‘ஒரு கிண்ணம் பாக்டீரியா, பி12, இரும்புச் சத்து…!’ : பரமன் பச்சைமுத்து

‘ஒரு கிண்ணம் பாக்டீரியா, பி12, இரும்புச் சத்து…!’ :

கேள்வி: பழைய சோறு பற்றி உங்களுடைய பதிவு ஒன்றில் பார்த்தேன். நானும் உண்ணலாமா?

பதில்: நாம் உண்ணும் உணவை செரிப்பதற்கு பாக்டீரியாக்களின் உதவி தேவை. நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் என்றழைக்கப்படும் இவை நம் வயிற்றில் இருந்து கொண்டு தங்கள் பணியை செவ்வனே செய்து நமக்கு உதவுகின்றன.

காய்ச்சல் அல்லது வேறு உடல் நலக்குறை ஏற்பட்டு ஆன்ட்டிபயாடிக் அல்லது பேஏன்-டி போன்ற மாத்திரைகள் சாப்பிடும் போது பலருக்கு செரிமான பிரச்சினைகள் ஏற்பட்டு தண்ணீராக மலம் கழியும் பிரச்சினைகள் ஏற்படும். ஏன்? உடலில் உள்ள கிருமியை தாக்க தரப்படும் ஆன்ட்டிபயாடிக் மருந்து, வயிற்றிலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியவையும் கொன்றுவிடும். அந்த நேரங்களில் ‘நியூட்ரோலின் பி’ மாதிரியான ‘ப்ரோ பயோடிக்’ எனப்படும் மாத்திரை ஒன்றையும் உணவுக்கு முன்பு விழுங்கச் சொல்வார்கள். இந்த ‘ப்ரோ பயோடிக்’ மாத்திரை என்பது பாக்டீரியாக்களை ஓர் உறையின் உள்ளே அடைத்து வைத்த மாத்திரைதான். இவை உள்ளே போனதும் வயிற்றின் செரிமானம் இயல்புக்குத் திரும்பிவிடும்.

இப்போது நீங்கள் கேட்ட பழைய சோற்றுக்கு வருவோம்.

ஓரிரவு அல்லது 8 மணி நேரங்கள் நீரூற்றி விடப்பட்ட சோற்றில் பாக்டீரியாக்கள் வளர்ந்து செறிந்து இருக்கும். சோறும் புளித்து மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கும்.

காலையுணவாக அந்த பழைய சோற்றையும் நீரையும் கொள்ளும் போது, அதில் செறிந்த பாக்டீரியாக்கள் உங்கள் வயிற்றுக்கு செல்கின்றன. அதிக நீர்ச்சத்துகள் இருப்பதால், கோடையில் சிலருக்கு ஏற்படும் வயிறு – செரிமான – உடல் சூடு கோளாறுகள் சரி செய்யப்படுகின்றன.

‘பரமன், பழைய சோறு பற்றி நவீன மருத்துவம் அல்லது ஆராய்ச்சி முனிவுகள் ஏதும் உள்ளதா?’ என்பது உங்கள் கேள்வியாக இருக்கக் கூடும்.

8 மணி நேரம் நீரில் ஊறிய பழைய சோற்றில் பி12 சத்து வந்துவிடுவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். பொட்டாசியம், புரதம், இரும்புச் சத்துகளை அள்ளித் தருகிறது பழைய சோறு என்கிறது அமெரிக்கன் நியூட்ரிஷியன் அசோஸியேஷனின் ஆய்வு முடிவு. வடித்த சாதத்தில் சராசரியாக 3.34 மிகி இரும்புச் சத்து இருக்கிறதாம். அதுவே பழைய சாதமாக மாறும் போது 73.91 மிகி் இரும்புச் சத்தை கொண்டிருக்கிறதாம்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் குடல் சிகிச்சை பிரிவில் மருத்துவர் ஜஸ்வந்த் தலைமையில் ஒரு குழு இயங்கி நோயாளிகளை உட்படுத்தி பெரும் ஆராய்ச்சி ஒன்றையே முடித்துள்ளனர். பழைய சோற்றை தொடர்ந்து எடுத்துக் கொள்வோருக்கு குடல் பிரச்சினைகள் அரிதாக வருகின்றன என்பது ஸ்டான்லி மருத்துவமனை குழுவின் ஆய்வுப் பரிந்துரை. குடல் சிகிச்சைக்காக வருகிறவர்களுக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் காலையுணவாக பழைய சாதமே தரப்படுகிறது என்பது குறிப்பிட்டாக வேண்டிய சங்கதி.

‘ஸ்டார்ச் ரெசிஸ்டன்ஸ்’ என்பதால் சர்க்கரை நோயாளிகள் அளவாக உண்ணலாம், நல்லது என்கிறார்கள் என்றாலும் சர்க்கரை நோயுள்ளவர்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று முடிவு செய்யவும் என்பதே எனது முதன்மை பரிந்துரை.

கிராமப்புரங்களில் பழைய சோற்றின் நீரை மட்டும் எடுத்து உப்பு கலந்து அதிகாலை வெறும் வயிற்றில் பருகுவர். ‘நீராகாரம்’ என்றழைக்கப்படும் இது பாக்டீரியாக்களின் செறிவால் செரிமானத்தைத் தூண்டி பசியைத் தூண்டும். மலச்சிக்கலையும் நீக்கும்.

‘ஆற்று நீர் வாதம் போக்கும், அருவி நீர் பித்தம் போக்கும், சோற்று நீர் இரண்டும் போக்கும்!’ என்று பழைய சோற்றின் நீரை உயர்த்திப் பிடிக்கிறது சித்த மருத்துவம்.

நவீன ஆராய்ச்சி முடிவுகளும் பாரம்பரிய முறையும் ஒன்றாக கை காட்டுமிடம் பழைய சோறு என்பது என் கண்ணோட்டம்.

மண் பானையில் /சட்டியில் நீரூற்றி ஊற விடப்படும் பழைய சோறே பாக்டீரியா செறிவை தருகிறது என்கிறார்கள். முழுதும் மூடுவதை விட ஈரத்துணி கொண்டு மூடி வைப்பது இன்னும் சிறந்தது என்கிறார்கள்.

வேறென்ன, இன்று வடித்த சோற்றில் நீர் விட்டு மூடி வைத்து (ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது) நாளை காலை மோர் விட்டு பிசைஞ்து, உங்களுக்குப் பிடித்த துவையலோடோ சின்ன வெங்காயத்தோடோ பசி போக்கும் அளவிற்கு உண்டு களியுங்கள்!

நீங்கள் உண்ணும் அந்த ஒரு கிண்ணம் பழைய சோறு என்பது ஒரு கிண்ணம் பாக்டீரியா, பி12, இரும்புச்சத்து! உண்டு களியுங்கள்!

வாழ்க! வளர்க!

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை

( ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழிலிருந்து)

Valarchi #ValarchiTamilMonthly #Paraman #ParamanPachaimuthu #PazhaiyaSoru #பழையசோறு #பரமன் #வளர்ச்சி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *