ராமலிங்கம் பிள்ளை உடல் விட்டார்

இறந்தவரின் ஆன்மா வேறு தற்காலிக உடல் தரப்பட்டு எம பட்டினத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு 12 நிமிடங்களில் திரும்பவும் சடலம் இருக்கும் இறப்பு வீட்டிலேயே கொண்டு வந்து விடப்படுவதாக சைவ சமயக் குறிப்புகள் சொல்வதை எண்ணிய படியே குயப்பேட்டை கந்தசாமி கோவில் தெருவில் அக்கா வீட்டு வாசலில், நேற்றிரவு உடலை விட்டு அமரராகிப் போன ராமலிங்கம் பிள்ளையை அசை போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறேன்.

ரயிலில் மட்டுமே பயணிக்கும், ரயிலில்லாத ஊர்களுக்கும் அருகாமை ரயில் நிலையம் வரை ரயிலில் வந்து விட்டு அங்கிருந்து பேருந்தில் பயணிக்கும் வழக்கம் உடையவர் ராமலிங்கம் தாத்தா. ரயில்வே ஊழியராக இருக்கும் போது ‘எஸ்ஆர்எம்யூ’வின் தீவிர செயல்பாட்டாளர். தனது பணிக்காலத்திலேயே மூத்த மகனை ரயில்வேயில் நுழைத்து விட்டவர். மேல்சட்டை பையில் ‘எஸ்ஆர்எம்யூ’ என்று எழுதப்பட்ட ஒரு தோலாலான கவசப்பையொன்றை வைத்திருப்பார். நெடுநாட்களுக்கு அதையொரு அடையாளமாகவே வைத்திருந்தார்.

சிதம்பரம் ரயில்வேஷ்டேஷனிலிருந்து காந்திசிலை பேருந்து நிறுத்தம் நோக்கி நடப்பதற்குள் இரண்டு கடைகளில் நின்று இரண்டு லிம்கா பாட்டில்களை காலி செய்து விடுவார். அந்தக் காரமும், வாயையும் தொண்டையையும் வலிக்கச்செய்யுமளவிற்கான குளிரும் கொண்ட அந்த குளிர் பானமெல்லாம் புதிது எனக்கு அப்போது.

‘நான் தான் ஒண்ணாம் நம்பர் தாத்தா. அந்த தாத்தா அப்புறம்தான்!’ என்று பேரர்களிடம் சொல்லிக்கொள்வார்.

‘ஒரு வாழைக்காய் பத்து ரூவா. எட்டு வாழைக்கா எவ்வளவு?’ என்று சிறுபிள்ளைகளிடம் கணக்கு விளையாட்டு போடுவார்.

பெரிய திமுக அனுதாபி. ‘கலைஞர்தான் எங்களுக்கெல்லாம் தமிழ் கத்துகுடுத்தார்!’ என்று திரும்பத் திரும்ப உளறி என்னிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார் அக்காலங்களில்.

குயப்பேட்டை கந்தசாமி கோவில் தெருவிலிருந்த தன் வீட்டின் வாயிற்படியருகிலிருந்த வெளிச்சுவரில் கலைஞர் படம் வரைவதற்கு அனுமதி தந்தார் கட்சியினருக்கு. குண்டு வெடித்து ராஜீவ் காந்தி சிதறி இறந்த போது, தமிழகம் முழுக்க திமுக மீது கோபம் எழுந்தது, குயப்பேட்டையில் கலைஞர் படம் வரையப்பட்ட இவரது வீடு தாக்கப்பட்டது. கும்பலாக வந்த காங்கிரஸ் தொண்டர்கள் கத்தி கூச்சலிட்டு கதவை அடித்து உடைத்தனர். மேல் மாடியிலிருந்து ”தோழரே… நான் என்னப்பா பண்ணினேன்! உடைக்காதீங்கப்பா!’ என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்த ராமலிங்கம் பிள்ளையின் அருகில் நான் நின்று கொண்டிருந்தேன்.

கடைசி சில ஆண்டுகளில் அல்சைமரால் அடுத்தவர்களை அதிர வைத்தார் ‘சிவா எப்ப வந்த?’ என்று கேட்டு நம்மிடம் பதிலை வாங்கியது நினைவில்லாமல் அடுத்த சில நிமிடங்களில் அதையே திரும்பவும் கேட்பார் ‘சிவா, எப்ப வந்த?’ என்று.

பேரன், பேத்திகளை கொள்ளுப் பேரன்களை பார்த்து விட்ட ராமலிங்கம் பிள்ளை 89 வயதின் இறுதியில், ஓரிரவு நெஞ்சு வலி வந்து ரயில்வே மருத்துவமனையில் வெண்ட்டிலேட்டரில் சுவாசம் பெற்று அடுத்த நாள் இரவு 09.30க்கு உடலை விட்டு புறப்பட்டுவிட்டார் சிவ லோகப் பயணத்திற்கு. உடல் கண்ணாடி குளிர் பெட்டியில்.

உறவினர்களும், நண்பர்களும் வந்து போகின்றனர்.

பம்பை, உடுக்கை அடித்து சிவபுராணத்தை கிட்டத்தட்ட காத்தவராயன் கதை பாடுவதைப் போல வேறொரு தளகதியில் பாடிக்கொண்டிருக்கிறார்கள் ஒரு குழுவினர்.

நான் வியந்தது கண்டு,
‘சென்னையில் இருக்கும் பண்டாரங்க அவங்க! எல்லா வேலையையும் அவங்களே பண்ணிடுவாங்க! தேவாரம், திருவாசகம் பாடிடுவாங்க!’ என்றார் சித்தப்பா.

வீட்டு வாசலில் கொம்பு வாத்தியங்களை வாசித்து அலற விட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்களது குழுவின் சிலர்.

89 ஆவது வயதில் மாசி புனர்பூசத்தில் உடல் விட்டுப் புறப்பட்ட ராமலிங்கம் பிள்ளை, இப்போது இங்குதான் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருப்பார் அவர் உடலுக்கு மரியாதை செய்வோரை, அவர் பற்றி பேசுவோரை, அவர் பற்றி பதிவெழுதும் என்னை.

– பரமன் பச்சைமுத்து
குயப்பேட்டை,
21.02.2024

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *