‘போர்த் தொழில்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

wp-1688555464473.jpg

புலன் விசாரணை பற்றி புத்தகங்களில் மேய்ந்த ஏட்டுச்சுறைக்காய் சிறுசும், ரத்தமும் சதையாக துண்டு துண்டாய் வெட்டி மசாலா தூவி கறி சமைத்து சமைத்து கைகள் காய்ப்பு காய்த்த கதையாக அனுபவம் கொண்ட பெருசும் விருப்பம் இன்றி இணைந்து ‘சைக்கோபாத்’  தொடர்கொலைகளில் துப்பு துலக்க போகிறார்கள். கயிறு பிடித்து கண்டறிந்தார்களா, கண்டறிந்தார்களா என்பதை சிறப்பான படமாக தந்தால் அது ‘போர்த்தொழில்’

சுஜாதா கதைகளின் கணேஷ் – வசந்த் லேசாய் நினைவூட்டுவதைப் போல இருந்தாலும், சரத்குமார் – அசோக் செல்வன் பாத்திரங்கள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

அனுபவங்களால் விறைப்பு ஏறிய அதிகாரியாக சரத்குமார் சிறப்பு. இது போன்ற பாத்திரங்களை இவருக்குத் தரலாம் என திரை உலகம் இனி சிந்திக்கும்.

பின் கட்டுக் கழிப்பறைக்கு இரவில் செல்ல பயப்படும் முதல் காட்சித் தொடங்கி சரத்குமாரை அமரவைத்துக் கொண்டு காரை ஓட்டும் கடைசிக் காட்சி வரை தன்னை சிறப்பாக தந்துள்ளார் அசோக் செல்வன். ‘எனக்கு ஸ்டார்டிங் ட்ரபுள்’ என்று இடறும் காட்சிகளில் ‘கலீர்’. இயக்குநரின் நடிகராக மிளிர்கிறார் அசோக் செல்வன்.

சமீபத்தில் மறைந்த சரத்பாபுதான் வில்லன் என்று தெரிய வரும் போது இன்ப அதிர்ச்சி. அதற்கப்புறம் அவிழும் முடிச்சு இன்னும் சிறப்பு.  நிகிலாவும் வேண்டியதை செய்திருக்கிறார்.

‘சிறந்த பெற்றோர்கள், சிறந்த குழந்தைகளை உருவாக்குகிறார்கள். சிறந்த குழந்தைகளால் சிறந்த சமூகம் அமைகிறது’ என்று மலர்ச்சி வாழ்வியல் பயிற்சியில் சொல்லப்படும் கருத்தையே படத்தின் கருத்தாக வைத்து திரைக்கதை பின்னியிருக்கிறார் இயக்குநர்.

முதல் பாதி விறுவிறு. இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாகி பிறகு ஓட்டமெடுக்கிறது.

எல்லாரையும் கொல்லும் அவனுக்கு இதற்கெல்லாம் காரணமான அப்பாவை கொல்ல முடியாதா? அவரை வேலைப்பளுவில் இழுத்து விட வேறு வழியே இல்லையா? காவல்துறையில் அத்தனை அனுபவம் கொண்ட நிகிலா, அப்படி சாதாரணமாக ஏமாறுவாரா? என்பது போன்ற பலவீனங்களைத் தாண்டி படம் நம்மை இழுத்துவிடுகிறது என்பது சிறப்பு.

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘போர்த் தொழில்’ – நல்ல ‘த்ரில்லர்’. பார்க்கலாம்.

– திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *