‘பரமன்…’  எனும் பெயரைக் கொண்ட நான் இன்று முதல் ‘…. ….’  என்று எனது பெயரை மாற்றிக் கொள்கிறேன்!’ – பரமன்

‘பரமன்…’  எனும் பெயரைக் கொண்ட நான் இன்று முதல் ‘…. ….’  என்று எனது பெயரை மாற்றிக் கொள்கிறேன்!’ – பரமன்
….

எனது பெயரை மாற்றிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்து அதற்கான அரசு அலுவலகத்திற்குப் போனேன் இன்று காலை.

நீண்ட காலமாக ‘பேரை மாத்தனும், இதோ இப்போ செய்யலாம், இப்போ செய்யலாம்!’ என்றே எண்ணிக்கொண்டிருந்ததை இன்று நிறைவேற்ற முடிவு செய்து.  அண்ணாசாலை எல்ஐசிக்கு எதிரில் இருக்கும் ஹிக்கின் பாதம்ஸ் கட்டிடத்திற்கு அடுத்து இருந்த ‘கெஸெட் – நேம் சேஞ்ச்’ என்று எழுதப்பட்ட அந்த அலுவலக வளாகத்திற்குப் போனோம் (எதிரில்,  ஒரு காலத்தில் சென்னையின் பெரிய கட்டிடம் என்று சொல்லப்பட்ட எல்ஐசி கட்டிடம் இன்று நமக்கு சிறிய கட்டிடமாகத் தெரிகிறது)

( ‘அலங்கார்’ திரையரங்கம் இருந்த இடத்திற்கு கண்களும்,  ஜாக்கி சான் திரைப்படங்களை பார்க்கவும் ‘ரோஜா’ திரைப்படம் பார்க்கவும் போன நினைவுகளும் போய் வந்தன)

பெயர் மாற்றத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பெயர் மாற்றக் காரணம், இருக்கும் பெயருக்கான பள்ளிச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், பெற விரும்பும் புதிய பெயருக்கான சான்றுகள், புகைப்படம், இத்தனையிடங்களில் கையொப்பம் என எல்லாவற்றோடும்தான் வந்தோம்.

‘மாஸ்டர், கவர்மெண்ட் ஆஃபீஸ் மாஸ்டர், கொஞ்சம் டைம் எடுத்துக்கும். டென் டு ஒன் அங்க உட்கார வேண்டியிருக்கும்!’ என்று என்னை நன்றாக தயார் செய்து கூட்டி வந்து வரிசையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர வைத்தார் மலர்ச்சி மாணவர் ‘டாக்ஸ்’ விஜய்.

சிலர் விண்ணப்பங்கள் காகிதங்களோடு, சிலர் விண்ணப்பிக்க வந்தவர்களுக்கு துணையாக என நிறைய மனிதர்கள்.

ஒடிசலான உடலிலிருந்து அதற்கு சம்மந்தமேயில்லாமல் அதீத டெசிபலில், ‘ரேஷன் கார்டு / டிசி / மார்க் ஷீட் கொண்டு வாங்க!’ ‘காப்பி அட்டாச் பண்ணுங்க’ ‘வெளிய ரைட் சைடு அந்த புக் கடையில ஜெராக்ஸ்’ என அழுத்தமாக அதிகாரமாக சொல்லிக்கொண்டிருந்தார் சுவாசக்கவசம் அணிந்திருந்த பெண் அதிகாரி.

முதல் வரிசையில் இருந்த முதல் நாற்காலியில் காத்திருந்த போது, ‘முன்பெல்லாம் ‘கதை – திரைக்கதை – வசனம் – இயக்கம்’ என்று எவரேனும் போட்டிருந்தால் சிரிப்பேன். இன்று நானே அதை செய்திருக்கிறேன்!’ என்று தனது ‘ராக்கெட்டரி’ திரைப்படம் குறித்து மாதவன் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது, நானும் அதே நிலையில் இருப்பதை உணர்ந்து சிரித்துக் கொண்டேன்.

‘பெயர் மாற்றம் அறிவிப்பு’ இன்று கட்டம் போட்டு் பத்திரிக்கையில் பத்தி செய்தி பார்க்கும் போதெல்லாம் சிரித்துக் கொள்வேன். இன்று நானே பெயர் மாற்றம் செய்து கொள்ளவும், அதை அரசிதழில் வெளியிட்டு சான்றாக மாற்றவும் விண்ணப்பித்து உட்கார்ந்திருக்கிறேன் என்பதை நினைத்து சிரித்துக் கொண்டேன்.

அழைக்கப்பட்ட போது போய் நின்றேன். ‘டிசி இல்லையா, ரேஷன் கார்டு? மார்க் ஷீட்?’ என்ற போது, ‘டிரைவிங் லைசென்ஸ் இருக்கு!’ என்று தந்தேன். காட்டிய இடத்தில் கையொப்பம் இட்டேன்.

பெயர் மாற்றத்திற்கான காரணம், சான்றுகள் ஆகியவற்றை பார்த்து அதில் என்னவோ பென்சிலால் எழுதி பிறகு பேனாவால் கையொப்பமிட்டு, ‘அந்த கவுண்டர்ல போய் பணம் கட்டுங்க!’ என்றார் அந்த அதீத டெசிபெல் அம்மணி ஆனால் இம்முறை கனிவாக.

விஜய் ஓடிப் போய் பணம் செலுத்தும் கவுண்டரில் நின்றார். ‘மாஸ்க்க கழட்டுங்க, முகத்த காட்டுங்க!’ என்றார் கவுண்டரின் மறுபுறம் அமர்ந்திருந்த நாற்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆண் அதிகாரி. ‘415 ரூவா குடுங்க!’ என்று சொல்லிவிட்டு அவர் ரசீது எழுதிய போது, ‘எந்த க்ரூப் எக்ஸாம் எழுதியிருப்பாரு இவரு!’ என்று சிந்தனை நமக்கு வந்ததை அவர் அறிந்திருக்கமாட்டார்தான்.

‘இந்தாங்க. ரிசிப்ட்.’

‘அடுத்து என்ன செய்யணும் சார்?’

’15 நாள்ல கெசட்ல புது பேரு வந்துரும்!’

‘அவ்வளவுதானா? முடிஞ்சிருச்சா? இவ்வளோ சிம்ப்ளாவா?’ இவ்வளவு க்யிக்காவா?!!!!’ 

இன்ப அதிர்ச்சி எனக்கு, சத்தமாகவே கேட்டு விட்டேன்.

என் அதீத உற்சாக குரல் சுற்றியிருந்தவர்களையும் திருப்பியது. கவுண்டருக்கு மறுபுறம் இருந்த இறுக்கமான முகம் கொண்டிருந்த அந்த ‘க்ரூப் எக்ஸாம்’ அதிகாரியையும் தொற்றியது. அவர் முகத்தில் புன்னகை. இறுக்கம் உதிர்ந்து, அழகாகிவிட்டார்.

‘முடிஞ்சிருச்சு. அவ்ளோதான்.போலாம்.’

’10 டு 1, ஹாஃப் டே, கவர்பெண்ட் ஆஃபீஸ், நேரம் எடுக்கும், நிறைய ப்ராசஸ்ன்னு சொல்லி கூட்டிட்டு வந்தாங்க சார். அழகா, உட்கார வச்சி பதினைந்து நிமிஷத்துல என் பேரையே மாத்தி முடிச்சி அனுப்பறீங்க. சூப்பர் சார்! நீட்! இம்ப்ரஸிவ்!’

அவருக்கும் தொற்றிக் கொண்டது என் மகிழ்ச்சி. கன்னங்கள் மேலேறி கண்களை மெலிதாக்கும் படி வாய் திறந்து சிரிக்கிறார் அந்த ‘க்ரூப் எக்ஸாம்’ ஆண் அதிகாரி.

(என்னென்ன படிவம் வேண்டும், என்னென்ன சான்றிதழ்களின் நகல்கள் இணைக்க வேண்டும் என்பவற்றை தெளிவாகத் தெரிந்து செயல்படுவது எல்லாவற்றையும் எளிதாக்கி விடுகிறது)

வெறும் பதினைந்து நிமிடங்களில் பெயர் மாற்றம் செய்து அரசிதழில் வெளியாவதை உறுதி செய்து வெளியே வருகிறோம். சபாஷ் கெஸட் ஆஃபீஸ்!

‘விஜய் ஒரு காஃபி குடிப்போமா?’

‘சரிங்க மாஸ்டர்!’

ஹிக்கின் பாதம்ஸை கடந்து அந்த காப்பி கடையை நோக்கி நடக்கிறோம்.

எனது பெயர் மாற்றப்பட்டு விட்டது அதிகாரப்பூர்வமாக அரசிதழிலும் இன்று. பள்ளிச் சான்றிதழ்களிலும் அதனால் ஓட்டுநர் உரிமத்திலும் ‘Paraman P’ என்றிருந்த என் பெயர் ஆதார், பாஸ்போர்ட் உட்பட மற்ற எல்லா இடங்களிலும் இருப்பது போல ‘பரமன் பச்சைமுத்து’ என்று விரிவாக்கம் செய்து மாற்றப்பட்டுவிட்டது இன்று.

(வேற எதோ பெயரை மாத்தி வச்சிக்கப் போறேன்னு நினைச்சீங்களா? போங்கய்யா!)

– பரமன் பச்சைமுத்து
13.07.2022
சென்னை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *