ட்ராஃபிக் சிக்னலில் வழிகிறது இசை: பெருநகர போக்குவரத்து காவல்துறை அசத்தல்

ஒரு காலை அண்ணாநகர் ரவுண்டானாவில் ஒளிரும் சிவப்பு விளக்கு அணைந்து பச்சை விளக்கு வரட்டுமென சிந்தாமணி நோக்கி வலதில் திரும்பக் காத்திருக்கிறேன்.  ஏதேதோ சிந்தனைகள் ஓட இருந்தவனை ‘டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்ங்க் டோடம் டோடங்…’ என்று எங்கிருந்தோ வந்த மெல்லிய வீணை இசை உலுக்கியது. உள்ளம் பாடலை கண நேரத்தில் கண்டறிந்து கூடவே பாடவும் தொடங்கிவிட்டது.  ‘தென்றல் வந்து என்னைத் தொடும்… ஆகா, சத்தமின்றி முத்தம் இடும்!’

‘எங்கேருந்து வருது இந்தப் பாட்டு? கார் எஃப்எம் ரேடியோ கூட ஆஃப் ஆயி இருக்கே!’

‘ஒவ்வொரு காராக கண்ணாடிய ‘படீர் பட் படீர் பட்’ன்னு தட்டி பிச்சைக் கேட்கற அந்த லேடி எதாவது ப்ளேயரை வச்சிகிட்டு ஒலிக்க விடுறாரோ, புது டெக்னிக்கோ!?’

பாடல் தொடருகிறது, காற்றில் இளையராஜாவின் இசை தவழ்கிறது.  ‘பகலே போய் விடு, இரவே பாய் கொடு… பன்னீரைத் தூவி ஓய்வெடு!’

‘தூரல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்…
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்…

தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு…’

‘டேய் எங்கடா பாடுது இந்தப் பாட்டு?’

கண்ணாடியை இறக்கி தலையை வெளியே விட்டு உயரே பார்க்கிறேன்.  உயரே பொருத்தப் பட்டிருந்த ஸ்பீக்கரிலிருந்து வழிகிறது இசை.

ஓ! ஓ!

அட… சிக்னலில் நிற்கும் நேரத்தில் மெல்லிசையைத் தந்து தளர்வாக்கி இசையால் நனைத்து அனுப்புகிறார்கள். 

பெருநகர போக்குவரத்துக் காவல் துறை சாலைப் போக்குவரத்தை பாதுகாப்பாக்க, சீரானதாக்க, மனவழுத்தம் இல்லாமல் இருக்க பல முயற்சிகளை எடுக்கிறார்கள். இந்த முயற்சியை கை தட்டிப் பாராட்டுகிறேன்.

பச்சை விளக்கு ஒளிர்ந்து வண்டியை விடுகிறேன். அலுவலகம் வந்து சேர்ந்த பின்னும் என்னுடன் தொற்றிக் கொண்டு நாள் முழுக்க ஓடியது ‘தென்றல் வந்து என்னைத் தொடும்…’ (புவனகிரி ஆபிதா வீடியோ விஷனில் 1 ரூபாய் தந்து பார்த்த படம்)

அடுத்த நாள் நிற்கையில்  ‘ராஜராஜ சோழன் நான்’ ஒலித்தது. ‘பூவே செம்பூவே…’ ‘ஆலப் போல் வேலப்போல்…’ ‘மழை வருது மழை வருது குடை கொண்டு வா…’ ‘ஆகாய வெண்ணிலாவே…’ ‘தென்றல் வந்து தீண்டும் போது…’ என ஒலிக்கும் பாடல்களைக் கடக க முடியாமல் சிக்னலை கடந்து வருகிறேன்.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
28.06.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *