என் அம்மா பிறந்த போது அதை குறிப்பெடுத்து வைக்க எவரும் இல்லையோ, குறிப்பெடுத்தவர் பிறகு இல்லையோ தெரியவில்லை. என் அம்மாவின் பிறந்த நாள் எவருக்கும் தெரியாது.
‘ஆடி மாசம் பொறந்தான் சிவா! பத்துமாசம் சின்னவன் சரவணன்!’ என்பதே பொதுவான பிறந்த கணக்கு வழக்கு முறை கொண்ட அக்காலமதில், பிறந்த நாள் ஆங்கிலத்தேதி பற்றியே சிந்தனைகளே இல்லை.
பிறந்த நாள் என்ற ஒன்றை கொண்டாட வேண்டும் என்பது பற்றி பிரஞ்ஞை எங்கள் எவருக்கும் இல்லை. ஏன், மணக்குடியில் எவரும் அது பற்றி அப்போதெல்லாம் எண்ணியதாகவே என் நினைவில் இல்லை. ஏழாம் வகுப்பு வந்த போது சீருடையணியாமல் வெளிர் மஞ்சள் எலுமிச்சை வண்ண சட்டையும் கழுத்தில் தங்கச்சங்கிலியும் அணிந்து வந்த சரவணன் (அவன் அப்பா புவனகிரி பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு மாற்றலாகி வந்த இஞ்சினியர். அவன் 7 ஆம் வகுப்பில் லேட் அட்மிஷன்) வித்தியாசமாக தெரிந்தான். ஏன் சீருடை இல்லை என்ற போது, ‘என் பர்த்டே இன்னைக்கு!’ என்றான். அதுதான் பிறந்தநாள் பற்றிய முதல் உணர்வு என் வாழ்வில். குடும்பம் புதிய மருமகள்கள், குழந்தைகள் என விரிய விரிய பிறந்த நாள் கொண்டாடி மகிழ்வது தொடங்கியது. பிறந்த ஆங்கிலத்தேதி முக்கியம் பெற்றுவிட்டது இப்போதைய வாழ்க்கை முறையில். வங்கிக் கணக்கு முதற்கொண்டு எதற்கும் பிறந்த தேதியே முக்கியமானதாக ஆகிவிட்டது.
என் தந்தை ஆங்கிலத் தேதியில் பிறந்த நாள் கொண்டாடியதே இல்லை. ‘சுபானு வருஷம் பிறந்தேன்!’ என்பார். வளர்ச்சி இதழுக்கு வாசகர் கடிதம் கூட ‘சுபாணு, கீழமணக்குடி’ என்றே எழுதுவார். சான்றிதழ்களில் பார்த்து குறித்து வைத்துக் கொண்டேன் மே 23 அவரது பிறந்த தேதி என்பதை.
அப்பா விண்ணுலகம் சேர்ந்து, அம்மாவுக்கு ஆதார் அட்டையில் திருத்தம் வந்த போது, அம்மாவின் மருத்துவ காப்பீடு புதுப்பித்த போது, பிறந்த நாள் தெரியாத அம்மாவிற்காக ஒரு வேலை செய்தோம். ஏதோவொரு தேதியை தருவதற்குப் பதிலாக, அப்பாவின் பிறந்த தேதியையே கொடுப்போம், எவருக்கு வாய்க்கும் இது என்று மாற்றம் செய்தோம்!
இன்று மே 23!
என் அப்பாவின் பிறந்த நாள்!
என் அம்மாவின் பிறந்த நாளும் கூட!
– பரமன் பச்சைமுத்து
23.05.2023