‘இறுதிச் சுற்று’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

stills - Copy

stills

சாதனை எதுவென்பது வாழ்வின் நிலையைப் பொறுத்து மாறிவிடுகிறது. விளையாட்டு வீரனாய் இருக்கும்போது அவனது சொந்த வெற்றி சாதனை. ஆசிரியனாய், பயிற்சியாளனாய் மாறும்போது, மாணவனின் வெற்றியே சாதனை! முந்தைய நிலையில் அரசியல் காரணங்களால் விட்ட வெற்றியை பிந்தைய நிலையில் பிடிக்க முயற்சிக்கும், உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை திமிர் தெனாவெட்டு கொண்ட, அதைவிட அதிகமாய் குத்துச் சண்டை விளையாட்டு மீது காதல் கொண்ட ஒரு பயிற்சியாளரின் கதை!

‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் வரும் ‘எழுத்தாளர் இந்த்ரா’ என்ற ‘திருசெல்வம்’ என்னும் மணிரத்னத்தின் திமிர் கொண்ட கதாபாத்திரம் நினைவில் இருக்கிறதா? அந்த திமிரே பத்து சதவீதம்தான், இன்னும் ஒரு தொண்ணூறு சதவீதம் திமிர் கூட சேர்த்து கிண்டினால் எப்படி இருக்கும், திமிர் கொப்பளிக்குமே, அப்படியொரு பாத்திரம் மாதவனுக்கு. ‘இந்த ரூவா நோட்டை சுருட்டி உன் பின்னாடி உன் ‘அதில’ சொருகிட்டு போ!’ என்று மாதவன் திமிரையும் தூக்கியடிக்கும் மதி பாத்திரம் ரித்திகா சிங்கிற்கு (யூ ட்யூபில் ரித்திகா சிங் – அயா சயீத் சபீர் உடன் போடும் நிஜ குத்துச்சண்டை ஏற்கனவே ஹிட்).

உண்மையில் மாதவனுக்கு இரட்டை வடிவம் கொண்ட ஒரு கதாபாத்திரம். எதையும் தூக்கி எறிந்துவிடும் குணம் கொண்டவன் – தூக்கி எரிந்தாலும், அவமானப் படுத்தினாலும் அடங்கி ‘பயிற்சிக்கு வா’ என்பவன், பெண்கள் என்றாலே வாய் ஊறும் சபலம் கொண்டவன் – வலிய வந்து ‘லவ் யு’ சொன்னாலும் ‘வேலையைப் பாரு!’ என்று சொல்லி விலகிப் போபவன், நிஜத்தில் பெண் மோகம், குத்துச் சண்டை பயிற்சி என்று வந்து விட்டால் அது என் தவம் என கலவைகொண்ட ஒரு பாத்திரத்தில் பட்டையை கிளப்பியிருக்கிறார் மாதவன்.

மீன் பாடி வண்டியில் அறிமுகமாகவாதில் தொடங்கி, மீன் காரியாக, ஐநூரு ரூபாய்க்காக பயிற்சிக்கு வருவதில் தொடங்கி, ‘அக்காவுக்காக’ என இறங்கி செயல்பட, விளையாட்டுத் தனமாக எதையும் செய்ய, ‘அப்போ இதுக்கு பேரு என்னா மாஸ்டர்?’ ‘உனக்கு என்னா வேணும் மாஸ்டர்?’ என்று உண்மையாய் இறங்கும் காட்சியில், ‘தேவ்’வை தீர்த்துவிட்டு ஓடி வந்து அலேக்காக மாதவன் மீது அமருமிடம் என எல்லா இடங்களிலும் ‘மதி’யாக ரித்திகா சிங் கிழித்திருக்கிறார்.  Ritika Singh, Madhavan in Irudhi Suttru Tamil Movie Stills

மணிரத்ன பாணியில் சில வசனங்களில் (‘ஒலிம்பிக்ஸ், மனைவி’ – ‘இன்னைலேருந்து சாமிக்கன்னு இல்ல, சாமுவேல்’) ஃப்ளாஷ் பேக்கை கடத்தி வேகமாய் நகர்வது, ‘இந்தியா முழுக்க பயணித்தாலும், நம் வசதிக்காக பாத்திரங்கள் தமிழில் பேசுவது போலவே காட்டியிருக்கிறோம்’ என்று டைட்டில் போட்டது, சென்னை உள்ளே வரும்போதே சூப்பர் ஸ்டாரை காட்டி அப்புறம் தனுஷை காட்டி வைப்பது, பாக்ஸரை நாயகியாகப் போடவேண்டும் – சிவப்பாக இருப்பதால் இங்கே ஒத்துக்கொள்ளமாட்டர்கள் – அதனால் சில வரிகளில் மார்வாடி – சாமிக்கன்னு முடிச்சுபோட்டு தொடர்வது, க்ளைமாக்சை இப்படித்தான் முடிக்கவேண்டும் என்று முடித்தது என பல இடங்களில் இயக்குனர் மிளிர்கிறார் (மணிரத்னம் பட்டறையிலிருந்து வெளிவந்தவர்).

‘ஐ ஆம் xxxxxx..’ என்று ராதரவி அறிமுகப் படுத்திக் கொள்ளும் விதம், ‘நம்ம குண்டியே நாறுது. இதுல அடுத்தவனுக்கு எங்க கழுவறது’ன்னு சொன்னே…இப்போ?’ என்று சொல்லிவிட்டு ‘யோவ்! நீ நல்லவன்யா!’ என்று நாசர் ஏர்போர்டில் சொல்லுடமிடம், மீனவக் குடும்பம் ‘டீச்சரை’யும் ‘கோச்’சையும் கலந்து ‘கோச்சர்’ என்று அழைக்கும் விதம் என படம் முழுக்க வசனம் விலாசுகிறது.

முதல் முறையாக குனிந்து மாஸ்டரின் காலைத் தொட்டுப் புறப்படும்போது தியேட்டரில் சிலர் கை தட்டுகிறார்கள்.

‘வா மச்சானே!’ தர லோக்கல். சந்தோஷ் நாராயணன்!

ஒரு பெண் இயக்குனர் இந்தியா முழுக்க அலைந்து திரிந்து ஆராய்ச்சி செய்து, இவ்வளவு மெனக்கெட்டு ஒரு ஆக்ஷன் படம் தந்திருப்பது, அதுவும் இப்படி ஒரு விறுவிறு படமாகத் தந்திருப்பது பாராட்டப்படவேண்டியது. நல்ல படம். இந்த மாதிரி படங்கள் வெற்றி பெற வேண்டும்!

வி-டாக்கீஸ் வெர்டிக்ட் : ‘இறுதிச்சுற்று’ – ‘ஆசிரியருக்கு மரியாதை’  நிச்சயம் பார்க்கலாம்.

திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *