பொன்னியின் செல்வன் 2′ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

wp-1682706185115.jpg

சுந்தர சோழரே பழுவேட்டரையர்களின் சிறையில் இருக்கிறார் என்று பேச்சுகள் நிகழும் வேளையில் சுந்தர சோழரால் ஈழத்திலிருக்கும் இளவல் அருண்மொழியை சிறை செய்து வர கட்டளை பிறப்பிக்கப்பட்டு, அப்படி வந்த கலம் புயலில் அடிபட்டு உடைந்து  அருண்மொழி கடலில் மூழ்கினார் என்பதோடு முடிந்த ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ன் தொடர்ச்சியாக விரிகிறது இப்போது வந்திருக்கும் ‘பொன்னியின் செல்வன் பாகம் 2’.

தொடக்கத்தில் வரும் இளம் பிராயத்து நந்தினி, ஆதித்த கரிகாலன் காதல் காட்சிகள், ஒளி, வண்ணம் என காட்சிப்படுத்தலால் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. குறிப்பாய் இளங்கோ கிருஷ்ணனின் ‘சின்னஞ்சிறு நிலவே’ வரிகளும், காட்சிகளும்.  அதில் தொடங்கி
இறுதிக் காட்சி வரை ஒளி, வண்ணம், உடைகள், ஒப்பனை, இசை என கடைசிக் காட்சி வரை அதே மெறுகில் தந்திருக்கிறார்கள்.

விக்ரமும், ஜஸ்வர்யா ராயும் தாங்கள் தேர்ந்த நடிகர்கள் என்பதை பல இடங்களில் காட்டுகிறார்கள். கரையேறி சினத்துடன் வரும் பார்த்திபேந்திர பல்லவனை கூணாரத்தில் விழியாலும் மொழியாலும் வீழ்த்தி வழிக்கு கொண்டு வரும் காட்சி, ரவிதாசனிடம் ‘என்னால செய்ய முடியாததை உன்னால செய்ய முடியாது!’ என்று சொல்லும் காட்சிகள் உதாரணங்கள்.
வசனம் ஜெயமோகன் + மணிரத்னம்.

‘அருண் மொழி ரோலுக்கு போய்  ஜெயம் ரவியா?’ என்று போன பாகத்தில் கேட்டவர்கள் இனி கேட்க மாட்டார்கள் என்பது போல கூணுதலாகத் பொருந்தி விட்டார் ஜெயம் ரவி 2 ஆம் பாகத்தில்.  யானை காதில் பேசி அதை ஓடச் செய்யும் கல்கியின் காட்சி பாகம் 1ல் வீண்டிக்கப்பட்டது என்று நாமே எழுதியிருந்தோம். 2 ஆம் பாகத்தில் அதற்கு ஒத்த யானை காட்சியை சிறப்பாகக் காட்சிப் படுத்தி அசத்திவிட்டனர். ஜெயம் ரவியும் வெகு சிறப்பாய் பொருந்துகிறார்.

குந்தவை த்ரிஷா, செம்பியன் மாதேவி, பூங்குழலி என பலரும் பாகம் 2ல் பாத்திர வெளிப்பாட்டின் படியும் ஒப்பனைப்படியும் கூடுதல் அழகாய் உள்ளனர்.

கல்கியின் புனைவில் இல்லாத  திரையில் மணிரத்னம் மாற்றி சேர்த்துள்ள வந்தியத்தேவன் – குந்தவை சந்திப்பு உரையாடல் சிறப்பாகவே உள்ளது.

நாகப்பட்டினம் சூடாமணி விகாரத்திற்குப் போகும் அந்த கால்வாய், சூடாமணி விகாரை, பழையாறை அரண்மனை, தஞ்சை அரண்மணை, கொற்றவை சிலையுடன் கூடிய கடம்பூர் மாளிகை, யானைப் பாகன் காட்சி, அதற்கு முன் வந்தியத்தேவன் பாண்டிய ஆபத்துதவி ஒருவனை துரத்தி ஓடுவதை திரை முழுக்க காட்டிய விதம் என படம் முழுக்க காட்சிப்படுத்தலில் ஒளி வண்ணத்தில் விருந்து தந்திருக்கிறார்கள்.

வந்தியத்தேவன் – குந்தவை காதல் காட்சி, இளம் நந்தினி – ஆதித்தன் காதல் காட்சிகள், வளர்ந்த கரிகாலன் – நந்தினி காட்சிகள் என மூன்றுமே கவர்கின்றன.

முதல் பாதி படம் திரும்ப விடாமல் நம்மை இழுத்து உட்கார வைக்கிறது. இரண்டாம் பாதி கிளைமேக்ஸுக்கு பத்து நிமிடங்கள் முன்பு தளர்ந்து விழுந்து பின்பு எழுந்து சீராகி ஓடுகிறது.

சிறப்பாக உழைத்திருக்கிறார்கள்,

‘புதினத்தை எடுத்துக் கொண்டு பல விவாதங்கள் ஆராய்சிகளுக்குப் பிறகு சிலவற்றை திரைக்காக சேர்த்திருக்கிறோம்!’ என்று படம் தொடங்கும் முன்பே போட்டு விட்டார்கள்.  இருந்தாலும் சிலவற்றை சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ஆகத் தொடங்கி, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ஆக முடிகிறது படம்.

ராஷ்டிரகூட மன்னனுடன் மதுராந்தகன் சேர்ந்ததாக கல்கியின் புதினத்தில் இல்லை. இருட்டில் குதிரையில் புறப்பட்டு போய்விட்டான் மதுராந்தகன் என்று முடித்திருப்பார்.  சம்புவராயர் மகள் மணிமேகலை பாத்திரமே முற்றிலும் இல்லை படத்தில். சேந்தன் அமுதனே பின்னாளைய அரசன் உத்தம சோழன் என்று எழுதியிருப்பார் கல்கி.

குந்தவை, ஆதித்த கரிகாலன், அருண்மொழி சந்திப்பு, ராக்கம்மா கணவன் படகோட்டி முருகையனையும் சிறையில் இருந்த கருத்திருமன் பாத்திரத்தையும் ஒரே பாத்திரமாக்கியது, நந்தினியின் பழைய வாழ்க்கையை நினைவு கூர்ந்து ரவிதாசன் சொல்வதை சேடிப்பெண் சொல்வதாக வைத்தது, கால்கள் செயலிழந்து படுக்கையிலேயே கிடந்த சுந்தர சோழரை திடகாத்திரமாக உலவ விட்டது, அருண்மொழி வர்மன் பாத்திரத்திற்கு வலு சேர்க்க ராஷ்டிரகூட போரில் பங்கேற்பதாக சேர்த்தது என கல்கியில் இல்லாத சிலவற்றை புனைவு செய்து திரையில் புதிதாக சேர்த்திருக்கிறார்கள்.

வந்தியத் தேவனை சிறையில் வைத்திருக்கும் காட்சிகள், அதற்காக அருண்மொழியும் குந்தவையும் கொள்ளும் தவிப்பு, இனி வந்தியத்தேவனை எவராலும் காப்பாற்ற முடியாது என வாசகன் பதறும் போது, கொள்ளிடத்தில் வெள்ளத்தில் அடிபட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அரண்மனைக்கு வந்து, ‘இந்தப் பிள்ளை உத்தம்மான பிள்ளை!’ என்று பெரிய பழுவேட்டரையர் சொல்வது, அதை விட முக்கியாமாய் ‘ஆதித்த காரிகாலனின் உயிரைத் தன்னால் காப்பாற்ற முடியவில்லை, தானே காரணம்!’ என்று பொறுப்பேற்று யாரும் எதிர்பாராத நேரத்தில் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு மன்னர் முன்னிலையிலேயே உயிரை விடும் பெரிய பழுவேட்டரையர் என உணர்வை தூண்டி அசத்தும் கல்கியின் காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை.

5 பாகங்களில் கல்கி சொன்னதை 2 பாகங்களில் திரையில் தருகிறார்கள், அதனால் சில விடுபடவே செய்கின்றன என்பதை ஏற்றுக்கொள்வோம்.  ஆனால், வீராணம் ஏரி, பழையாறை, திருப்புறம்பியம் போர், கடம்பூர் தேவராளன் கூத்து, சதியாலோசனை, கடல்மல்லை, காஞ்சிப் பொன்மாளிகை, ஈழம், சிகிரிய கோட்டை, அனுராதபுரம், பூதத்தீவு, பாண்டிய ஆபத்துதவிகள், தஞ்சை மாளிகை, படகோட்டி பூங்குழலி, பழுவேட்டரையர், பார்த்திபேந்திரன், பழுவூர் நந்தினி என கல்கியின் மொத்த புதினமும் சோழ நாட்டின் அளவற்ற அதிகாரங் கொண்ட ஆட்சிப் பீடத்தை கைக்கொள்ள பல போட்டிகள் சதிகள் நடைபெற்றன என்பதை கொஞ்சம் கொஞ்சமாக எழுப்பி, அந்த அதிகாரம் தாமாக வந்து காலடியில் நின்ற போது, ‘இது எனக்கு வேண்டாம்! அவனுக்குக் கொடுக்கிறேன்!’ என்று தியாகம் செய்தான் ஒருவன் என்று உச்சம் வைத்து முடித்திருப்பார் கல்கி. பொன்னியின் செல்வனின் முக்கிய சங்கதியே அதுதான். அந்த பாகத்தின் தலைப்பே ‘தியாக சிகரம்’தான்.  அப்படி அருண்மொழி செய்யும் தியாகம் திரையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை என்பது குறைதான்.

இப்படி குறைகள் இருந்தாலும், சில புனைவுகளை தங்களின் கற்பனை, ஆராய்ச்சி அடிப்படியில் சேர்த்திருந்தாலும், திரையில் பொன்னியின் செல்வனை தந்த விதத்தில் அசத்தியிருக்கிறார்கள். கண்களில் ஒற்றிக்கொள்ளும் விதமான ஒளியமைப்பு காட்சிகள், இசைக் கோர்ப்பு, கலைஞர்களின் பங்கு என கூட்டு உழைப்பு.

வி – டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘பொன்னியின் செல்வன் 2’ : கல்கி முக்கால், மணிரத்னம் கால். கவர்கிறது. நிச்சயம் பாருங்கள்.

: திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து

#PonniyinSelvan #PenniyinSelvan2 #Ps2 #Maniratnam #ParamanReview #Ps2Reveiw #AishwaryaRai #Karthi #Vikram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *