‘சென்னை மீளும்!’

அடுக்ககக் குடியிருப்புக்கு வெளியே ஆறுபோல் சுழித்து ஓடும் நீர். ‘ஐயய்யோ தண்ணி, ஆட்சியாளர்கள் அக்ரமம், ஆக்ரமிப்பால் அவதி’ என்று அலறலாம் அல்லது நீரில் நடந்து வெளியே யாருக்கேனும் உதவமுடியுமா என்று பார்க்கலாம்.

இரண்டாவதை தேர்ந்தெடுத்து முழங்காலளவு நீரில் இறங்கிப் போகிறேன்.
போகப் போக இடுப்பளவு ஆழம், போகமுடியாது என்று போலீஸ் ஒருவர் தடுக்க வேறு புறம் செல்கிறேன்.

மலர் ஹாஸ்பிட்டல் பாலத்தினடியில் நுரைத்து சுழித்து விரையும் வெள்ளம், ஆற்றை ஒட்டிய தெருவிற்குள்ளும் புகுந்து விட்டது. எது நடந்தாலும் எதிர்கொள்ளவும் உதவவும் ஆம்புலன்ஸ் மற்றும் வண்டிகளோடு வரிசையாய் காவலர்கள்.

தொடர்ந்து நடக்கிறேன்.

எதனாலோ என்னை நோக்கி வருகிறார் வெளுத்த மீசை கொண்ட செக்யூரிட்டி ஒருவர்.

‘காலைலேருந்து போட்டுப் போட்டு பாக்கறங்க! கெடைக்கல. புள்ள எங்கிருக்கான்னு தெரியல!
இடுப்பளவு தண்ணியாம் அங்க. அப்பவே மொட்ட மாடில இருந்தாங்கலாம்…’ கண் கலங்குகிறார்.

‘எந்த ஏரியா!’
‘கிண்டி ஜிஎஸ்டி’
‘கவலப் படாதீங்க. அங்கதான் நிறைய போட் சர்வீஸ், ஹெலிகாஃப்டர் எல்லாம் இருக்கு.’

கண்களைத் துடைத்துக் கொள்கிறார்.

‘பையன எங்கயாவது கொண்டு போயி சேத்துருப்பாங்க. அவன் ஃபோன் சார்ஜ் தீர்ந்திருக்கும். கரண்ட் இல்ல எங்கயும். வேற ஃபோன்லேருந்து பேச நம்பர் ஞாபகம் இருக்காது. கரண்ட் வந்து சார்ஜ் பண்ணதும் உங்களுக்கு கூப்புடுவாம் பாருங்க!’
வாயெல்லாம் சிரிப்பு அவருக்கு.

தொடர்ந்து போகிறேன். நண்பர் ஏஆர்கே வீட்டில் செல்லிடப் பேசியை சார்ஜ் செய்யலாம் என்று போகிறேன்.

நாராயணி அம்மாள் திருமண மண்டபத்தில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், பத்தாயிரம் உணவுப் பொட்டலங்களை தயாரிக்க முற்படுகிறது. பாதிக்கப் பட்ட மக்களுக்குத் தர உணவு தயாரித்தாகி விட்டது. தேவை இருக்கிறதென்று தகவலும் வந்தாகிவிட்டது. பத்தாயிரம் பொட்டலங்களாக கட்டித்தரத்தான் ஆட்கள் இல்லை. முகநூலில் வந்ததைப் பார்த்து விட்டு மந்தாரை இலை வாங்கிக் கொண்டு பிரசாந்த்தும், சுதர்சனும் போனார்களாம் பொட்டலம் கட்ட.

மூன்று நாளாய் மின்சாரம் இல்லை, மெழுகு வத்தி வாங்கப் போகும் போது ‘இன்னும் கொஞ்சம் சேர்த்து வாங்கி, சிலருக்குத் தருவோமே!’ என்ற எண்ணம் வர சேர்த்து வாங்கினேன்.

நீரில் இறங்கி திரும்ப வருகிறேன். நிறுத்தத்தில் மட்டுமே நிற்கும் 29c மாநகரப் பேருந்து நிறுத்தமில்லா இடத்தில் நீரில் நடப்பவரிடம் நிற்கிறது. ‘ஏறிக்கங்க, அந்தப் பக்கம் விடறேன்’ என்கிறார் ஓட்டுநர்.

‘சென்னை மூழ்கிவிட்டதாமே, மோடி வந்திருக்கிறாராமே, நீங்க பத்திரமா?’ என்று பல ஊர்களிலிருந்து வந்த பாச அழைப்பு விசாரிப்புகளை கடந்து நடந்து திரும்புகிறேன்.

மின்சாரம் இல்லா எனது பகுதியில், சில கதவுகளை தட்டி கையிலிருக்கும் மெழுகு வத்திகளைத் தருகிறேன். மீதமிருக்கும் ஒன்றை என் இருள் சூழ் அபார்ட்மெண்ட்டின் படியொன்றில் ஏற்றுகிறேன்.

எல்லோரும் ஏதேதோ உதவிகள் செய்ய, நாம் ஒன்றும் உருப்படியாக செய்யவில்லையே என்ற எண்ணத்துடனேயே படிகளில் நடக்கிறேன்.

மூன்று நாட்களாய் மின்சாரம், பால், செய்தித்தாள், தொலைக்காட்சி இல்லை.
மோடி வந்தது உட்பட எதுவுமே தெரியவில்லை.

வேறொன்று தெரிகிறது.
‘மூழ்கியது சென்னை. அமிழ்ந்தது அமிஞ்சிக்கரை. அடுத்த நான்கு நாட்களில் இன்னும் அதிக மழை’ என்று ஊருக்கே பீதி கிளப்பி தொலைக்காட்சிகள் காட்டும் அதே சென்னையில் –
மக்கள் பசியாற்ற பத்தாயிரம் பொட்டலங்கள் தயாரிக்கும் சிலர், மந்தாரை இலை வாங்கிப் போய் கட்டி உதவும் பிரசாந்த் மற்றும் சுதர்சன், மாநகரப் பேருந்தை நிறுத்தி நீரில் தவிப்பவருக்கு உதவ முற்படும் ஓட்டுநர் என இவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் எந்த தொலைக்காட்சியிலும் வருவதில்லை. இவர்களுக்கு அது ஒரு பொருட்டுமில்லை.

இப்படி சிலராலேயே மீண்டு கொண்டிருக்கிறது,சென்னை! மீண்டு எழும் சென்னை!

பரமன் பச்சைமுத்து
03.12.2015
11.32 pm
சென்னை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *