என் பள்ளி நாட்களில் பரமகுரு போன்ற தோழர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்ட, பிறகு இரண்டாம் கட்ட வெளியீடாக சிறு நகரங்களில் திரையிடப்பட்ட போது கீரப்பாளையம் விஆர்கே டூரிங் டாக்கீஸில் பாலசரவணனின் பரிந்துரையில் அவனோடு மணக்குடியிலிருந்து சைக்கிளில் போய் நான் பார்த்த படம் – ‘ஊர்க்காவலன்’
‘அந்த வானத்துல இருக்கற சூரியன் எழறதுக்கு முன்னாடி எழுந்து, ஆ… ஜில்..சக்… ஜில்…சக்க்குனு நடந்து வந்து… ‘அத்தான் எழுந்துருங்க!’ன்னு…’ என்று ரஜினியும் ராதிகாவும் நடிக்கும் அந்தக் காட்சிகளை ரசித்துக் கொண்டாடியிருக்கிறேன் அவ்வயதில்.
இன்றும்
‘ஊர்க்காவலன்’ என்று சொன்னாலே,
‘மாசி மாசம்தான்… சொல்லு, சொல்லு!’ பாடல், மாருதி காரை கயிறு கட்டி காலால் நிறுத்தும் காட்சிகள் பலவற்றோடு, அந்த அதிகாலை எண்ணெய்க்குளியல் ‘மல்லியப்பூ மாதிரி இட்லி’ காட்சியும் மனதில் வந்து போகும்.
இன்று வரை அந்தப் படத்தை இயக்கியது மனோபாலா என்று தெரிந்திருக்கவில்லை. ‘நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மனோபாலா மரணம்!’ என்ற செய்திகளினூடே அவர் இயக்கிய படங்கள் என்று ஓடிய பட்டியலில் ‘ஊர்க்காவலன்’ பெயரைப் பார்த்தே அறிந்து கொண்டேன்.
இத்தனை ஆண்டுகளில் பல படங்களில் நகைச்சுவை நடிகராக கத்தி கத்தி பேசி நடிக்கும் மனோபாலாவை, அவரது பாணியை, உடல் மொழியை எல்லாம் கொண்டு என் மனம் உருவாக்கி வைத்திருக்கும் உருவகம், இன்று ஊர்க்காவலன் படத்து நகை காட்சிகளோடு பொருந்திப் போகிறது. ‘ஓ இவரோட காட்சிகள்தானா அவை!’ என்று நிற்கிறது.
மனோபாலா… ‘கொன்னுட்டான், கொலை பண்ணிட்டான், செத்தான், சாவடிச்சான்!’ என்ற வகை வார்த்தைகளை வைத்து பொது நிகழ்ச்சியில் வடிவேலோடு நகை செய்வார்.
மனோபாலா… நீங்கள் இன்னும் சில படங்களை இயக்கியிருக்கலாம், இன்னும் சில படங்களின் பேய் வீடுகளில் சுழன்று சுழன்று கத்தி கதறி மக்களை சிரிக்க வைத்திருக்கலாம், இன்னும் சில படங்களை தயாரித்திருக்கலாம்… ஆனால், அதற்குள் போய்விட்டீர்கள்!
போய் வாருங்கள்!
உங்களது இயக்கத்தில் வந்த படத்தை என் பதின்ம வயதில் ரசித்திருக்கிறேன்! நன்றி!
பிரார்த்தனைகள்!
– பரமன் பச்சைமுத்து
03.05.2023
#Manobala #ActorManobala