மயிலை தேர்…

‘ஏங்க எடம் இல்லீங்க… வழியில்லீங்க. இப்படி போக முடியாது’
‘ஏனு… எல்லி ஹோகி…ஹலோ… மர்த் பிடு’
‘ஏம்மா நின்னு போனாதான் என்னம்மா’

நெஞ்சு, முதுகு, அடி வயிறு என மொத்த உடம்பையும் எல்லா பக்கங்களிலிருந்தும் எல்லாரும் அழுத்திக் கொண்டேயிருக்க, எல்லாப் பக்கமும் சப்தம், நகரமுடியாது, நினைத்த பக்கமும் போகமுடியாது, கும்பலோடு சேர்ந்து நீங்கள் கடத்தி நகரத்தப் படுவீர்கள் – என்றிருந்தால் எப்படி இருக்கும். 

கழுத்துக்குக்கீழே அழுத்த அழுத்த தாங்கும் பொறுமை, கழுத்துக்கு மேலே நிமிர்ந்த தலை தேரை நோக்கி, வாயில் இறைவன் நாமம். இந்த கூட்டத்தை ஊடறுத்து எப்படியாவது முன்னே போய் உள்ளிருக்கும் இறைவனை ஒரேயொரு முறை பார்க்க வேண்டும் என்று இடையறாது துடிக்கும் மனம் – இப்படியொரு அனுபவம் எனக்கு இன்று.

துவக்கத்தில் எங்கள் ஊர் பொன்னியம்மன் உற்சவமாக தெரிந்தது. கபாலியின் தேர் நோக்கி வர வர மக்கள் வெள்ளம் அடித்து ஆட்கொண்டு  நடுவில் இழுத்துப் போனது

ஆயிரக்கணக்கான மக்களின் கூட்டத்தில் பிதுங்கி (என்னை தள்ளியவர்கள் பிதுங்கினார்கள்), சில வயதான மூதாட்டிகளை கைபிடித்து புறத்தே கொண்டு சேர்த்து, கூட்டத்தில் கரைந்து என்னை மறந்து இறை நாமம் சொல்வது பிடித்திருந்தது எனக்கு.

இவ்வளவு வேகத்தில் தேர் நகரும், இவ்வளவு நேரம் நிற்கும், இவ்வளவு உயரத் தேரை இவ்வளவு தூரத்திலிருந்துதான்  பார்க்க முடியும், அப்படியானால் இப்படி ஊடறுத்துப் போக வேண்டும் என்று புகுந்து புறப்பட்ட முயற்சியைத் தாண்டி,
‘அவனை’ தரிசிக்க அவனருள் வேண்டுமே!  அது இருந்தது.  

நெரிசலில் புகுந்து, அழுத்தப்பட்டு, கடந்து, பயணித்து, ஓரிடம் சேர்ந்து தூரத்திலிருந்து உயரமான பெரிய தேரின் உள்ளே இருப்பவனை கண்கள் கண்டபோது ஒரு உணர்வு வந்ததே, அதற்காக எதையும் செய்யலாம். மனதில் வந்த நண்பர்கள், மீணவர்களுக்கெல்லாம் பிரார்த்தனை செய்தோமே, அந்த உணர்வுக்காக எதையும் செய்யலாம்.

‘வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்….’ – தேவாரம்

(திரும்பிப் போக முடியவில்லை. பைக் எடுத்து வந்தேன். வண்டி எங்கோ இருக்கிறது. லஸ்ஸில் காஃபி அருந்துகிறேன் இப்போது.)

– பரமன் பச்சைமுத்து
20.03.2016

.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *