சிங்கபுர நாடு – காடவர் கோன் கோட்டை

wp-16835722145804110226050559937873.jpg

ராஜராஜனை சிறைபிடித்து கைதியாக வைத்த இடம் எது?

‘என்னாதூ!! ராஜராஜனை தோக்கடிச்சி, சிறைப்படுத்தி கைதியா வச்சிருந்தாங்களா!? எப்பேர்பட்ட வீரன் அவர்!’ என்று கேள்வி எழுகிறதா?  கொஞ்சம் பொறுங்கள் சொல்கிறேன்.

‘பாதுஷாபாத்’ தெரியுமா? சரி ‘சிங்கபுர நாடு’ எங்கிருக்கிறது தெரியுமா?  ராணி மங்கம்மா முகலாயர்களோடு சேர்ந்து மராத்திய சிவாஜியின் படைகளை எதிர்த்தது எந்த இடத்திற்காக என்று தெரியுமா?

நாம் மேலே சொன்ன இடத்துக்கும் மணிரத்னத்தின் உதவியாளர் அழகம்பெருமாள் இயக்கிய ‘டும் டும் டும்’ படத்துக்கும் என்ன சம்மந்தம்?

ஆங்கிலப் படம் ‘300’ பார்த்திருப்பீர்கள். தமிழக வரலாற்றில் நிகழ்ந்த வீரமிகு  ‘300’ வீரர்கள் போர் தெரியுமா?

சோழர்கள் வலிமையாக இருந்த காலத்தில் அவர்களது ஆளுகைக்கு உட்பட்ட மலைகளும் பாறைகள் நிறைந்த வயல்களும் கொண்ட பகுதியாக சிங்கபுர நாடு இருந்தது. 

சோழர்கள் வலிமை குன்றிய காலத்தில் சிங்கபுர நாடு பகுதியை
பல்லவர்கள் வழி வந்த
காடவர்கள் ஆட்சி செய்தனர். காடவ வம்சத்தில் இருந்த வலிமையான ஓர் அரசன் செஞ்சியர் கோன் காடவன். பெரும் யானைகளையும் படைகளையும் கொண்டிருந்த அவன் குன்றுகளை தேர்வு செய்து அதை இணைத்து கோட்டை ஒன்றைக் கட்டி அங்கிருந்து ஆட்சி செய்தான். 12 ஆம் நூற்றாண்டில் செஞ்சியர் கோன் காடவனால் தொடங்கப்பட்டு 13 ஆம் நூற்றாண்டில் கோப்பெருஞ்சிங்கன் காடவன் ஆட்சியில் முடிக்கப்பட்டிருக்கிறது.

(இதே கோட்டையை இடையர் குலத்தை சேர்ந்த அனந்தக் கோன் கட்டியதாக ஒரு தகவலும் உண்டு. நாம் நீலகண்டசாஸ்திரியின் ‘சோழர்கள்’ நூலை ஆதாரமாகக் கொண்டு காடவர் மன்னன் கட்டியது என்ற பார்வையில் பார்க்கிறோம் )

( கடியரணச் செம்பொற் பதணஞ் செறியிஞ்சிச்
     செஞ்சியர்கோன் கம்பக் களியானைக் காடவனும்
                                    – (விக்கிரம சோழன் உலா – கண்ணி 79 & 80)

     பொருள் : காவல் கொண்ட மதிலையுடைய சிவந்த பொன்னாலாகிய மேடைகள் நெருங்கிய கோட்டை சுற்றிய செஞ்சியர்கோனாகிய தூணிற் கட்டப்படுஞ் செருக்குடைய யானையைக்கொண்ட காடவன் என்பவனும்.)

காடவர்களுக்குப் பிறகு இந்த நிலம் இடையர்கள், குறும்பர்கள் என பலராலும் ஆளப்பட்டு பிறகு நாயக்கர்கள் வசம் வந்தது. பெத்த கிருஷ்ண நாயக்கர் ( பெரிய கிருஷ்ணன்!!!??) ஆட்சி செய்தபோது இந்தக் கோட்டையை மேலும் சிறப்பாக வடிவமைத்து பாதுகாப்பு கூட்டினாராம்.  கோட்டை மதில் சுவரெல்லாம் இவர் கட்டியதுதானாம்! அடேயப்பா, இன்னும் உறுதியாக உயரமாக நிற்கிறது சுவர். அதன்பிறகு பீஜப்பூர் சுல்தான் கைப்பற்றினார். அதன் பிறகு 1677ல் மராட்டிய சத்ரபதி சிவாஜி கைப்பற்றினார்.

சிவாஜிக்கு இந்த கோட்டையும் அதன் அமைப்பும் மிகவும் பிடித்துப் போனது. ‘எதிரிகளால் புகவே முடியாத கோட்டை!’ என்று கொண்டாடி தன் ஆளுகையில் வைத்திருக்கிறார்.

