‘நானும் ரௌடிதான்’ : திரை விமர்சனம்

naanum rowdythaan2

naanum rowdythaan

தாயைக் கொன்ற ரவுடியை வஞ்சம் தீர்த்து அழிக்கத் துடிக்கும் போலீஸ் அதிகாரியின் மகளும், போலீஸ் அதிகாரியின் ரவுடியாய் இருக்கும் (நடிக்கும்) மகனும் சேர்ந்தால்… என்னவாகும்? காதல், நிறைய காஸ்ட்யூம், மலேசியாவில் பாட்டு, படம் முழுக்க ரத்தம் வெட்டு குத்து? அதுதான் இல்லை.  அழகான நகைச்சுவை திரைக்கதை செய்து, தேர்ந்த நடிப்பை கலந்து ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள்.

‘காமெடிப் போலீசு’ போல ‘காமெடி ரௌடி’

‘வசனமா, நயன்தாராவா, விஜய் சேதுபதியா – யார் இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ?’ என்று தீபாவளிப் பட்டிமன்றமே நடத்தலாம். அப்படி ஒரு பங்களிப்பு.

‘நூறு மீட்டர் எவ்ளோ நேரத்தில ஓடிருக்கான் – அவ்ளோ செகண்ட்ஸ் போடாதீங்க  ரெண்டு மூணு போட்டுக்கங்க – அம்மா, உசேன் போல்ட்டே நைன் செகன்ட்லதான் ஓடனாருமா – அப்படியா… அப்ப… சேரி…அதயே போட்டுக்கோங்க!’

‘பொண்ண தூக்கி வண்டி மேல போடு, வண்டிய அவன் மேல விடு – அட்டு ஃபிகரு – அப்ப வண்டிய அவ மேலயும் விடு’

‘தெறிக்க விடலாமா…!’ ‘ஆர் யூ ஓகே… பேபி’ ‘ஆல் படி கெல் அவுட்’  ‘மேடம் அது உங்க கொத்த மல்லிக் கொழுந்து’

‘டாய்… ரெட்  டி-சர்ட் – நான் என்ன வேணாம் செய்யறேன் – அந்தப் பொண்ண கொஞ்சம் நிறுத்த சொல்லுப்பா – அம்மா, மறுபடியும், நீ மொதல்லேருந்து ஆரம்பிச்சிடாதம்மா!’

‘டேய்… ஏற்கனவே, கீழ நெறயா பிரச்சனை. உங்க ரெண்டு பேரையும்  மன்னிச்சு விட்றேன். ஓடிப் போங்கடா…’

‘சார்… கொஞ்சம் நல்லா காட்டுங்க சார். நிச்சயமா நல்லா குத்துவா சார்’

இப்படி,  படம் முழுக்க பட்டையைக் கிளப்புகிறது வசனம்.

புதுச்சேரி தெருக்கள், கடற்கரை, மரக்காணம் உப்பளம், முதலியார்குப்பம் ஏரி, கிழக்குக் கடற்கரை சாலை என நாம் பார்த்த விஷயங்களையே அழகாகக் காட்டியிருப்பவர்கள், அழகாயிருக்கும் நயன்தாராவை விடுவார்களா? நயனைப் பிடிக்காதவர்களுக்கும் இனி பிடிக்கும் என்பது மாதிரி காட்டியிருக்கிறார்கள்.
நயன்தாராவின் கண்ணும் மூக்கும் இயக்குநருக்கு ரொம்பப் பிடிக்கும் போல, அதையே அடிக்கடி காட்டுகிறார்.

வேறு வேறு காஸ்ட்யூம்கள், ஆட்டம் பாட்டம், குத்து எல்லாம் வேண்டாம். தேர்ந்த நடிப்பிருந்தால் போதும் இருக்கும் காஸ்ட்யூம்லயே வெளுத்து கட்டலாம் என காட்டியிருக்கிறார்கள் நயன்தாரா, விஜய் சேதுபதி, ஏனைய  பிறர்.

விஜய் சேதுபதியின் ஒவ்வொரு அசைவும்  ‘இது தனுஷுக்கு செய்த ஸ்கிரிப்டோ!’ என யோசிக்க வைக்கிறது.  விஜய் சேதுபதி மிகச் சரியான தேர்வு.  ஆர். ஜே பாலாஜி, பார்த்திபன்,  முட்டை அடிக்கும் தாத்தா, மன்சூர் அலிகான் என எல்லாப் பாத்திரங்களும் நிறைவாக இருக்கும் திரைக்கதை.

தனுஷ் தயாரிப்பென்றால் அனிருத் அதிகம் மெனக்கடுவாரோ என்றென்னும் வகையில் பாடல்கள். ‘தங்கமே!’ அக்மார்க் அனிருத் பாடல். ‘நீயும் நானும் சேர்ந்தா’ ரஹ்மானோ என நினைக்க வைக்கும் வகை (படமாக்கிய விதம் ஆல்பம் போல் அருமையாய்). ‘கண்ணான கண்ணே…’ புது வகை. காதலர்கள் கவனம் ஈர்க்கும் வரிகள்.

ஆரம்பக் காட்சிகளில் ‘ரௌடிதான் பெருசு’ என்று வருவதை சமன் செய்ய கடைசியில் சேர்த்த ‘போலீஸ்தான் பெரிசு’ ஒட்டவில்லை. யாரும் பிரச்சினை கிளப்பிவிடக் கூடாது என்பதற்காகவே சேர்த்தது போல் இருக்கிறது.

இரண்டாம் பகுதி நீண்டு போவதைப் போல் இருக்கிறது. வெட்டிக் குறைத்திருக்கலாம்.

அந்த இரண்டு இட வல்கர் வசனம் தவிர்க்கப் பட்டிருக்கலாம்

வி டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘நானும் ரௌடிதான்’ – ‘காமெடி ரௌடி’.  பாருங்கள். பிடிக்கும்.

திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *