
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை மதிப்பிற்குரிய விக்ரம் சாராபாய் ஆரம்பித்து நிர்வகித்து வந்த தொடக்கக் காலத்தில் அவரது நேரடி செல்லப் பிள்ளைகளாக வளர்ந்த சில விஞ்ஞானிகளில் ஒருவரான நம்பி நாராயணன், நிறைய சாகசங்கள், மேற்படிப்பு, ஆராய்ச்சி, மேல்நாட்டு விஞ்ஞானியிடம் நேரடி கற்றல் என பலதையும் செய்து திரவ எரிபொருள் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குக் கொண்டு வந்து ராக்கெட் தொழில் நுட்ப வரிசையில் இந்தியாவை வளர்ந்த நாடுகளின் வட்டத்தில் சேர்த்துவிட இருக்கும் நேரத்தில், பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியத்தை விற்றார் என்ற காரணம் கொண்டு உள்ளூர் காவல்துறையால் கைது செய்யப்படுகிறார் என்ற உண்மைக் கதையை திரைக்கதை செய்து, மாதவன் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ராக்கெட்டரி’
நம்பி நாராயணன் பற்றி ஊடகவியலாளர் மாலன் செய்திருந்த அந்தக் காலத்து நேர்காணல், விகடனில் வெளிவந்த விஞ்ஞானி நம்பி நாராயணனின் பேட்டி ஆகியவற்றின் மூலம், ஊடகங்களில் அவ்வப்போது வந்த செய்திகள் மூலம் என நாம் அறிந்திருந்த செய்திகள்தான் தகவல்தான் என்றாலும் அதற்குப்பின்னே நம்பி நாராயணனும் அவரது குடும்பமும் கண்ட துயர அனுபவங்கள் கொண்ட கொடுமைகளை திரையில் பார்க்கும் போது உள்ளம் அசைக்கப்படுகிறது.
அப்துல் கலாம் பற்றி மட்டுமே நாயக பிம்பம் கொண்டுள்ள நம்மில் பலருக்கு நம்பி நாராயணன் போன்றோர் இந்நாட்டிற்காக செய்துள்ள அர்ப்பணிப்பையும் உழைப்பையும் உயிர்ப்பாய் காட்டுகிறது படம்.
நாட்டிற்காக பல தியாகங்களை செய்து உண்மையாய் உழைப்பவர்களை ‘தேசத்துரோகி’ என்ற ஒரு வார்த்தையைச் சொல்லி் மொத்தமாக தீர்த்துவிடலாம் என்பதை படத்தின் ஒரு பாத்திரம் சொல்லும் போது உறைக்கிறது, வலிக்கிறது.
நல்ல வேளை நம்பி நாராயணன் தன் மீது சுமத்தப்பட்ட பொய் களங்கத்தோடே இறந்து போகவில்லை, உயிரோடு இருந்து நின்று போராடி துடைத்து உடைத்து உண்மையை நிரூபித்தார் என்பதும், இந்திய அரசும் அவருக்கு வாழும் காலத்திலேயே நாட்டின் உயரிய விருதை தந்துவிட்டது என்பதும் படத்தினூடே நமக்கு எழும் ஆறுதல் எண்ணங்கள்.
விக்ரம் சாராபாய், நம்பி, நம்பியின் மனைவி, இஸ்ரோ விஞ்ஞானிகள், ஃபிரான்சு விஞ்ஞானிகள் என பாத்திரங்களை ஏற்றோர் அனைவரும் சிறப்பாகத் தந்துள்ளனர்.
நேர்காணல் செய்யும் நிருபராக வரும் சூர்யாவிடம் நம்பி நாராயணன் கேட்கும் கேள்வி, ‘நான் குற்றவாளி இல்லேன்னு தீர்ப்பாயிடுச்சு. அப்ப இதெல்லாம் நடக்க காரணமானது யாரு? நான் நிரபராதின்னா, குற்றவாளி யாரு?’ வெளியே வந்த பின்னும் நம்மிடம் இன்னும் தொக்கி நிற்கிறது.
‘விக்ரம் சாரா பாய் தொடங்கி, நம்பி நாராயணன், அப்துல் கலாம், நம்பியின் சக இஸ்ரோவின் ஆராய்ச்சிப்பணியாளர்கள், இந்திய அதிகாரிகள் என இன்னும் எத்தனையோ பேரின் உழைப்பில் உருவாகியிருக்கிறது இந்த நாடு!’ என்று எண்ணாமல் வெளியே வர முடியவில்லை.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதைப் பின்னி கமர்சியல் படமாகவே சிறப்பாகத் தந்திருக்கும் மாதவனுக்கு இதுதான் முதல் படம் என்றால் நம்ப முடியவில்லை.
நல்ல வேளை தவறவிடாமல் மாதவன் இதை படமாக எடுத்து பதிவு செய்தார். நல்லவேளை நான் தவறவிடாமல் பார்த்து விட்டேன்.
வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘ராக்கெட்டரி’ – உண்மை சுடும்!
இது வேறு வகை படம், நிறை குறைகள் உண்டு, ஆனாலும் நிச்சயம் பாருங்கள்.
: திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து
#RocketryTheNambiEffect #Rocketry #RocketryFilmReview #ParamanFilmReview #RMadhavan #NambiNarayanan #Isro