மராட்டிய சிவாஜியிடமிருந்து கைப்பற்ற ஔரங்கசீப்பின் படைத் தளபதியோடு சேர்ந்து ஆற்காடு நவாப்பும் மதுரை ராணி மங்கம்மாவும் எட்டு ஆண்டுகள் போரிட்டு கைப்பற்றினர். அன்றிலிருந்து முகலாயர் வசம் வந்தது கோட்டை.

முகலாயர்கள் கோட்டையின் பொறுப்பை ராஜபுதன தளபதி சரூப் சிங்கிடம் தந்து நிர்வகிக்கத் தந்தனர். ஔரங்கசீப் இறந்ததும் ஆற்காடு நவாப்பிடம் செலுத்தி வந்த கப்பத்தை நிறுத்திவிட்டார். அதன் பிறகு அவரது மகன் தேவ் சிங் கோட்டைப்பொறுப்பையும் அந்தப் பகுதியின் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றார்.   ‘நிலுவைத் தொகை கப்பத்தை உடனே கட்டு!’ என்று செய்தியனுப்பிய ஆற்காடு நவாப்பின் கட்டளைக்கு பணிய மறுத்து ஆற்காடு நவாப்பின் 8,500 வீர்ர்களோடு வெறும் 300 குதிரை வீரர்களை வைத்துக்கொண்டு பெரும் வீரமாகப் போரிட்டு வீரமணம் எய்தினார். கோட்டை ஆற்காடு நவாப் வசம் வந்தது.

பிறகு பிரஞ்சுக்காரர்கள் கைப்பற்றினார்கள். பிறகு ஐதர் அலி கைப்பற்றினார்.

இதற்கு நடுவில் ஒரு கதை சொல்ல வேண்டியிருக்கிறது.  சொல்லி விட்டு ஐதர் அளிக்க வருவோம்.

…..

ஔரங்கசீப்பின் மறைவுக்குப் பிறகு, தந்தை  தளபதி சரூப்சிங் போலவே ஆற்காடு நவாப்புக்கு கப்பம் கட்ட மறுத்தானே தேவ் சிங், குறுகிய காலமே ஆட்சி புரிந்தாலும் அவனது வீரம் மக்களை கவர்ந்தது.

வெறும் 300 குதிரைகளை வைத்துக் கொண்டு 8500 வீரர்களை எதிர்க்கத் துணிந்த அவன் மக்களிடம் பெரும் பெயர் பெற்றான். போரில் தோற்று கோட்டை கைவிட்டுப் போனதும், ‘இனி கொன்று விடுவார்கள், ஓடினால் முதுகில் புண் பட்டு இழிவாக சாவேன்! அது கூடாது!’ என்று முடிவெடுத்து போர்க்களத்தில் அவன் செய்தது ரஜினி படங்களில் வருவதற்கு ஈடானது.

தன் வாளை வானை நோக்கி எறிந்து அது திரும்ப பூமி நோக்கி வருகையில் மார்பைக்காட்டி மார்பில் வாங்கி வீர மரணம் அடைந்தான்.    தேவ் சிங் இறந்த செய்தி கேட்டு ராணியும் இறந்தார்.

வெற்றி பெற்ற ஆற்காடு நவாப் தேவ் சிங்கை மரியாதையோடு கொண்டு வந்து அவனது சொந்த மண்ணில் நகரில் நல்லடக்கம் செய்தான். உயிர்துறந்த ராணியின் நினைவாக தனது ஆளுகைக்குட்பட்ட பகுதியில் ஒரு ஊரை உருவாக்கி அதற்கு ‘ராணிப் பேட்டை’ என்று பெயர் வைத்தான்.

இளம் வீரன் மன்னன் தேவ் சிங்கின் வீரம் மக்களை கவர்ந்து கலங்கடித்தது. மக்களின் கதைகளில் கூத்துகளில் தேவ் சிங் இடம் பெற்றான். தேவ் சிங்கின் வரலாற்றை கேட்டே அடுத்த சந்ததி வளர்ந்தது.  தேவ் சிங்கை தங்கள் கதை நாயகனாகவே உருவகித்த மக்கள் காலப்போக்கில் அவனது ‘தேவ் சிங்’ என்ற பெயரை திரிபுடன் ‘தேசிங்கு’ என்றும் ‘ராஜா தேசிங்கு’ என்றும் சொல்லத் தொடங்கினர்.

மணிரத்னத்தின் உதவியாளர் அழகம்பெருமாள் இயக்கிய ‘டும் டும் டும்’ திரைப்படத்தில் கூட இந்த வீரமன்னனின் கம்பீர தோற்றத்தில் மாதவன் வருவதாக காட்சிப்படுத்தி, ‘தேசிங்கு ராஜா, தேசிங்கு ராஜா…திருதிருவென முழிப்பது ஏன்?’ என்ற கார்த்திக் ராஜா இசையமைத்த பாடலை வைத்திருப்பார்கள்.

……

மறுபடியும் கோட்டை கதைக்கு வருவோம்.

1780ல் ஐதர் அலியின் கைக்கு வந்தது கோட்டை. அதற்குப் பிறகு நாம் பாடபுத்தகத்தில் படித்தபடி, 1799ல் ஐதர் அலியிடமிருந்து ஆங்கிலேயர்களிடம் வந்தது கோட்டை.

ஆங்கிலேயர்கள் வசம் வந்ததற்குப் பிறகு போர்கள் படைகள் என எதுவும் இல்லை. ஆங்கிலேயர்கள் அனுபவித்தனர்.   சுதந்திரத்திற்குப் பிறகு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்கும் சுற்றுலாத்துறையின் அனுமதிக்கும் வந்து விட்டது இந்தக் கோட்டை.

‘பரமன், ராஜராஜ சோழனை அடித்து சிறைப்பிடித்து கொண்டு வந்து வைத்த இடம் என்று தொடக்கத்தில் சொன்னதை விட்டுவிட்டாயே!’ என்கிறீர்களா? இதோ வருகிறேன்.

காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் காடவன் ராஜராஜனை வென்று சிறைப்படுத்தி இந்தக் கோட்டை இருக்கும் பகுதியில் ஒரு குகையில்தான் அடைத்து வைத்தானாம். தஞ்சையில் பெருவுடையார் கோயில் கட்டிய அருண்மொழி என்பவன் முதலாம் ராஜராஜன். அதற்குப் பிறகு இரண்டு ராஜராஜன்கள் என மொத்தம் மூன்று ராஜராஜ சோழன்கள் உண்டு வரலாற்றில். இங்கு சிறை வைக்கப்பட்டவர் மூன்றாம் ராஜராஜன்.

இந்தக் கோட்டையை மொகலாயர்கள் ‘பாதுஷாபாத்’ என்றழைத்தனர். செஞ்சியர் கோன் காடவனின் கோட்டை என்பதால் செஞ்சிக் கோட்டை என்றனர். கோட்டையை சுற்றியுள்ள பகுதி செஞ்சி எனப்பட்டது.  ஆங்கிலேயர்கள் வாயில் அது ‘ஜிஞ்சீ’ ஆனது. இன்று வரை ஆங்கிலத்தில் அது ‘ஜிஞ்சீ’யாகவே உள்ளது. முந்தைய எடப்பாடி அரசில் இது போன்ற வரலாற்று சிறப்பு ஊர்களை தமிழ்ப்பெயரை அடிப்படையாகக் கொண்டு ஆங்கிலத்தில் எழுத சட்டம் ஒன்று கொண்டு வந்தார்கள், எதனாலோ அதை கிடப்பில் போட்டார்கள். கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன் மனு தாக்கல் செய்து ‘காவிரிப்பூம்பட்டினம்’ என்ற பெயரை மறுபடியும் வழக்கில் கொண்டு வந்ததைப் போல எவரேனும் முயற்சித்து செஞ்சியை காப்பற்றட்டும்.

இன்று மலர்ச்சி வகுப்பெடுக்க திருவண்ணாமலைக்கு போகையில் கோடை வெய்யிலில் ஒளிர்ந்த செஞ்சிக் கோட்டையைப் பார்த்து விட்டு வண்டியை நிறுத்தி இறங்கினோம்.  கோட்டையின் மதில் முன்னே நின்று அதன் கற்களையும் காரை வைத்துக் கட்டிய பாங்கையும் கவனிக்கிறேன்.

12 ஆம் நூற்றாண்டில் காடவ மன்னன் தொடங்கி இடையர், குறும்பர், விஜயநகர நாயக்கர்கள், மராட்டியர்கள், மொகலாயர்கள், ஆற்காடு நவாப், ராஜபுதனர்கள், ஐதர் அலி, பிரஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என பலரும் ஆண்ட வாழ்ந்த வந்து போன அந்த கோட்டையின் முன்னே இன்று நான் நிற்கிறேன்.

வந்து போனவர்கள் எல்லாம் மண்ணிலும் காற்றிலும் கரைந்துவிட, அத்தனைப் பேரையும் பார்த்த கோட்டை மட்டும் இன்றும் நிற்கிறது நிஜமாக… செஞ்சிக் கோட்டை!

– பரமன் பச்சைமுத்து
செஞ்சிக் கோட்டை
08.05.2023

#Gingee #GingeeFort #RajaDesingu #kadavarKing #Kadavar #HyderAli #ArcotNawab #RaniMangamma #Ranipet #BritishIndia #Rajarajachozhan #ParamanTouring #Paraman #Thiruvannamalai

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *