ஃபெரேரோ ரோச்சர்

‘ஃபெரேரோ ரோச்சர்’ சாக்லேட் பிடிக்குமா உங்களுக்கு?

மதிப்பிற்குரிய சுகி சிவம் அவர்கள் ஒரு நாள் நம்மை அழைத்து, தான் நடத்தும் இணைய தள பயிலரங்கு ஒன்றில் நாம் உரையாற்ற வேண்டுமென்று கேட்டு நம்மை வியப்பிலாழ்த்தினார். பல பேச்சாளர்கள் பங்கேற்ற அந்தப் பயிலரங்கில் ‘உறவுகள்’ பற்றியதாக நிகழ்ந்தது நம் மலர்ச்சி உரை. மிக மரியாதையாக நடத்தினார், எவ்வளவு மறுத்தும் சன்மானம் அனுப்பினார்.

சில வாரங்களுக்குப் பிறகு தெரியாத எண்ணிலிருந்து வந்த ஓர் அழைப்பை எடுத்தால், ‘நான் அமெரிக்காவிலிருந்து. அந்த நிகழ்ச்சியில் உங்கள் வகுப்பு அட்டெண்ட் பண்ணேன். நிறைய சிந்திக்க வச்சீங்க. தேடிப்புடிச்சி உங்கள ரீச் பண்ணேன்!’ என்றார் ஒருவர்.

அன்று தொடங்கி, கட்செவியஞ்சலில் விசாரிப்புகள்,
காணொளி அழைப்புகள் என தொடர்ந்தது இன்று மலர்ச்சி அகத்தில் சந்திப்பை நிகழ்த்தியுள்ளது. சில முக்கியப் பணிகளுக்காக இந்தியா வந்த வெங்கட்ராமன் கிருஷ்ணசாமி நம்மை சந்தித்து மகிழ்ந்து மகிழ்வித்து, நமது நூல்களை அள்ளிக் கொண்டு சென்றார்.

‘இவ்ளோ புக்ஸ், உங்களுக்கு ஃபைளைட் லக்கேஜ்ஜை கூட்டிடுமே!’

‘அதெல்லாம் நான் பாத்துக்கறேன். இதெல்லாம் வேணும் பரமன் சார்!’

…..

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ரைட் சாய்ஸ்ஸில் நாவல் நொட்வொர்க் இஞ்சினியராக இருந்த வேளையில் ‘குமுதம்’ இதழில் சுஜாதா வெளிநாட்டு சாக்லேட் என்று ‘ஃபெரேரோ ரோச்சர்’ பற்றி எழுதி எதிர்பார்ப்பை கிளப்பினார். அறைத் தோழன் வரகூர் பாலசந்தர், ‘டெய்லி ஒரு ஃபெரேரோ ரோச்சர்’ சாப்ட்டா உடம்பு கிண்ணுண்ணு இருக்கும்!’ என்பார். அந்த சாக்லேட் ஒரு கனவாக இருந்தது அப்போது.

இன்று அமெரிக்காவிலிருந்து வந்த வெங்கட்ராமன் கிருஷ்ணசாமி ஒரு பெட்டி நிறைய ‘ஃபெரேரோ ரோச்சர்’ஐ தந்து விட்டு போகிறார்.

இன்று சாப்பிடும் எண்ணமே இல்லை!

– பரமன் பச்சைமுத்து
30.01.2024
சென்னை

#FerreroRocher #Malarchi #Paraman #பரமன் #பரமன்பச்சைமுத்து #ParamanPachaimuthu #MalarchiSession

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *