பம்பரம் விட்டிருக்கிறீர்களா?

பம்பரம் விளையாடியிருக்கிறீர்களா? ஆர்வி உதயகுமார் படத்தில் சுகண்யாவின் தொப்புளில் விட்டதைப் போலல்ல, தரையில் ஓங்கிக் குத்தி.

சிறியவர், பெரியவர் பேதமும் இல்லை, இத்தனை பேர்தான் என்ற கட்டுப்பாடும் இல்லை. எவரும் ஆடலாம். எத்தனை பேரும் இணையலாம். ஒரு பம்பரம், சில மீட்டர் கயிறு (சாட்டை என்று பெயர் அதற்கு), சில சதுர அடி கட்டாந்தரை அவ்வளவே தேவை. மணல்பாங்குத் தரையில் பம்பரம் விட முடியாது.

பம்பரம் விளையாடிய சிறுவரகள் மண்ணோடும் தரையோடும் கலந்து இருந்தார்கள்.

மணக்குடியில் என் சிறுவயதின் வசீகர விளையாட்டு பம்பரம். தென்னாப்பிரிக்க மக்களை இணைக்க நெல்சன் மண்டேலாவுக்கு கால்பந்து போல அந்நாட்களில் மணக்குடிக்கு பம்பரம். காய்ச்சார் மேட்டு சரவணன், பரமானந்தம் மாமா, பொன்னையன், ரெட்டியார் வீட்டு சிவக்குமார், படையாச்சித் தெரு பன்னீர், நாகராசு, மொட்டையன், மேலத்தெரு வெங்கடேசன், குளத்து மேட்டு சண்முகம், நாகராசு, ஆளவந்தார், ஏரிமேட்டிலிருந்து தங்கம் என அனைவரையும் ஒரு வட்டத்தில் இணைத்தது பம்பரம்.

பரமானந்தம் மாமாவும் கிருஷ்ணமூர்த்தி மாமாவும் பூவரசம் மரத்தின் கிளையை வெட்டி இழைத்து இழைத்து சொந்தமாய் பம்பரம் செய்து கொள்வார்கள். மொழுக்கென்று சமோசா வடிவில் இருக்கும். (வளர்ந்து பின்னாளில் நகர வாழ்க்கையில் கழுத்தில் டை கட்டிய காலங்களில் மற்றவர்கள் ‘சமோசா நாட்’ என்கையில் என் மனம் மட்டும் ‘பம்பரம் நாட்’ என்று சொல்லிக் கொள்ளும்). எனக்கெல்லாம் புவனகிரியிலிருந்து அம்மா வாங்கி வந்த பம்பரம்தான். ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து புறப்பட்ட பூவராக சுவாமி (பூராயர்) கடலில் தீர்த்தவாரி முடித்து புவனகிரியில் சில நாள் தங்குவார். புவனகிரியே விழாக்கோலம் பூணும். அந்த திருவிழா சந்தையில் வண்ண வண்ண பம்பரங்கள் கிடைக்கும்.
அப்படியொன்றைத்தான் அம்மா வாங்கி வருவார்கள். தலைகனத்தும் வண்ணம் பூசியும் இருக்கும், இயந்திரத்தில் கடைந்த பம்பரம் அது. சுற்றும் போது வண்ணங்கள் வட்டமாக மாறி கண்கவரும்.

கவனமாக இருந்தால் மட்டுமே பம்பரத்தில் வெல்ல முடியும். வரையப்பட்ட வட்டத்தைச் சுற்றி எல்லோரும் நின்று கொண்டு, ஒவ்வொருவரும் சாட்டையை பம்பரத்தில் சுத்தி வட்டத்திற்குள் குத்தி, விட வேண்டும். வட்டத்திற்கு வெளியே பம்பரத்தின் ஆணி இறங்கினால், ‘வெளிக்குத்து – ஆளு அவுட்!’ அவுட் என்றால் பம்பரத்தை வட்டத்திற்குள் வைத்து விட்டு நிற்க வேண்டும். ஓவ்வொருவராக பம்பரத்தை விட்டு வட்டத்திற்குள் குத்தி அது சுழல வேண்டும். சுழன்று வெளியில் வரவேண்டும். சுழலாமல் போனாலோ, வட்டத்திற்குள்ளேயோ விழுந்தாலோ ‘அவுட்’. அவுட் என்றால் பம்பரத்தை வட்டத்திற்குள் வைத்து விட்டு மற்றவர்கள் விளையாட காத்திருக்க வேண்டும். உள்ளிருக்கும் பம்பரத்தை தன் பம்பரத்தின் ஆணியால் ஓங்கிக் குத்தி பிளக்கும் மாவீரர்களும் உண்டு (அடுத்தவன் பொருளை அழிப்பதில் அதீத ஆசை கொண்ட தீவிரவாதிகள்!’) ஒரு முறை என் புது பம்பரத்தை ஓங்கிக் குத்தி படையாச்சி தெரு பன்னீர் பம்பரம் விட, புது பம்பரத்தின் விலாப்பக்கத்தில் இறங்கியிருந்த ஆணி குத்து என் விலாவெலும்பிலேயே இறங்கியது போல துடித்தேன்.

எவரேனும் விட்ட பம்பரக் குத்தில் உள்ளிருக்கும் பம்பரம் வட்டத்திற்கு வெளியே வந்து விட்டால், உடனே அனைவரும் சாட்டையை சுற்றி பம்பரத்தை விட்டு சுழலும் போது சாட்டையை அடியில் போட்டு லாவகமாக மேலே அந்தரத்தில் தூக்கி காற்றிலிருந்து உள்ளங்கையில் ஏந்த வேண்டும். சுழலும் பம்பரத்தை தரையிலிருந்து ஏந்தி உள்ளங்கையில் சுழல விடுவதற்குப் பெயர் ‘அபிட் எடுத்தல்’. துரிதமாக அபிட் எடுப்பவன் தப்பித்தான், எடுக்காதவன் ‘அவுட்’, பம்பரத்தை உள்ளே வைக்க வேண்டியதுதான். எதற்கும் தயாராக கவனமாக விளையாட வேண்டிய விளையாட்டு பம்பரம்.

ஒரு முறை நான் தெருவில் விட்ட பம்பரம், கையிலிருந்து கழன்று ஓடி கொண்டு வீட்டு தன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த சிவப்பிரகாசம் சித்தப்பாவின் காலில் அடித்து விட்டது. அவ்வளவு கோவம் வந்திருக்க வேண்டாம் அவருக்கு. அம்மா வாங்கித் தந்த அந்த என் கடைசல் பம்பரத்தை மெத்தை வீட்டு சுவற்றில் பல முறை அடித்து அடித்து உடைத்து பிளந்து எறிந்தார். பெரும் வன்முறை, இல்லை என் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை அது எனக்கு அவ்வயதில்! காய்ச்சார் மேட்டிலிருந்து கதறிக்கொண்டே குளத்து மேட்டு வீடு வரை ஓடினேன். அடுத்த சில ஆண்டுகள் அவரை எப்போது பார்த்தாலும் ‘உடைந்த பம்பரம்’ நினைவுக்கு வந்தது.

மஞ்சள் காமாலை வந்து கல்லீரல் கெட்டு இளம் வயதிலேயே அவர் இறந்து விட, இடுகாட்டில் அவரது உடலை குழிக்குள் வைத்து பதிகங்கள் சொல்லி திருநீறும் கைப்பிடி மண்ணும் ஒவ்வொருவராக அவர்மீது போட்ட அந்த இறுதித்தருணங்களிலும் கூட சிறுவனான எனக்கு உடைந்த பம்பரமே நினைவில் வந்தது. ‘நமச்சிவாய வாழ்க… பம்பரத்தை உடைச்சி பொளந்தவரு!’

மணக்குடியில் என் தலைமுறையின் அடுத்த தலைமுறைக்கு பம்பரம் பழக்கம் இல்லை. ‘பப்ஜி’ ‘ஷூட்டிங்’ தொலைக்காட்சியில் தொலைதல், கிரிக்கெட் என போய் விட்டார்கள்.

இன்று மணக்குடிக்கு போயிருந்த போது, அதிசயித்தேன். குளத்தங்கரையில் பெருமாள் கோவிலுக்கும் நியாயவிலைக்கடைக்கும் இடைப்பட்ட கட்டாந்தரையில் வட்டம் இட்டு எட்டு் சிறுவர்கள் பம்பரம் ஆடிக் கொண்டிருந்தார்கள். ‘ஃப்ளோரோசண்ட் கலர்’ பிளாஸ்டிக் பம்பரங்கள். எல்லாமே பரமானந்தம் மாமா கிருஷ்ணமூர்த்தி மாமா செய்து பயன்படுத்தியது போல சமோசா வடிவ பம்பரங்கள்.

சிறுவர்கள் உற்சாகமாக விளையாட அங்கேயே நின்று பார்த்தே கரைந்து போனேன்.
‘டேய் வெளிக்குத்து’ ‘வெளி வெட்டு’ ‘அபிட் எடுரா!’ ‘அவுட்டு உள்ள வை!’ நிறைய பழைய நினைவுகள். முப்பத்தியைந்து நாற்பது ஆண்டுகள் பின்னோக்கி போய் வந்தது போல இருந்தது. திரும்பவும் பம்பரம் வந்து விட்டதே!

தம்பி! நீ யார்ரா?’ ‘மணிவண்ணன் பையன்!’ ‘ஓ… என் க்ளாஸ்மேட் பானுமதியோட சின்னத் தம்பியோட மகன்!’

‘தம்பி நீ யாரு?’ ‘டீக்கடை காசியோட அண்ணன் சங்கரு மகன்!’ ‘டேய், சங்கர் என் க்ளாஸ்மேட்!’

‘நீ?’ ‘கொளத்து மேட்டு சண்முகம் மகன்!’ ‘டேய்! உன் அப்பாவும் நானும்தான் பம்பரம் விளையாடுவோம் ஆளவந்தாரோட அப்ப. நான் உங்க பக்கத்து வீடு அப்போ!’ ‘அப்பா சொல்லிருக்காரு! உங்கள ஃபோட்டால காட்டிருக்காரு!’

எல்லாருமே, என் ஈடு நண்பர்களின் பிள்ளைகள் அல்லது என்னோடு விளையாடியவர்களின் பிள்ளைகள். அருகில் நின்ற பரிக்கு பம்பரம் விடத் தெரியவில்லை. பழக்கம் இல்லை. ஆனால் புதிய தலைமுறை பம்பரத்தை எடுத்துக் கொண்டது. மறுபடியும் பம்பரத்தை எடுக்கிறார்கள் புதிய பிள்ளைகள், பிள்ளைகளை எடுத்துக்கொள்கிறது பம்பரம்.

வீடு நோக்கி நடக்கிறேன். சிவப்பிரகாசம் சித்தப்பா நினைவில் வந்து போகிறார். இப்போது அவர் மீது கோவம் இல்லை.

  • பரமன் பச்சைமுத்து
    மணக்குடி
    03.10.2022

Manakkudi #Kizhamanakkudi #Pambaram #Paraman #ParamanTouring #ParamanPachaimuthu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *