மெத்த வூடு – சாரதா அம்மா

இன்று காலை சாரதா அம்மாவை பார்க்க போயிருந்தேன். அவர்களைப் பார்த்து நலம் விசாரிக்க எதேச்சையாக அக்கா உமாவும் கூட வர, உமா – சிவா – சாரதா அம்மா என்ற கோர்வையால் பல பழைய நினைவுகள் பீறிட்டு வந்தன.

….

‘மெத்த வூடு’ என்றால் என்ன தோன்றும் உங்களுக்கு?

மணக்குடியில் இருந்தவர்களுக்கு காய்ச்சார் மேட்டின் பாலதண்டாயுதம் சித்தப்பா வீடும் ( என் வழக்கில் சரவணன் வீடு!), புவனகிரியில் மானம்பாத்தான் வாய்க்காலை ஒட்டி தொடங்கி வடக்குவெளி உடையார் வீட்டு களத்தில் முடியும் ‘அக்ரகாரம்’ ‘பிள்ளையார் கோவில் தெரு’ என வேறு வேறு பெயர்களில் ஊரின் முதுகெலும்பாய் ஓடும் பிரதான தெருவில் இருந்த ‘மெத்தய்யர்’ வீடும் நினைவுக்கு வரும்.  ‘முருகன் நிலையம்’ என எழுதப்பட்டிருக்கும் வீடு பாலதண்டாயுதம் சித்தப்பாவின் ‘மெத்த வூடு’

கஸ்டம்ஸ் வேலையை விவசாயம் குடும்பத்திற்காக விட்டுவிட்டு வந்த செயின் ஸ்மோக்கரான பாலதண்டாயுதம் சித்தப்பா, சிவபிரகாசம் சித்தப்பா, கடலூர் ஐடிஐயில் படித்த சடாட்சரம் சித்தப்பா, பூம்புகார் கல்லூரியில் பியூசி படித்த பஞ்சாட்டசரம் சித்தப்பா, சித்தப்பாக்கள் எந்நேரமும் ஆடும் கேரம் போர்டு என எல்லா நினைவுகளையும் தாண்டி மூன்று நினைவுகள் சடுமென்று மேல் வந்து நிற்கும்.

மூன்றாவது நினைவை முதலில் சொல்லி விடுகிறேன்.
மணக்குடியின் முதல் டேப்ரெக்கார்டர், டிவி எங்கள் வீட்டில் என்பதைப் போல மணக்குடியின் முதல் மின் விசிறி மெத்தை வீட்டினுடையது. மின் விசிறி் என்றவொன்றை அங்கு எவரும் நினைத்திராத விசிறி மட்டைகளை வைத்துக்கொண்டு காற்றாட வெளியில் உட்கார்ந்திருந்த காலத்தில் வெள்ளை வண்ணத்தில் காற்றை வாரியிறைக்கும் மின் விசிறியை வாங்கிப் பொறுத்தியிருந்த வீடு மெத்த வீடு. மெத்த வீடு என்றால் மின் விசிறி நினைவில் வந்து நிற்கும் எனக்கு.

(‘அந்த கரண்டு காத்து எனக்கு ஒத்துக்கறது இல்லப்பா!’ என்று அடித்து விட்டு எதிர்த்த பெருசுகளும் உண்டு. பெயர் சொல்ல விரும்பவில்லை.  சரவணனோடும், சிறுமி ராணியோடும் ராசி பண்ணிக் கொண்டு அந்த மின்விசிறியை ஓட விட்டு நிறுத்தி ஓட விட்டு நிறுத்தி பார்க்கும் வேலையை சிரத்தையோடு செய்திருக்கிறேன்)

‘காலிங் பெல்’ என்றவொன்றை என் வாழ்வில் முதன்முதலில் பார்த்ததே மெத்த வீட்டில்தான். வடக்குப் பார்த்த வீட்டின் பச்சை வண்ண அருகால் படி மரசட்டத்தின் மேற்புரத்தில் ஓர் ஓரமாக இருக்கும் அந்த ஸ்விட்ச்சை அமுக்கினால் ‘க்ர்ர்ரிங்க்!’ என்று கோவில் மணியை விட சத்தமாக ஒலிக்கும் காலிங் பெல். மூத்த வீடு என்பதும் இரண்டாவதாக நினைவில் நிற்பது காலிங்பெல்.

சாரதா அம்மா! மெத்த வீட்டின் முதல் நினைவு. சிறுவன் சரவணனுக்கு சிலேட்டில் எழுத பல்பம் தரும்போதெல்லாம்  முழுநீள பல்பத்தை எடுத்து எனக்கும் தந்து பரவசப் படுத்தியவர்.  ஐயப்பன் கோவிலுக்கு போயிட்டு வந்து யாரோ தந்த பஞ்சாமிர்தம் (பாலதண்டாயுதம் சித்தப்பா பஞ்சாமிர்தத்திற்காகவே ஆண்டுக்கு மூன்று முறை பழனி செல்வேன் என்று பொதுவெளியிலேயே சொல்வார். ஒரு டின் பஞ்சாமிர்தத்தை முழுதாக குடித்து விட்டு ‘காலை உணவு ஆச்சு!’ என்று அதிசயப்படுத்துவார்), மிக்சர், முந்திரிப் பழம், ‘கொமட்டிகொல்லையாங்க’ பெண்மணியிடம் வாங்கிய ஒட்டு மாம்பழம் என எப்போது போனாலும் எதையாவது தின்பதற்கு தந்து கொண்டே இருந்தவர்.

அப்போதெல்லாம் யார் வீட்டில் தெவஷமென்றாலும் மற்ற எல்லாருக்கும் மதிய உணவு அந்த வீட்டில்தான். சிறுவர்கள் வடை பாயாசத்திற்காக வயிறு முழுக்க ஏக்கத்தோடு ஓடுவோம். ‘சிவாவுக்கு பச்சைபயிறு பாயாசம் புடிக்கும் இன்னொரு கரண்டி போடு!’ என்று நினைவில் வைத்துக் கொண்டு கவனித்த இரண்டு பேரில் இரண்டாமவர் சாரதா அம்மா. முதலாமவர் செல்வாம்பாள் பழமலை.

இந்தியர்களின் நிறம் என்பது வெறும் கருப்பு, சிவப்பு இல்லை. இந்தியர்களுக்கு ஐந்து நிறமுண்டு. சிலர் சிவப்பு, சிலர் மஞ்சள், சிலர் வெள்ளை. சாரதா அம்மா வெள்ளை. அதற்கு மேலே பாண்ட்ஸ்ஸோ குட்டிகுரா பவுடரோ பூசிக்கொண்டு இன்னும் வெள்ளையாக இருப்பார்கள். சாரதா அம்மாவின் நிறத்தை சரவணனின் பெற்றிருந்தான்.

சிறுவர்கள் யாராக இருந்தாலும் வாஞ்சையோடு தொட்டோ கன்னத்தை அழுத்தியோதான் பேசுவார்கள்.

இன்று காலை சாரதா அம்மாவை பார்க்க போயிருந்தேன். சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து திரும்பியவரை இப்போதுதான் பார்க்கப் போனேன்.

முதுகு வளைந்து கூன் விழுந்து விட்டது. உறுதியாக நடந்து வருகிறார்.

‘வாப்பா! எப்ப வந்த?’
(‘வா ஆயி!’ என்றழைப்பது ‘வெப்ப’ என்று மாறியிருக்கிறது)

‘எப்படிம்மா இருக்கே?’

‘நல்லா இருக்கம்பா! நல்லா சாப்படத்தான் முடியல!’

‘அந்த மெஷினை எங்க வச்சி தச்சிருக்காங்க?’ (பேஸ் மேக்கர்?)

‘தோ…’ இடப்புறத் தோளுக்கு கீழே சேலையை கொஞ்சம் விலக்கி ஓட்டை போட்ட தழும்பை காட்டுகிறார்.

உள்ளே இதயத்துடிப்பை சீராக ஓட வைக்கும் ஓர் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

நுழைவாயிலருகில் படியில் அமர்ந்திருக்கும் காவ்யாவிடம் திரும்பி சொல்கிறேன்,
‘மணக்குடியின் முதல் எந்திரன்(ள்!) இவங்கதான்!’   சிரித்துக் கொண்டோம்.

மெத்தை வீடு இன்று இல்லை. அதன் நினைவுகளோடு, உமா அக்கா, பரி, துருவனோடு காய்ச்சார் மேட்டிலிருந்து காளிமுத்து மாமா வீட்டைக் கடக்கிறேன்.

பேஸ் மேக்கரோடு பேரன் பேத்திகளோடு சாரதா அம்மா நூறாண்டுகள் வாழட்டும்.

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
மணக்குடி,
27.05.2023

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *