போய் வாருங்கள் பாடகியே

‘நித்தம் நித்தம் நெல்லுச் சோறு, நெய் மணக்கும் கத்தரிக்கா…’
என் தந்தை போகிற போக்கில் பாட அவர் வழியாகவே அந்தப் பாடலை முதன் முறை கேட்டதாக என் நினைவு.

ரேடியோவும் இசைத்தட்டுகளுமே இருந்த டேப் ரெக்கார்டர் இன்னும் வந்திராத அந்த மணக்குடி காலங்களில், இந்தக் குரல் கேட்டே வளர்ந்தோம்.

மஞ்சள் நீராட்டு, திருமணம் என நற்காரியங்களில் பந்தலிட்டு, பந்தல்கால் சவுக்கு கழியின் உச்சியில் கட்டப்படும் கூம்பு ஒலிபெருக்கியில் ஒலிக்கப்படும் பாடல்களும் அது ஏற்படுத்தும் இறைச்சலும், அதன் வழியே வரும் பாடலும் பரவசம் தரும் கால்சட்டை அணிந்த சிறுவர்களுகான எங்களுக்கு.

திரைப்படத்தின் பெயர், இசையமைப்பாளர், பாடகர் யார் என விவரங்கள் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் வளர்ந்த அந்தப் பொழுதுகளில் ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ!’ மயக்கவே செய்தது.

மன்னம்பந்தல் ஏவிசி காலங்களில் மறுவெளியீடாக ‘நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா!’ எங்கள் காற்றுவெளியை நிறைத்தது.

‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…’ இன்று வரை சூப்பர் சிங்கர்களில் வசீகரித்துக் கொண்டுள்ளது.

‘கேள்வியின் நாயகனே…’ என் வகுப்புகளில் இன்று வரை ஒலிக்கவிடுகிறேன்.

இந்தக் குரலுக்கு சொந்தக்கார நாயகி வாணி ஜெயராம் இயற்கை எய்தியிருக்கிறார் இன்று.

போய் வாருங்கள் வாணி ஜெயராம். உங்கள் மரணம் இப்படி மர்மமாக இருந்திருக்க வேண்டாம். நெற்றியில் காயங்களோடு ரத்தம் கசிந்து தனியே இறந்து கிடக்க வேண்டாம் நீங்கள்.

  • பரமன் பச்சைமுத்து
    04.02.2023

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *