அறுபத்து மூவர் இன்று…

‘தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்,
திருநீலகண்ட குயவனார்க்கு அடியேன்…’ என்று பதிகத்தில் பதிவு பெற்ற சிவனடி நிழல் பெற்ற நாயன்மாறர்களுக்கென்றே நடக்கும் பெரு உற்சவம் இன்று இங்கே.  மயிலைத் தெருக்களில் தொடங்கி மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம் என் வீடு வரை சாலையோரத்தில் மோர் விநியோகிக்கிறார்கள், நீர் தருகிறார்கள், உணவு சமைக்கிறார்கள்.  எந்த அரசியல் அல்லது அமைப்பின் பெயரையும் போடாது வெறுமே ‘நண்பர்கள்’ என்று பெயர் போட்டு மோர் விநியோகித்த ஒரு குழுவை பார்க்கவே மகிழ்வாயிருந்தது.

பரமனையே பாடுவார், பத்தராய் பணிவார், விறன்மிண்டர், திருநீலகண்ட குயவனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருநாவுக்கரசர், ஞானசம்மந்தர், சுந்தரர், பூசலார், சாக்கியர் என அறுபத்து மூவரும் உலா வரும் நாள். 

சிறுவயதில் கேட்டு படித்தறிந்த சேக்கீழார் புராணம் விரிகிறது. சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் குளம் மனதில் வருகிறது. சீர்காழி குளம் அங்கே கிடந்த புளியஞ்சிம்பு, அதால்  பிள்ளையையடித்த தந்தை, பாலொழுகும் வாயால் ‘ஏடுடைய மலராண் முனை நாண் பணித்து ஏத்த அருள் செய்த’ என்று காரணம் சொல்லி தமிழ்ப்பால் தந்த குழந்தை, திருவெண்ணெய்நல்லூர் கோவில், தூது செல்ல தாமரைப் பாதங்கள் நடந்து சென்ற திருவாரூர் வீதி, திருவொற்றியூர் மகிழ மரத்தடி என என்னென்னவோ ஓடுகிறது உள்ளே.

இன்ப நூல் படித்து அழிய இருந்த சோழ மன்னனுக்கும், அவனை வழிபடுத்த புராணம் தந்த தெய்வப்புலவருக்கும், அதை தமிழுலகத்திற்கு அவர்கள் அறியும் விதத்தில் தந்த கிருபாணந்த வாரியாருக்கும், இவற்றையெல்லாம் அறியும் சூழல் தந்த என் தந்தை மற்றும் குடும்பத்தாருக்கும் பெரும் நன்றி!

அறுபத்து மூவர் உற்சவம் இன்று.
சைவம் அறிந்த, சிவனை வணங்கும், தேவார-திருமுறைகள் அறிந்த எவரும் காண விரும்பும் ஒன்று.  என் மகள்களும், மனைவியும் கண்டு மகிழ, நான் என் வகுப்பிற்கு புறப்படுகிறேன்.

இதுதானே நம் பிரார்த்தனை!

-பரமன் பச்சைமுத்து
21.03.2016

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *