்குமே ரொம்ப முக்கியமானது!’ என பல இடங்களில் விளாசுகிறார். குழந்தையோடு கொள்ளும் காட்சிகளில் கூடுதலாக கவர்கிறார்.

அனிருத் படம் முழுக்க உழைத்து மெருகேற்றியிருக்கிறார்.

ஃபகத் பாசிலும் விஜய் சேதுபதியும் நாயகனுக்கு இணையாக கலக்கியிருக்கிறார்கள். ஃபகத் பின்னுகிறார். ‘எப்பயும் ஒரே மாதிரி மாடுலேஷன்!’ என்று நாம் வைக்கும் குற்றச்சாட்டை போக்கும் விதமாக உடைந்த பல்லோடு மூடிய உதட்டோடு அடக்கி வாசித்து பேசுகிறார் விஜய்சேதுபதி. ( விஜய் சேதுபதி சார்! கொஞ்சம் உடம்பை பாருங்க சார்! அந்த காட்சிகளில் உங்களை பார்க்க முடியவில்லை!)

ஏஜண்ட் டீனா பாத்திரம், சூர்யா வருகை சர்ப்ரைஸ்.

கமல் வரும் இடைவேளைக்கு முன்பு வரை முதல்பாதி கொஞ்சம் தொய்வு, ‘காளிதாஸ் எப்படி விக்ரமின் மகன்? அதில் அம்பிகா செத்துருவாங்களே, லிசிக்கு  பொறந்திருப்பானோ? அடுத்த பார்ட் படம் வந்தாதான் புரியுமோ?’, அவ்வளவு புத்திசாலியான சிறப்பான பாத்திரமாக முதல் பாதியில் காட்டப்பட்ட ஃபகத் பாசிலை இரண்டாம் பாதியில் தடாலென்று சராசரியாக்கியது வகையில் காணப்படும் சில பலவீனங்கள் மொத்த படத்தின் சிறப்பான உருவாக்கத்தில் அடிபட்டுப் போகின்றன.

கமலுக்கு நல் மறுவருகை, லோகேஷ் கனகராஜுக்கு அடுத்த உயர்வு நிரூபணம், அனிருத்துக்கு அடுத்த வெற்றி.

வி – டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘விக்ரம்’ – குறி பார்த்து சுடல்! அதிரடி! – பார்க்கலாம்.

– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

#Vikram
#VikramReview
#Kamalhassan
#Aniruth
#LokeshKanagaraj
#ParamanReview

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *