ஒவ்வொருவரும் ஒவ்வோர் உலகத்தில்…

ஒரே உலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வோர் உலகத்தில் வாழ்கிறோம். அருகருகே இருந்தாலும் அவரவர் வாழ்க்கை வேறாகவே இருக்கிறது.

எவர் பற்றியும் பிரஞ்ஞையில்லாமல் தூரத்தில் எதையோ வெறித்தபடி சிமெண்ட் இருக்கையில் அமர்ந்திருந்த இந்த மனிதர் நம்மை ஈர்த்தார், மலர்ச்சி வகுப்பெடுக்க திருவண்ணாமலை வந்தடைந்ததும் தேநீருக்காக இறங்கிய போது.

‘டீ குடிக்கறீங்களா?’

‘இப்பத்தான் குடிச்சேங்க! வேண்டாம்!’

‘சாப்பாடு இப்ப தருவாங்க இல்ல!’

‘ஆமாங்க. வரும். தருவாங்க!’

‘வேற எதாவது குடுக்கட்டுமா? பணம்?’

‘பணம் வேண்டாங்க. சாப்பாடுதான் கிடைக்குதே!’

தேனி பெரியகுளத்திலிருந்து திடீரென்று ஒரு நாள் எதுவும் வேண்டாம் என்று உதறிவிட்டு திருவண்ணாமலைக்கு வந்து விட்டார் 50ஐ நெருங்கும் இந்த மனிதர். திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் தையல்காரராக இருந்த பழைய வாழ்க்கை முற்றிலும் வேறாகிவிட்டது இவருக்கு.

‘வழக்கமா இங்கதான் டீ குடிப்பேன். உங்களை பார்த்ததில்லையே!’

‘காசில இருந்தேன். இப்ப திரும்பி வந்துட்டேன். எங்க போனாலும் இதுதான் ஈர்க்குது. வந்துட்டேன்!’

எங்கோ உறங்குகிறார், காலையில் எழுந்து குளித்து மலையை சுற்றி வலம் வருகிறார். உணவை யாசித்து உண்கிறார். மாலை ஒரு முறை மலையை வலம் வருகிறார் (மொத்தமாய் 28 கிமீ. தோரயமாய் 40,000 ஸ்டெப்ஸ்?!). உறங்கி விடுகிறார். காலில் செருப்பு இல்லை.

மார்பில் கயிற்றில் கோர்த்த உத்திராட்சம், சிறு உத்திராட்சங்களால் ஆன மாலைகள் என மூன்று மாலைகள், நெற்றி நிறைய வெண்ணீறு, கையில் ஒரு காப்பும், வண்ணமாய் கயிறுமாதிரி ஒன்று, செருப்பணியா கால்கள் என்ற கோலத்தில் இருக்கிறார் முனிராஜ். அந்தப் பெயரில் எவரும் அவரை அழைப்பதுமில்லை, அவருக்கு அந்த அடையாளமுமில்லை.

யாருக்காக காத்திருக்கிறார்? உணவுக்காகவா? பொழுது கழிவதற்கா? அல்லது உள்ளே ஏதும் உரையாடலா?

‘பணம்தான் வேண்டாம்னு சொல்றீங்க. டீயும் குடிச்சிட்டீங்க. பிஸ்கெட் பாக்கெட் இருக்கு, தரவா?’

‘ம்ம்’

‘உங்க பை எல்லாம் எங்க?’

‘எதுவும் கெடையாது’

‘குளிச்சி உடை மாத்த? தூங்க?’

‘இதே உடைதான். குளிச்சிட்டு போட்டுப்பேன். தொவைச்சி போட்டுப்பேன். இதே துண்டைதான் போர்த்திப்பேன் தூங்கும் போது’

‘வேற வச்சிக்கலியா?’

‘அதெல்லாம் வச்சிக்கறதுக்கா இங்க இந்த வாழ்க்கைக்கு வந்தோம். அது பேரு துறவு இல்லியே! பசிச்சா சோறு கேட்பேன்!’

மாலை மலர்ச்சி வகுப்பிருக்கிறது. நான் புறப்படுகிறேன். அவர் அதே இடத்தில்.

(முதல் பத்தியை திரும்பவும் தருகிறேன்)

ஒரே உலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வோர் உலகத்தில் வாழ்கிறோம். அருகருகே இருந்தாலும் அவரவர் வாழ்க்கை வேறாகவே இருக்கிறது.

– பரமன் பச்சைமுத்து
திருவண்ணாமலை
08.02.2024

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *