அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே…

‘அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே, என் கழுத்துக்கு மூணு முடிச்சுப் போடச் சொன்னாரே!’

சில பாடல்கள் மிகச் சாதாரணமானவையாக எளிமையானவையாக இருக்கும், ஆனால் முதல்முறை கேட்கும் போதே ‘பச்சக்’கென்று ஒட்டிக்கொள்ளும். அப்படியொரு பாடல் இது. ரஹ்மானின் ‘என் வீட்டுத் தோட்டத்தின் பூவெல்லாம் கேட்டுப் பார்’, இளையராஜாவின் ‘காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா?’ ‘இரு விழியின் வழியே நீயா வந்து போனது?’ பாடல்கள் இவ்வகை உதாரணங்கள்.

கல்லூரி முடித்து விட்டு அங்கு இங்கென்று அலைந்து ஒரு வேலையில் சேர்ந்து, ‘பேச்சுலர்களுக்கு  இடம் தரமாட்டேன்!’ என்ற பொதுக்குரல் கொண்ட அந்நாளைய சென்னையில் அவர்களை வாரியணைத்துக் கொண்ட திருவல்லிக்கேணி மேன்சன் ஒன்றில் நான் அடைந்து கொண்ட காலமது.

தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடிய அப்போது ஒரு ஞாயிறு அதிகாலை எழுந்து பைப்பில் அடித்து நீர் பிடித்து துணிகளை துவைத்து என எல்லாம் முடித்தும் நிறைய நேரமிருந்ததால் விடுமுறை நாளில் என்ன செய்வதென்று தெரியாமல் சினிமாவிற்குப் போகலாமென முடிவெடுத்து போனால் தேவி, தேவி பாரடைஸ், தேவிகலா, தேவி பாலா எதிலும் டிக்கெட் இல்லாமல் அருகிலிருந்த அண்ணா தியேட்டரில் நுழைவு கிடைத்தது.

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சௌத்ரி புதிய இயக்குநர்களை வைத்து புதிய முயற்சிகள் செய்து பார்த்தார்.  கே எஸ் ரவிக்குமார் என்றொரு இளம் இயக்குநரை வைத்து  சரவணனை நாயகனாக வைத்து ‘பொண்டாட்டி ராஜ்யம்’ என்றொரு படம் செய்திருந்தார்.

படத்தில் நாயகி நித்தியானந்தா ஹீரோயின் (ரஞ்சிதா) பாடுவதாக வரும் பாடல் ‘அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே…’ பார்க்கும் போதே முதல் முறையில் பிடித்துப் போனது.  

அதன் பின் நிறைய ஊர்களுக்கு மாற்றலாகி பல ஆண்டுகள் பறந்தோடி என் வாழ்வில் பல மாறிப் போனபின்னும், ‘அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே…’ மட்டும் உள்ளேயே இருக்கிறது அப்படியே, இளம் வயதில் பதிந்ததாலோ என்னவோ.

1989 வாக்கில் கிராமங்களில் புனல் ஒலிபெருக்கிகளில் சக்கை போடு போட்ட ராமராஜன் படத்து ‘ஆத்து மேட்டுத் தோப்புக்குள்ளே..’ பாடலில் தொடங்கி மளமளவென்று அவரும் ரஜினி, கமல் என பலரோடும் பல படங்களில் வேண்டியதை வேண்டுவோர்க்குத் தந்து வளர்ந்து பிறகு இடைவெளியும் எடுத்துக் கொண்டார்.

30 ஆண்டுகளுக்கு முன்பு ‘அண்ணாமலை’ வந்த போது ரஜினியின் பெயர் வரும் போது இவர் சேர்த்த ‘ஹேய் ஹேய் ஹேய்…’ பின்னணியில் சிலிர்த்து குதித்த ரசிகர்கள் கோடிக் கணக்கில் உண்டு உலகம் முழுக்க. கவிதாலயா பேனர் கார்டுக்கு முன்பு முதல் முறை ஒரு ஹீரோவின் பெயர் போடப்பட்டது அதில்தான். (இப்போது எல்லாருக்குமே போடப்படுகிறது).

‘வீரா’ படத்தில் தேவா கோர்த்த அந்த இசையை சேர்க்க மாட்டேன் என்று ரஜினி பெயர் வரும் பின்னணிக்கு டிரம்ஸ் போட்டுப் பார்த்தார் இளையராஜா. எடுபடவில்லை. அன்றிலிருந்து ரஜினி படத்தில் எவர் இசையமைத்தாலும் பெயர் போட தேவா கோர்த்த பின்னணி இசைதான் என்று முடிவெடுத்துவிட்டார்கள். இன்று வரை தொடர்கிறது.

அண்ணாமலையில் ‘வாழ்ந்தாக வேண்டுமே வளைந்தாடு கண்மணி, வண்டாடும் பூவுக்கு வலிக்காது அம்மணி’ எனும் அந்த வரிகளில் எஸ்பிபி குழைந்து பாடும் அந்த இடத்திலும், அடுத்து வரும் ‘உலுக்கித்தான் பறிக்கனும் உதிராது மாங்கனி’ வரிகளிலும் சொக்கியே போவேன்.

விஜய்யின் ‘தெறி’யில் திரும்ப வந்து ‘ஜித்து ஜில்லாடி’ பாடி விட்டுப் போனார்.

அனிருத் ரஜினி படத்துக்கு தேவாவையே அழைத்து வந்து உட்கார வைத்து தீம் மியூசிக் போட்டார். (இதற்காகவே அனிருத்தை இன்னும் மதித்தேன்.) இன்ஸ்ட்டாக்ராமில் நான் பலமுறை பார்த்து ரசித்த காணொளித் துண்டுகளில் அதுவும் ஒன்று.

கானாவைத் தாண்டி தேவாவிடம் ‘அனிலுக்கு மூன்று கோடு…’ போன்ற பாடல்களை காண்பவன் நான்.

சமீபத்தில் யாரோ சொன்னார்கள் தேவா திரும்ப வருகிறார் என்று. புன்னகைத்தேன்.

…..

இன்று என் ஓட்டுநர் காலையுணவு கொள்ள வேண்டும் என்பதற்காக, ‘சங்கீதாவுல நிறுத்துங்க. நானும் அப்படியே ஒரு காஃபி குடிக்கறேன்!’ என்று பெருங்களத்தூரில் இறங்கினேன்.

உள்ளே நுழைந்து இருக்கை பிடித்து அமர்ந்து, ‘இங்க ஒரு காஃபி, அந்த டேபிள்ல டிரைவர் என்ன கேக்கறாரோ அது!’ என்று சொல்லி விட்டு தண்ணீர் தம்ளரை உறிஞ்சுகையில் எதிரே அவர் நுழைகிறார்.

வெள்ளை ஜிப்பா, வெள்ளை பேண்ட், வெள்ளை செருப்பு. இசையமைப்பாளர் தேவா!

என் டேபிளைக் கடக்கப் போகிறார். ‘வணக்கம் சார்!’ என்கிறேன். என் பக்கம் திரும்பி ‘வணக்கம்’ என்று சொல்லிப் போகிறார்.

நான்காவது டேபிளில் எனக்கு முதுகு காட்டி அமர்ந்து பொங்கலை குனிந்து உண்கிறார்.

எழுந்து போய் அவரிடம் பேசி விட முடியும், என் எண்ணைப் பகிர முடியும், அவர் பாடல்கள் சிலதை நான் சிலாகித்த விதங்களை அவரிடம் சிலாகிக்கும் வண்ணம் பகிர முடியும். நமக்கு வெட்கமே கிடையாது போய் உட்கார்ந்து பேசி விடலாம்தான்.    ஆனால்… யாருடனோ எதற்கோ வந்திருக்கிறார். எதுவோ உரையாடுகின்றனர். இடையூறு வேண்டாம் என தூரத்திலிருந்தே பார்க்கிறேன். என்னை எதற்கு அவர் தெரிந்து கொள்ள வேண்டும்?

முதுகு காட்டி உட்கார்ந்து உண்ணுகிறார்.

‘அணிலுக்கு மூன்று கோடு போட்ட ராமரே…’

இன்னும் நிறைய பண்ணுங்க சார். பிரார்த்தனைகள்.

என் பயணம் தொடர்கிறது.

– பரமன் பச்சைமுத்து
01.07.2022
செஞ்சி

#Deva
#MusicDirectorDeva
#KsRavikumar
#Annamalai
#Paraman

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *