(தென் துருவ)சந்திரனைத் தொட்டது யார், நாம்தானே, அடி நாம்தானே!

சந்திரனில் 1 நாள் பொழுது என்பது பூமியின் பொழுதில் எத்தனை நேரம் என்று கேள்விப்பட்டீர்களா? (விடை – கடைசியில்)

இருட்டும் உறைய வைக்கும் அதீத மைனஸ் 200 டிகிரி குளிரும் கொண்ட இதுவரை யாருமே நுழையாத நிலவின் தென் துருவத்திற்குள் இறங்கி ஆராய்ச்சி செய்ய இருக்கிறது நம் சந்திரயான் – 3.  தற்போது வானவெளியில் பயணித்துக் கொண்டிருக்கும் சந்திரயான் 3, ஆகஸ்ட் 23 அன்று சந்திரனில் இறங்குமாம்.

சில பையன்கள் டூ வீலரில் அதி வேகமாகச் சென்று கட்டுப்பாட்டை இழந்து விழுந்து சறுக்கிக் கொண்டே போய் மோதி சேதம் அடைவதைப் போல, ராக்கெட்டிலிருந்து பிரிந்து சந்திரனின் தரையை அடையும் போது மிக வேகமாக இறங்கி மோதி உடைந்து தெறித்துப் போனது 2019ல் நாம் செலுத்திய சந்திரயான் – 2.  சந்திரயான் – 2ல் விட்டதை சந்திரயான் – 3ல் சேர்த்துப் பிடித்துவிட உழைத்திருக்கிறது இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு.

‘இன்னும் ஈராண்டுகளில் நிலவில் மனிதனை இறக்குவோம்!’ என்ற திட்டத்தோடு செயல்பட்டு வரும் அமெரிக்காவிற்கு இந்தியாவின் சந்திரயான் 3 நிறைய தகவல்கள் தந்து உதவி செய்யுமாம்.

அப்துல் கலாமின் சுயசரிதை வழியாகவும், நம்பி நாராயணன் திரைப்படம் வழியாகவும் அறிந்து கொண்ட விக்ரம் சாராபாய் மீதும், அவர் வழியில் தொடர்ந்து தங்களைத் தந்து உழைக்கும்,   சந்திரயான் செலுத்துவதற்கு முன்பு நேற்று ஆந்திர சூலூர்பேட்டையிலுள்ள அம்மன் கோவிலுக்குப் போய் பிரார்த்தித்து வந்த தற்போதைய திட்ட விஞ்ஞானி உட்பட, இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள் மீதும் பெரும் மரியாதை எழுகிறது என்னுள்ளே.

வாழ்க பாரதம்!

(கேள்விக்கான விடை : 14 புவி நாட்கள்)

– பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *