வரலாற்று சுற்றுலா!

இருபதாண்டுகளுக்கு முன்பு வெளிநாடு ப்ராஜெக்டுகள் முடித்து திரும்பிய ராமு பெருமாள், முகுந்தன், நான் ஆகிய மூவரும், ‘பொன்னியின் செல்வன்’ படித்து விட்டு பெங்களூரிலிருந்து காரை எடுத்துக் கொண்டு ‘பொன்னியின் செல்வன் ட்ரிப்’ கிளம்பினோம். கோடியக்கரை குழகர் கோவிலையும், மந்தாகினி ஏறிய கலங்கரை விளக்கத்தையும் சோழ இளவரசர்கள் பயணித்த கடலையும் கண்டு வியந்தோம். ஒரு படகில் ஏறி கடலினுள்ளே பயணிக்கலாம் என புறப்படுகையில் ‘விடுதலைப் புலிகளுக்கு பொருள் கடத்துகிறவர்கள்!’ என்று நினைத்த சீருடைக் காவலர்களால் துரத்தப்பட்டோம்.

பொன்னியின் செல்வன் படமாக வருகிறது என்று அறிந்து அதற்கு முன் அதைப் படித்து விட வேண்டும் என்று இறங்கிய பலரும் பொன்னியின் செல்வன் சுற்றுலா சென்றார்கள். விகடன் கூட இப்படி சில ஏற்பாடுகளை சில முறை செய்தது.

நண்பர் சிலரோடு திருவாரூர் சென்ற போது, ‘அரிசிலாறு’ கடக்கையில் வந்தியத்தேவன், குந்தவை, வானதி என்று பெயர்கள் காட்சிகள் நினைவிலாடின. நாகப்பட்டினத்திற்குள் நுழைகையில் சூடாமணி விகாரம் தேடினேன், பழுவூர் நந்தினி மனதில் வந்து போனார்.

திருச்சி வழியே பயணித்த போது காவிரியை கண்டதும் ராமானுஜர் பற்றி படித்தவை நினைவில் வந்தன.

மலர்ச்சி பயிற்சி முகாம் ஒன்றிற்காக கொல்லிமலை சென்ற போது அங்கு வந்த யாருக்கும் அது வல்வில் ஓரி ஆண்ட இடம் என்பதோ, ஔவையார் வந்த இடம் என்பதோ தெரியவில்லை என்பதை அறிந்தேன்.

இப்படி தமிழகம் முழுக்க எத்தனை இடங்கள் வரலாற்றுப் புதையல்களாக பரவிக் கிடக்கின்றன. இவற்றை கொஞ்சம் கவனம் தந்து சுற்றுலா தலங்களாக, வரலாற்று தடங்களாக ஆக்கினால் என்ன!

கோவலனும் கண்ணகியும் வாழ்ந்த காவிரிப்பூம்பட்டினம், சுந்தர சோழன் வாழ்ந்த பழையாறை, ராஜராஜன் வாழ்ந்த தஞ்சை, இரண்டாம் ராஜராஜன் உருவாக்கிய தாராசுரம், அமைச்சர்கள் அதிகம் தந்த குடந்தை எனும் கும்பகோணம், பராந்தகன் பொன் வேய்ந்த தில்லை எனும் சிதம்பரம், அவன் மகன் ராஜாதித்யன் வெட்டிய வீராணம் ஏரி, சோழர்கள் இலங்கைக்குப் பயணிக்க பயன்படுத்திய கோடியக்கரை, காவிரி கடலில் கலக்கும் பூம்புகார் என இவை அனைத்தையும் இணைத்து ‘சோழர் தடம்’ என்பது போல ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்யலாம்.

சேர, பாண்டிய, நாயக்க, சேதுபதிகள், பல்லவர்கள், பாரி போன்ற கடையேழு வள்ளல்கள் வரலாற்றைக் கொண்டு சில வரலாற்றுத் தடங்கள் ஏற்படுத்தலாம்.

வைணவ ஆழ்வார்கள், சைவ நாயன்மார்கள் கொண்டு சமய வரலாற்றுத் தடங்களையும் செய்யலாம்.

மக்களிடம் வரலாறும் நிற்கும், மாநிலத்துக்கு வருமானமும் பெருகும்.

அரசுதான் கவனிக்க வேண்டும்.

– பரமன் பச்சைமுத்து
19.11.2023

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *