புவனகிரி நினைவுகள்

புவனகிரி நினைவுகள்:

நெடுஞ்சாலைப் பயணத்தில் இருக்கிறேன். பண்பலையில் ‘ஏய்ய்ய்…. உன்னைத்தானே!’ பாடல் ஒலிபரப்பாகிறது. எஸ்பிபியை வித்தியாசமாக வெளிப்பட வைத்த இளையராஜாவின் சூப்பர் இசைப் பாடல்.

புவனகிரி பள்ளி, பத்தாம் வகுப்பு, ஏகே சீனிவாசன், கோவிந்தராஜூலு சன்ஸ் ஜோ, போலீஸ்காரர் மகன் பரமகுரு, பாலு, இலைக்கடை சங்கர், மணக்குடி பாலசரவணன், பாளையக்காரத் தெரு செந்தில், அவல்பட்டறை சோலையப்பன் என இந்தப் படம் வெளியான போதைய காலம், நண்பர்கள் என எல்லாமும் நினைவில் வருகிறது.

புவனகிரி ராமலிங்க சுவாமி மடத்திற்கு எதிர்ப்புறத்தில் முன்பக்கம் வெளியே பெட்டிக்கடையும் உள்ளே வசிப்பதற்கான வீடும் என்ற அமைப்பில் இருந்தது ஏகே சீனிவாசன் வீடு. அவனது அப்பா நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றியதாக நினைவு.

சிதம்பரத்தில் ‘காதல் பரிசு’ பார்த்து விட்டு வந்து ஏ.கே. ஸ்ரீனிவாசன்தான் அவனால் முடிந்த வரை துண்டு துண்டாக காட்சிகளை சொல்வான். டிசம்பர் மாதத்தில் புவனகிரி கடைத்தெருவின் சில கடைகள் திடீரென வடிவத்தை மாற்றிக் கொண்டு பொங்கல் வாழ்த்து அட்டைகள் விற்கும் கடைகளாக மாறிவிடும். எம்ஜியார், கலைஞர், சிவாஜி, ரஜினி, கமல், டி ராஜேந்தர், பாக்யராஜ், சத்யராஜ், அம்பிகா, ராதா, மாதவி, நதியா, ஸ்ரீதேவி என நட்சத்திரங்களின் மிளிரும் வண்ணப்படங்கள் அச்சிடப்பட்ட வாழ்த்து அட்டைகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அவற்றைப் பார்ப்பதற்காகவே ‘ஒன் வே ட்ராஃபிக்’ எனப்படும் மாற்று வழியில் செல்லாமல் கடைத்தெரு வழியாகவே வருவோம்.

‘பரமா, அதோ பாரு, அந்த வலை மாதிரி பனியன் (டி.ஷர்ட்) போட்டுட்டுருக்கற அந்த கமல் படம் காதல்பரிசுதான்!’ என்று ஏகே ஸ்ரீனிவாசன் எனக்கு காட்டி ஞானவெளிச்சம் பாய்ச்சியது உண்டு.

புவனகிரியில் ஒரு ரூபாய்க்கு காஃபியோடு ஒரு புதுப்படமும் காட்டிய ‘ஆபிதா வீடியோ விஷன்’ லைசென்ஸ் பிரச்ணினையால் மூடப்பட்டதாலும், இப்போது போல சிதம்பரத்தில் ரிலீஸாகும் புதுப்படங்கள் ரெங்கராஜா திரையரங்கம், விஆர்கே டாக்கீஸில் அப்போதெல்லாம் ரிலீஸாகாது என்பதாலும், எனக்கு ‘காதல் பரிசு’ படம் பார்க்கும் வாய்ப்பு வாய்க்கவே இல்லை.

புவனகிரி என்றால் இரண்டு முக்கிய ஸ்வீட் ஸ்டால்கள், சில மாவு அரவை நிலையங்கள், ஒரு இமாம் பாஷா நியூஸ் ஏஜெண்ட், ஒரு ஆசியா சைக்கிள் மார்ட், ஒரு சின்னையன் சைக்கிள் சர்வீஸ் கடை போல ஒரு பாடல் பதிவகம் இருந்தது. ‘சக்தி மியூசிக்கல்ஸ்’!? டிடிகே 60 அல்லது 90 கேசட்டில் வேண்டியதை வேண்டிய படி பதிவு செய்து தந்து விடுவார்கள். அங்குதான் ‘காதல் பரிசு’ படத்தின் பாடல்கள் ஒரு பக்கம் ‘அன்புள்ள அப்பா’ ‘சின்னத்தம்பி பெரிய தம்பி’ ‘வேலைக்காரன்’ என படங்கள் கலந்து ஒருபக்கம் என பதிவு செய்து வாங்கி வந்தேன்.

36 ஆண்டுகள் ஓடி விட்டன. என் மகள்களே முதுகலை முடித்து பணியில் சேர்ந்து விட்டனர்.
கேசட்டுகள் இப்போது இல்லை, அந்த புவனகிரி மியூசிக்கல்ஸ் இப்போது இல்லை, பொங்கல் வாழ்த்து கடைகள் புவனகிரியில் இல்லை. கமலஹாசன் தற்போது ‘கமல்ஹாசன்’ என்ற பெயரில் எச் வினோத்தோடு இணைந்து அடுத்த படத்தை தொடங்குகிறார். இளையராஜா இன்னும் ‘வழி நெடுக காட்டு மல்லி பூத்திருக்கு…’ என்று கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

கோவிந்தராஜூலு செட்டியார் சன்ஸ் ஜோ, மணி ஜூவல்லர்ஸ் ஜெகன் ஆக மாறி, இப்போது ‘செண்பகா ஜூவல்லர்ஸ் ஜெகன்’ ஆக மாறியாயிற்று. பாலு, அடையார் ஆனந்த பவன் கேட்டரிங்கின் தலைமை நிர்வாகியாக சென்னையில். சங்கர் புவனகிரியிலேயே தொழிலதிபராக, பால சரவணன் டிஷ் ஆண்டெனா சேவை செய்து தரும் தொழில் முனைவோனாக.

ஏகே சீனிவாசன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வேலை பார்ப்பதாக தகவல். நான் அரக்கோணத்தில் என் மலர்ச்சி மாணவர் ஒருவரின் புதிய கடையொன்றை திறந்து வைப்பதற்காக போய்க் கொண்டிருக்கிறேன்.

இன்னும் நான் ‘காதல் பரிசு’ படம் பார்க்கவில்லை.

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை
    09.07.2023

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *