‘மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்தெல் என்று யானை கட்டிப் போரடித்த…’ என்று சங்கப்பாடல் குறித்தது போய், ‘ஆட்கள் வைத்துப் போரடித்தால் அல்லோலகல்லோலப்படுவோமென எந்திரம் வைத்து நெல்லறுக்கும் காலமிது!’ என்றாகிப் போனது இன்று.
மணக்குடி போன்ற ஊர்களில் இரு வகை இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன நெல் அறுவடைக்கு. வளர்ந்த கதிர்களை அப்படியே அறுத்து உள்ளிழுத்து சுழற்றியடித்து நெல்மணிகளை பீறாய்ந்து எடுத்து வைக்கோல் தாள்களை மட்டும் பிரித்து வெளியே தள்ளும் அறுவடை இயந்திரம். பொதியாக கிடக்கும் வைக்கோலை அழுத்தி சுற்றி உருளையாக மாற்றித் தரும் வைக்கோல் கட்டும் இயந்திரம்.
இந்த வைக்கோல் உருளை செய்யும் இயந்திரம் வந்த பின்பு எல்லாமே மாறிவிட்டது.
கூரை வீடுகளில் கீற்றின் மேல் வேய்வதற்கும், குயவர்கள் பச்சை மண் பானைகளை சூளையிலிட்டு மெழுகிக் கொளுத்துவதற்கும், நெல், எள், உளுந்து, பயிறு போன்ற தானியங்களை சில சமயங்களில் மூடி மெழுகிக் காப்பதற்கும் என சில காரணங்களுக்கும் வைக்கோல் பயன்பட்டது என்றாலும் அதிகமாகப் பயன்பட்டது மாடுகளுக்கு உணவாகத்தான்.
மாடுகள் வளர்த்த காலங்களில் வைக்கோல் என்பது முக்கிய உணவு பொருள். பசும் புல்லும், வைக்கோலும் மட்டுமே உணவு. எள்ளோ மல்லாட்டையோ (வேர்க்கடலை) ஆடி எண்ணெய் பிழிந்த பிறகு மீதி விழும் சக்கையான புண்ணாக்கை, நெல் அரைத்த தவிடோடும் பருத்திகொட்டையோடும் கலந்து மாடுகளுக்கு தருவதுண்டு. மாடுகளுக்கு கிட்டத்தட்ட ‘பிரியாணி’ அது. கடைகளில் வாங்கும் தீவனங்கள் என்பதெல்லாம் மிகக் குறைவு அக்காலங்களில். வைக்கோலே முதன்மை உணவு. மாடுகளை அவிழ்த்துப் போய் தண்ணி காட்டிவிட்டு திரும்பவும் கொண்டு வந்து கட்டி விட்டு, கவணையில் வைக்கோலை அள்ளி நிரப்பிவிட்டால் போதும், சில மணி நேரங்கள் கழித்து வரலாம். போதிய அளவு உண்டு விட்டு, படுத்து அசை போட்டுக்கொண்டு கிடக்கும் அவை.
மணக்குடி போன்ற ஊர்களில் மாடு வளர்ப்பு குறைந்து விட்டது. இளந்தலைமுறைகள் பிழைப்புக்காக நகரங்களை நோக்கியும் வெளிநாடுகளுக்கும் சென்று விட, ஊரிலிருக்கும் வயது முதிர்ந்தவர்களால் மாடுகளை பராமரிக்க முடியவில்லை. பல காரணங்களால் மாடுகள் குறைந்து விட, உழவு, அறுவடை என எல்லாமே இயந்திரங்களால் செய்யப்படுகின்றன இப்போது. மாடுகள் இல்லையென்பதால் வைக்கோலை கொண்டு வந்து வீடுகளின் பின்புறம் போர் போடுவது தேவையில்லாததாக ஆகிவிட்டது. வடிவேல் படங்களில் பார்த்த வைக்கோல் போர் நகைச்சுவை காட்சிகள் இருக்காது இனி. வைக்கோல் போரைக் கொளுத்தி வீட்டைக் கொளுத்தும் தீயவர்கள் வேறு வழி தேடுவார்கள்.
மாடியிலிருந்து வைக்கோல் போரின் மீது ‘உஹ்ஹாஹா!’ என்று குதித்து, அவ்வளவு உயர வைக்கோல் போரிலிருந்து சறுக்கிக் கொண்டே கீழே வந்து சாகசம் செய்த, தொடையில் முழங்காலில் வைக்கோல் சுணையால் அரிப்பு வந்து ஓடிப்போய் குளத்தில் குதித்த என் சிறுவயது அனுபவங்கள் இனி வருபவர்களுக்கு இல்லாமல் போகும்.
வைக்கோலை அழுத்தி தோசை போல நீண்ட தகடாக்கி அதே அழுத்தத்தில் உருட்டி உருட்டி பெரிய உருளையாக மாற்றி தந்துவிடும் இந்த இரண்டாவது இயந்திரத்தால் எல்லாமே மாறிவிட்டது. நெல் அறுத்த வயலில் இறங்கி வைக்கோலை உருளையாக மாற்றிப் போட்டுவிடுகிறது இயந்திரம். ஒரு பெரிய வைக்கோல் போரையே நான்கு அல்லது ஐந்து உருளைகளாக மாற்றி விட்டு ‘வேறென்ன சொல்லு!?’ என்று கேட்கிறது இந்த பகாசுர எந்திரம்.
வயலிலிருந்து வைக்கோல் உருளைகளை டிராக்டர்களில் ஏற்றிக்கொண்டு அப்படியே காகித ஆலைகளுக்கோ, அமேசானில் விற்பதற்கோ, வியாபாரிகளுக்கோ கொண்டு போய் வெளிமாநிலங்களுக்குத் தந்து விடுகிறார்கள்.
எல்லாமே மாறிக்கொண்டிருக்கிறது.
இன்று மணக்குடி வடக்குவெளிப் பகுதியில் நடந்த போது, இந்த வைக்கோல் உருளையைப் பார்த்தேன்.
‘டேய் பரி! எவ்ளோ எடை இருக்கும் ஒரு உருளை?’
’30 கிலோ இருக்கும்ணா! அண்ணா! என்ன செய்யப் போறீங்க?’
‘தொட்டுப் பாக்கப்போறேன். தூக்கிப் பாக்கப் போறேன்!’
– பரமன் பச்சைமுத்து
மணக்குடி
27.02.2023
#Paddy #PaddyStraw #Vaikol #Manakkudi #ParamanTouring #ParamanManakkudi #ParamanPachaimuthu #Paraman