ஆகச் சிறந்த கலைஞனால் ஆனது எனக்கு…

images (2)

நெல்வயல்கள், வாய்க்கால், வீடுகள், ஓர் அரசுப்பள்ளி என்றிருந்த மணக்குடியில் என்றுமே திரையரங்குகள் இருந்ததில்லை. ஆறு கில
மீ் தூரத்தில் கிழக்கு நோக்கி பாயும் வெள்ளாறு. வெள்ளாற்றின் அந்தக் கரையில் இருக்கும் கீரப்பாளையத்தில் ‘வீஆர்கே டாக்கீஸ்’, வெள்ளாற்றின் இக்கரையில் இருக்கும் புவனகிரியில் ‘ரங்கராஜா திரையரங்கம்’ ஆகிய இரண்டுதான் சுற்று வட்டார ஊர்களுக்கே திரையரங்குகள்.

எம்ஜியார் அரசு விவி சாமிநாதன் பரிந்துரையில் ‘8’ ஆம் நம்பர் டவுன் பேருந்து விடுவதற்கு முன்பு, தினமும் ஆறும் ஆறும் பன்னிரெண்டு கிலோமீட்டர் ஒரு பெண்பிள்ளை நடந்தே பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என்பதற்காக புவனகிரியில் வெள்ளாயா வீட்டில் உமா அக்காவை தங்கிப் படிக்க வைத்தார் அப்பா.

மணக்குடி பள்ளியில் இரண்டாவதோ மூன்றாவதோ படித்த என்னை, ஒரு வார இறுதியில், கமர்கட்டும் இலந்தை செங்காயும் தின்ன வைத்து நடத்தியே புவனகிரி வரை கூட்டிப் போனார் அக்காவைப் பார்ப்பதற்காக அம்மா.

ஊரிலேருந்து தம்பி வந்திருக்கான் என்று மகிழ்ந்த அக்காவுக்கு கூடுதல் மகிழ்ச்சி தர விஆர்கே டாக்கீஸுக்கு கூட்டிப் போனார் பாலு சித்தப்பா. தரை டிக்கெட் எனப்படும் மணல் கொட்டிய தரையில் அமர்ந்து அன்று நாங்கள் பார்த்த படம் ‘குரு’.

கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் வண்ணமாய் திரையில் வந்து ‘ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன் வண்டுகள்’ என்று பாடிய போது வாய் பிளந்து ‘ஈ’ ஆட இருந்திருப்பேன் என்பது என் இன்றைய ஊகம்.

ஹெலிகாப்டரில் வந்து ‘பறந்தாலும் விட மாட்டேன்’ என்று பாடிய படி மூக்கை முன்னிறுத்தி தொங்கு மீசை விலக சிரித்து கமல் வரும் காட்சியில் சொக்கிப் போனேன். தங்கமீன் திருடும் கமலெல்லாம் வாழ்வின் முதல் த்ரில்லர். ‘பெயரைச் சொல்லவா’ என்று ஸ்ரீதேவி பாட ‘தங்க மாங்கனி என் தர்ம தேவதை’ என்று பதிலுக்கு பாடிய கமலை நான் வாழ்வின் நாயகனாகவே வரித்தேன் அந்நிமிடங்களில்.

மூக்கை சுறுக்கி வாயை ‘ஆஏ’ என்றவாறு அடிக்கடி கமல் செய்யும் மேனரிசங்கள் அன்றிரவு கனவில் அடிக்கடி அடிக்கடி வந்து தூக்கத்தில் சிரித்திருப்பேன்.

கமல்ஹாசனை நான் முதன் முதலில் கண்டது ‘குரு’ திரைப்படத்தில்தான். அந்த தலைமுடியும், மூக்கை முன்னிறுத்தி உடலை நகர்த்தும் அந்த நடனங்களும் அவ்வயதில் எனக்கு புதியனவாய் ஈர்த்தன.

ஏழாம் வகுப்பு படித்த போது, எதற்கோ புவனகிரி வந்த என்னை,ஓம் சக்தி மன்றத்தின் அடுத்த வீட்டில் அமர்ந்து காத்திருக்கச் செய்து, அதற்குப் பிறகு ஓர் இன்ப அதிர்ச்சி தந்தார் முத்தையன் சித்தப்பா. ரங்கராஜா தியேட்டரில் இரவுக்காட்சி. வாயெல்லாம் பல்லாக, வயிறு வரை சிரிப்பு விரிய முதல் முறையாக ‘சேர் டிக்கெட்’டில் அமர்ந்தேன்.

திரையில்
‘தந்தனத் தந்தன தந்தன தந்தன தந்த்த்தா…’ என்று கங்கை அமரன் பாடத் தொடங்க பெயர்கள் மின்ன என் முதுகெலும்பு சிலிர்த்து நிமிர்ந்த்து. ‘அம்மன் கோயில் கிழக்காலே, அன்ன வயல் மேற்காலே நம்ம ஊரு நடுவாலே நிக்குது அடியேய்’ என்று பாடல் ஒலித்த போது நான் சொர்க்த்தில் இருந்தேன்.

இரண்டாவதாக நான் கமலை பார்த்தது அன்று ‘சகலகலா வல்லவன்’ படத்தில். ‘வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு குடுமியோடு ‘கட்டவண்டி கட்ட வண்டி’ பாடலில் ஒரு ரகம், ‘கயித்துக் கட்டில்’ வசனத்தின் ஒரு ரகம், டிஸ்கோ கட்டிங் குறுந்தாடியோடு பைக்கில் வந்து ‘எவ்ரி படி ஹேப்பீ நியூ இயர்!’ சொல்லி அம்பிகாவை மெய் மறக்கச் செய்யும் போது ஒரு ரகம், சிலுக்கு வீட்டில் ‘துபாய் ஷேக்’காக வரும் போது ஒரு ரகம், ‘ஆமா… கெடுத்தவனுக்கே என் தங்கச்சிய கட்டிக்குடுக்கனும்னுதான் இத்தனை வேஷம்!’ என்று திரை விலக்கும் போது ஒரு ரகம் என வெளுத்துக் கட்டிய கமல்ஹாசன் என்னை அசத்தி வசீகரம் செய்து கொண்டார்.

வளர வளர நாயக பிம்பங்களை விட்டு வெறுமனே ரசிக்கத் தொடங்கி விட்டேன்.

சிதம்பரம் வடுகநாதனில் ‘உன்னால் முடியும் தம்பி’, மயிலாடுதுறை பியர்லெஸ்ஸில் ‘சூர சம்ஹாரம்’, விஜயாவில் ‘சாணக்யன்’, திருவண்ணாமலை விபிசியில் ‘அபூர்வ சகோதரர்கள்’ பார்த்த போதெல்லாம் நான் வளர்ந்துவிட்டேன். கல்லூரிப் பருவத்தில் ‘ராஜாதிராஜா’ ‘கொடி பறக்குது’ ‘மாப்பிள்ளை’ ‘பணக்காரன்’ ‘தர்மதுரை’ என படங்களோடு ரஜினியையும் ரசிக்கத் தொடங்கிவிட்டேன்.

கமலஹாசனும் கமல்ஹாசனாக மாறி நானும் வளர்ந்து விட்டேன்.

கமலின் சோதனை முயற்சிகள் சாதனை மாற்றங்கள் எல்லாம் என் கண் முன்னே கண்டு வளர்ந்தேன். தெனாலி படமெல்லாம் என்னை கிறங்க அடித்தன. குறிப்பாய் ‘வடிவான எண்ட அம்மா’ ‘அழாமல் பேச வேண்டும் என்ட்று சொல்லி விட்டீர்கள்’ என்று அவர் பேசும் அந்த தொலைக்காட்சி நேர்காணல் காட்சி. அடித்து துவைத்து ‘தளுக்’கென்று கண்களில் நீர் முட்ட வைத்து விடுவார் மனிதர்.

வசூல் ராஜாவில் அவர் கைகளிலேயே அந்த நோயாளி சாகும் போது, ‘மவனே…்மவனே… உங்க அம்மா வந்து கேப்பாங்களே!’ எனும் காட்சியில் நம்மை கலங்கடித்து விடுவார்.

‘எப்படியிருந்தாலும் கமல்,ரஜினி படம் பாத்துருவோம்!’ என்று்சொல்பவர்கள் வரிசையில் நானும் இருந்திருக்கிறேன்

திரையில் ரஜினியை எவ்வளவு பிடிக்குமோ அதை விட இரு சதவீதம் குறைவாக நடிகர் கமலையும் திரையில் பிடிக்குமெனக்கு. குறிப்பாய் ‘ராஜ்கமல் இண்டர்நேஷனல்’லில் வந்த படங்களின் கமலை.

‘நினைவோ ஒரு பறவை’ ‘மறக்க மனம் கூடுதில்லையே…’ ‘கண்மணி அன்போட காதலன் நான்… நான்’ ‘உன்ன விட இந்த உலகத்துல உசந்தது’ ‘ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா’ ‘உன் தோல் உறிப்பவன்டா தமிழச்சி பால் குடிச்சவன்டா’ ‘போட்டு வைத்தக் காதல் திட்டம் ஓக்கே கண்மணி’ ‘அழுதா மனசு தாங்காதே… அழுதா..’ ‘எதிர்காத்துல எச்சி முழியாதே!’ என குரலில் பரிமாணம் காட்டிய பாடகர் கமலை பிடிக்குமெனக்கு.

அரசியல் கமலை பிடிக்கவில்லை எனக்கு.

இன்று வெளியான மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் அந்தப் படத்தின் டீசர் பிடித்திருக்கிறது எனக்கு.

கமல் தொடர்ந்து நடிக்கட்டும்.

(அவருக்கே சொல்லிடுவோமே!)

கமல் ஐயா!

நடியுங்கள்,
திரையில் இன்னும் நடியுங்கள்! தொடர்ந்து நடியுங்கள்.
உடல் நலனை பார்த்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து நடியுங்கள்!

பிறந்த நாள் வாழ்த்துகள் கமல் சார்!

கமலஹாசனுக்கு நான் நன்றிக் கடன் பட்டவன். சித்தப்பா வாங்கி வந்த குமுதம், கல்கண்டு இதழ்களை வெறுமனே படங்கள் பார்க்க புரட்டிய என்னை பக்கங்களை முதன்முதலில் படிக்க வைத்தது வாராவாரம் வந்த கமலின் வண்ணப்படங்களே. குமுதத்தில் வந்த ‘விக்ரம்’ திரைக்கதையை வாராவாரம் வாசித்ததாலேயே ‘விக்ரம்’ கதையோடு அதை எழுதிய சுஜாதா என்னுள் நுழைந்தார். அந்தப் புள்ளி இன்னும் கோலமாக விரிந்து கொண்டேயிருக்கிறது.

– பரமன் பச்சைமுத்து
07.11.2023

#HbdKamal #KamalHaasan #Paraman #கமல்ஹாசன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *