பில்டிங் டாக்டர் ஆதன் யோகி போன்றோர் தொடர்ந்து என்னிடம் கேட்கும் கேள்வி, ‘மாஸ்டர்! இப்பல்லாம் சினிமா ரிவ்யூ எழுதறது இல்லையே? அதைப் படிக்கவே நாங்கள்லாம் காத்துட்டு இருப்போம் மாஸ்டர்!’
அவர்களிடம் சொல்லாத பதிலும் உண்மையும் இதுதான். திரைப்படங்களை முழுமையாக விட்டுவிடவில்லை என்றாலும் எனக்கு திரைப்பட வேட்கை குறைந்து விட்டது, படங்கள் பார்ப்பதும் குறைந்து விட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்க்கிறேன்.
இதைத் தொடர்வதற்கு முன் ஒரு சங்கதியைக் குறிப்பிட வேண்டியுள்ளது. அதை நடுவில் செருகிவிட்டு, விட்ட இடத்திலிருந்து தொடர்வோம்.
……
ஒரு மாதம் முன்பு சென்னை மாநகரின் பெரிய அரசு சித்த மருத்துவர் அழைத்திருந்தார்.
‘பரமன் சார்! மெய்யழகன் படம் பாத்துட்டீங்களா? உங்களுக்கு ரொம்ப பிடிக்கும், பாருங்க! படம் முழுக்க உங்க ஞாபகம்தான் சார் வருது!’
….
நேற்று நெட்ஃப்ளிக்ஸில் ‘மெய்யழகன்’ பார்த்தேன்.
பதின்பருவத்தில் நிகழ்ந்த ஒரு விரும்பத்தகாத பேரிழப்பால் சொந்த ஊருக்கு வருவதையே தவிர்த்த ஒருவன் 22 ஆண்டுகளுக்குப்பிறகு வேண்டா வெறுப்பாக ‘வந்து தொலைக்க வேண்டியுள்ளது!’ என்று கடமைக்காக ‘வேலை முடிந்த அடுத்த நொடி புறப்பட்டுவிட வேண்டும்!’ என்ற மனநிலையோடு வர, அங்கே அவனுக்காக காத்திருந்து அவனை அன்பினில் குளிப்பாட்டி மகிழும் ஒருவனின் அன்பு வழியும் உயிர்நிலையை எதிர்கொள்ளமுடியாமல் திக்கித் திணறி தெறிக்க தப்பித்து ஓடி… ‘வந்து தொலைக்க வேண்டியுள்ளது’ என்று வர மறுத்து ஓடிய ஊருக்கே அவனுக்காக திரும்பவும் வருகிறான் என்னும் கவிதையான புனைவு ‘மெய்யழகன்’.
தொடக்கத்தில் தஞ்சை கோவிலை வயல்களை கடந்து போகும் ரயிலை காட்டிய விதத்திலேயே புரிந்து விட்டது இது வேறு மாதிரி கதை சொல்லும் படம் என்று. பேருந்தில் நடத்துநனரின் உணர்ச்சி வெளிப்பாட்டு விதம், கொய்யாக் கூடை பாட்டி, ‘உன்னையே கல்யாணம் பண்ணிருக்கலாம்’ என்னும் முறைப்பெண் என வரும் அடுத்தடுத்த பாத்திரங்கள் நம் எண்ணத்தை மெய்ப்பிக்கின்றன. அதற்குப் பிறகு படம் நம்மை எடுத்துக் கொள்கிறது.
பல இடங்களில் கதை மாந்தர்களின் வெளிப்பாடுகளில், காட்சியமைப்பில், கதை சொலலில், ஒளி அமைப்பில் என அசத்தி விட்டார் இயக்குநர். தஞ்சாவூர் சோழ தேசம் என்பதில் அருள்மொழி, சிவ பாத சேகரன் வரை ஆழமாக ஊறி பாய்ந்திருக்கிறார்.
படம் நெடுக என் வாழ்வில் வந்த எனக்காக உருகி உருகி தங்களைத் தந்த உதவிகள் செய்த பல மனிதர்களின் நினைவுகள் எனக்கு வந்து கொண்டேயிருந்தன.
ஆனால்… ‘பரமன் சார்! படம் முழுக்க உங்க ஞாபகம்தான் வருது!’ – அந்த பெரும் மருத்துவருக்கு இந்தப் படம் பார்க்கும் போது என் ஞாபகம் வந்தது எதற்காகவோ?
– பரமன் பச்சைமுத்து
03.11.2024
#Meiyazhagan #MeiyazhaganReview #ParamanReview #மெய்யழகன் #ParamanPachaimuthu #பரமன்பச்சைமுத்து #ParamanLifeCoach #பரமன் #lifecoach