அட்சதை…

திருமணத்தில் மணமக்கள் மீது தூவி வாழ்த்த தரப்படும் அட்சதை தனக்கும் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிய சிறுவன் ஒருவனைப் பார்த்தேன் நேற்று காலையில் நிகழ்ந்தவொரு திருமணத்தில். கையில் தந்ததும் அப்படியே அதை வாயிலிட்டுத் தின்று நம்மை சிரிக்க வைத்துவிட்டான் அவன்.

சிரிப்போடு, ‘இவனது வயதில் நாம் என்ன செய்தோம் அட்சதையை கையில் வைத்துக் கொண்டு?’ என்று கேள்வியும் கூடவே வந்தது. தின்றிருப்பேனோ என்னவோ!  ‘டேய்… வாயில வைக்கக் கூடாது அதை!’ என்று அம்மாவோ அப்பாவோ சுற்றியிருந்தோரோ தடுத்திருக்கலாம்.

மேளம், நாயனம் இல்லாமல் வயலினும் கீபோர்டும் வாசிக்கப்பட்ட ஒரு திருமணத்தை கண்டு அதிர்ந்திருக்கேன் சமீபத்தில்.  நாயனம் கெட்டி மேளம் இல்லாமல் ஒரு திருமணத்தை நினைத்தேப் பார்த்தில்லை. ஆனாலும் கண் முன்னே கண்டேன் நட்சத்திர விடுதியில் நடந்த அந்த திருமணத்தை.  திருமணங்களும் அதன் முறைமைகளும் மெதுவாக மாறிக் கொண்டேதான் வருகின்றன.

அறநிலை மணம், ஒப்பு மணம், பொருள்கோள் மணம், தைவம், யாழோர் கூட்டம், அரும் பொருள் வினை, இராக்கதம், பேய்நிலை என சங்க இலக்கியங்கள் சொல்லும் திருமண வகைகள், பிரம்ம விவாகம், அர்ஷ விவாகம், ப்ரஜபத்ய விவாகம், அசூர் விவாகம், கந்தர்வ விவாகம், ரக்‌ஷாஸ் விவாகம், பிஷாஷ் விவாகம், தெய்வ விவாகம் என வைதீகர்கள் சொல்லும் திருமண வகைகள் என திருமண வகைகள் காலம் உருள உருள மாறுதல்கள் அடைந்து நிற்கின்றன. மண முறைகள் ஒன்றோடொன்று கலந்து கூட நிற்கின்றன. (பெரும்பாலான திருமண முறைகளில்) தாலியும் அட்சதையும் மாறாமல் முக்கிய இடத்தைப் பிடித்துத் தொடர்கின்றன.

சில திருமணங்களில் கைகளில்  தாம்பாளம் ஏந்தி சபையோரிடம் அட்சதை தருபவனாக இருந்திருக்கிறேன், பல திருமணங்களில் அட்சதையை கையில் அள்ளி உள்ளங்கையில் வைத்துக் கொள்பவனாக இருந்திருக்கிறேன்.

தாலி கட்டுவதற்கு வெகு நேரத்திற்கு முன்பே அட்சதையைத் தந்து விடும் திருமணங்களில், ஒரு கையில் அதை வைத்துக் கொண்டு செல்லிடப்பேசியைப் பயன்படுத்த முடியா ஓர் இடைஞ்சல் அனுபவம் ஏற்படுகிறது. அருகிலிருக்கும் குத்தாலிங்கத்திடமோ பரியிடமோ தந்து விடுவது என் வழக்கம். அவர்கள் இல்லாத போது சகலகலா வல்லவ முயற்சிகள்தான் (அப்படி முயற்சித்து எடுத்ததே இந்தப் படம்)

கொழும்பில் பம்பிலப்பிட்டிய பகுதியில் நடந்த ராஜேந்திரன் மகள் திருமணத்தில் ஒரு சிமிழில் நிரப்பி அட்சதையைத் தந்தார்கள். எப்போது வேண்டுமோ அப்போது திறந்து எடுத்துத் தூவலாம். சில திருமணங்களில் சிறிய காகிதப் பையில், சிறு பொட்டலத்தில் தந்து நமக்கும் பேருதவி செய்து விடுகிறார்கள்.

திருமணங்கள் தாண்டி வேள்விகளிலும் வழிபாடுகளிலும் அட்சதையைப் பார்த்திருக்கிறேன்.  91ல் சென்னைக்கு வேலை தேடி வந்த போது திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெரு மேன்ஷனில் கீழ்த்தள அறையில் தங்கியிருந்த முரளிப்பிரகாஷின் அண்ணன் பிரசாத், வேலைக்குப் புறப்படும் போது, ‘பூஜ்யாய ராகவேந்த்ராய..’ என ஏதோவொரு மந்திரம் சொல்லிவிட்டு பூசைமாடத்தில் இருக்கும் பாத்திரத்திலிருந்து அட்சதையை எடுத்துத் தலையில் போட்டுக்கொண்டு போவதைக் கவனித்திருக்கிறேன்.  மத்துவ மைந்தர்கள் பலர் இதைச் செய்கின்றனர்.

அட்சதை என்றாலே மஞ்சள் நிறம்தானென்றாலும் எல்லா இடங்களிரும் ஒரே நிறமல் . சில இடங்களில் வெளிர் மஞ்சள் அட்சதைகள், சில இடங்களில் அடர்த்தியான மஞ்சள் நிறத்தில்.

பொதுவாகவே அரிசியைப் பார்த்தவுடன் பொன்னி, பொன்மணி, பி.பி.டி, வெள்ளை பொன்னி, கவுனி, குள்ளக்கார் என்று அடையாளம் காண விரையும் என் உள்ளம் அட்சதை அரிசியைப் பார்க்கும் போது மட்டும் இனம் கான முயலவேயில்லை என்பதை இப்போதுதான் உணர்கிறேன்.

எந்த திருமணத்தில் மணமக்களை வாழ்த்த அட்சதையைத் தந்தாலும் என் அப்பா நினைவு வந்து விடுகிறது எனக்கு.

‘அடேய்… அட்சதைன்னா முனை முறியாத, குத்தப்படாத அரிசி! உரல்ல கூட குத்தக்கூடாது. துண்டுல நெல்லை அள்ளி முடிச்சி தரையில தீட்டி தீட்டி உமி நீக்கி அரிசியாக்கி பசு நெய்யும் மஞ்சளும் கலக்கனும். என் மகன் கல்யாணத்துக்கு நான் அப்படித்தான் தயார் செய்வேன்!’

மணக்குடி வீட்டின் தோட்டத்து வாயிற்படிக்கருகே நின்று அப்பா சொன்னதும், அடுத்த சில நாட்கள் அம்மாவும் அப்பாவும் அதைச் செய்ததும் இருபத்தியைந்து ஆண்டுகள் ஓடிப்போன பின்னும் நினைவில் வருகின்றன.

அவர்கள் அப்படி மெனக்கெட்டு செய்ததற்காகவே நன்றாக வாழ்ந்துவிட வேண்டும்! 

அட்சதை…. தூவப் படட்டும்! வாழ்த்துகள் தொடரட்டும்! வாழ்வு செழிக்கட்டும்! வாழ்க! வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
02.02.2023

#Atchathai #Marriage #Ritual #MarriageRituals #Paraman #ParamanPachaimuthu #Manakkudi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *